கதைகேளு... கதைகேளு...

சாதனைப் பெண்களுக்குள் பல வகையான பெண்கள் இருக்கிறார்கள்.
கதைகேளு... கதைகேளு...


சாதனைப் பெண்களுக்குள் பல வகையான பெண்கள் இருக்கிறார்கள். தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு முன்னேறுவது ஒருவிதம் என்றால் தன்னுடைய ஆர்வத்தால் சமூகத்தையும் சேர்த்தே முன்னேற்றப்பாதைக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவர்கள் இன்னொரு விதம். ரம்யா வாசுதேவன் அந்த வகையைச் சேர்ந்தவர்.  தன்னுடைய வாசிப்பு அனுபவத்தை  சமூகத்திற்கானதாக மடைமாற்றம் செய்திருக்கிறார். அன்றாடம் பெரும் எழுத்தாளர்கள் தொடங்கி உலக சிறுகதைகள் வரை தான் படித்ததை "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று இணையத்தில் வழங்குகிறார். சிறுவர்களுக்குக் கதைகள் மூலம் அற சிந்தனைகளைத் தூண்டுகிறார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தான் உழைத்த உழைப்பை ஒலி நூல்களாக பொது நூலகத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கியிருக்கிறார். அவரின் ஆர்வத்தை மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

அப்பா வங்கி மேலாளர்.  அப்பா வேலை காரணமாக பல ஊர்களுக்கும் மாற்றலாகி சென்று கொண்டிருந்தோம். 

படிப்பில் சுமார் தான் ஆனாலும் கதை புத்தகங்கள் குறிப்பாக படக் கதைகள் படிப்பது பிடிக்கும். சிறுவயதிலிருந்தே எந்த இடத்திலும் நாம் கவனிக்கப்பட வேண்டும் என்ற நினைப்பும் அதற்கான செயல்பாடுகளும் இயல்பாகவே இருக்கும். திருமணமான பிறகும் என் மாமியார் எனக்கு அம்மாவைப் போலவே துணையாக இருக்கிறார்கள். என்னுடைய மேற்படிப்பு வேலை எல்லாவற்றிலும் என் முயற்சிகளுக்கு உற்சாகம் தருகிறார்கள். என் மகன் மகள் இருவரும் என் முயற்சிகளை வரவேற்கிறார்கள். நிறைய கற்றுக் கொடுக்கிறார்கள்.

சிறுவயது நினைவுகள்...

நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த பொழுது கல்கத்தாவில் இருந்தோம். அப்பொழுது பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில் சென்று வருவேன். என் நண்பர்களோடு பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த புத்தகக் கடைகளுக்குச் சென்று ஆசையாக புத்தகங்களை பார்ப்பேன். அதிலே ஒரு புத்தகம் "யயாதி கதை' எனக்கு வாங்க வேண்டும் என்று ஆசை. விலை ஐந்து ரூபாய். பணத்திற்கு எங்கே போவது? நண்பர்களிடம் நாம் சேர்ந்து இந்தப் புத்தகத்தை வாங்கலாமா என்று கேட்டேன். ஒரே ஒருவர் மட்டும் ஒப்புக்கொண்டார். பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு நடந்தே சென்றால் ஒரு ரூபாய் ஐம்பது பைசா சேமிக்கலாம் என்றும் அதைக் கொண்டு புத்தகம் வாங்கலாம் என்றும் முடிவு செய்து கொண்டு நடந்தே வீடு போய் சேர்ந்தோம்.இருட்டி விட்டது. நேரமானதால் அம்மாவுக்கு பயம். ரொம்பவும் கடிந்து கொண்டார்கள். அடி கூட வாங்கினேன். உண்மை தெரிந்ததும் அம்மாவே அந்தப் புத்தகத்தை வாங்கி கொடுத்தார்கள். 

அது போல இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். அந்த நாளில், நம்மிடம் இருக்கும் புத்தகத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் அவர்கள் தன்னுடைய புத்தகத்தை நமக்குப் படிக்கத் தருவார்கள். அப்படி நிறைய படித்திருக்கிறேன். ஒருமுறை சித்தப்பா சொல்பேச்சுக் கேட்டு நடந்தால் எது கேட்டாலும் வாங்கித் தருவதாகச் சொன்னார்கள்.

அப்படியே  அவர் சொன்ன வேலைகளையெல்லாம் ஒழுங்காக செய்து முடித்துவிட்டு புத்தகம் வாங்கித் தரச் சொல்லிக் கேட்டேன். கடைக்கு அழைத்துப் போய் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொள் என்று விட்டுவிட்டார்கள். பத்து புத்தகங்கள் வாங்கி கொண்டேன். மனம் நிறைய சந்தோஷத்தோடு இந்தப் புத்தகங்களை நான் படித்துவிட்டு என் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் அவர்கள் தங்கள் புத்தகங்களை எனக்குத் தந்து நட்பு பாராட்டுவார்கள். இந்தப் பத்து புத்தகங்களை வைத்துக் கொண்டு நூறு புத்தகங்களாவது படித்துவிடலாம் என்ற ஆனந்தத்தோடு வீடு திரும்பினேன்.

உங்கள் தொழில் பற்றி...

படித்தது அறிவியல். பத்து ஆண்டுகளாக பெரு நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்தேன். தற்போது என் மகள் வளர்கிறாள் பள்ளியில் படிக்கும் அவள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் அத்தனையும் வேதி பொருட்கள் நிறைந்ததாகவே இருப்பதை பார்க்கும் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டது. நம் குழந்தை போலத் தானே எல்லா வீட்டுக் குழந்தைகளும் ரசாயனப் பொருள்கள் நிரம்பிய அழகு சாதனங்களைப் பயன்படுத்துவார்கள்? குறை மட்டும் சொல்லி என்ன ஆகப் போகிறது? எனக்கு என் பாட்டி வீட்டில் செய்து தந்த எண்ணெய் குளியல் பொடி போல அதே பாரம்பரிய முறையில் செய்து நாமே சந்தைப் படுத்தினால் என்ன என்று தோன்றியது. தற்பொழுது, பதினாறு வகை சருமம் மற்றும் கேசப் பராமரிப்புப் பொருட்களை தயார் செய்து விற்பனையும் செய்து வருகிறேன்.    

இணையத்தில் எப்படி கதை சொல்ல வந்தீர்கள்?

தற்செயலாக கட்செவி அஞ்சலில் என் நண்பர்கள் குழுவில் ஏதாவது ஆக்கப்பூர்வமாகப் பேசலாமே என்று உரையாடினோம். அப்பொழுது ஏற்பட்ட எண்ணம் தான் தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளைப் பேசலாம் விவாதிக்கலாம் என்பது. முதலில் ஒரு கதை சொன்னேன். நண்பர்கள் விரும்பிக் கேட்டார்கள். பலரும் பாராட்டியதோடு தினமும் கதை சொல்லச் சொல்லி கேட்டார்கள். அப்படி ஆரம்பித்தது தான் கதை சொல்லல். என் கதைகளைக் கேட்ட பலரும் தங்களையும் குழுவில் சேர்க்கச் சொல்லிக் கேட்டார்கள். ஒரு குழுவுக்கான எண்ணிக்கை நிறைவடைந்தவுடன் மற்றொரு புதிய குழுவையும் தொடங்கினோம். அதிலும் நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்தார்கள். அன்றாடம் இத்தனை பேர் நாம் சொல்லும் கதைகளைக் கேட்கிறார்கள் என்ற உற்சாகத்தில் நானும் கதை சொல்கிறேன். வருடக்கணக்கில் இதுவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

குழந்தைகளுக்கான கதைசொல்லியானது எப்படி?

தரமான தேர்ந்தெடுத்த எழுத்தாளர்களின் கதைகளை சொல்லிக் கொண்டிருந்ததில் ஆர்வம் காட்டிய பெரியவர்கள் சிலர் எங்கள் குழந்தைகளும் கூட உங்கள் கதைகளைக் கேட்கிறார்கள். அவர்களுக்கும் புரியும்படியான அவர்களுக்கான கதைகளையும் சொல்லுங்களேன் என்று கேட்டார்கள். குழந்தைகளை சென்றடைய முடிவது நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி என்றே எனக்கும் தோன்றியது. அதனால் குழந்தைகளுக்காக கட்செவியஞ்சலில் புதிய குழு ஒன்றைத் தொடங்கினேன். அதற்கு, என்று பெயர் வைத்தேன். பஞ்சதந்திர கதைகள் போல இலக்கியக் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

பெரிய புராணம், ஸ்ரீ பக்தவிஜயம் போன்ற பக்திக் கதைகளை குழந்தைகள் புரிந்து கொள்ளும் அளவுக்கு எளிமையாக தருகிறேன். ஆண்டாள் கதை ஸ்ரீரங்கம் கோயில் வரலாறு அந்த தெய்வத்தைக் காக்க அடியவர்கள் மேற்கொண்ட அபாயங்கள் பற்றிய கதைகளைச் சொல்கிறேன். இதிலே குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்ந்து, தேசத்து தியாகிகள் வீரர்கள் பற்றிய கதைகளைச் சொல்வதற்கான தயாரிப்பில் 
இருக்கிறேன். 

பொது நூலகங்களுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

அன்றாடம் என்னுடைய கதைகளை கோவையில் கற்பகம் என்றொரு நூலகரும், கார்த்திகேயன் என்றொரு சேலத்து நூலகரும் விரும்பிக் கேட்பார்கள். அவர்கள் வழியாகவே தமிழகத்தின் நூலகங்களுக்குள் வரும் வாய்ப்பைப் பெற்றேன். சென்னையில் அண்ணா நூலகத்தில் இளங்கோ சந்திரகுமார் அவர்கள் என் கதைகளைக் கேட்டு நூலகத்தில் ஒலி நூல்கள் வரிசையில் வைக்கலாம் என்று ஒப்புக் கொண்டார்கள். நானும் சமூகத்திற்கு நம்முடைய பங்களிப்பாக இருக்கட்டுமே என்று நான் சொன்ன ஏறத்தாழ 800 கதைகள் கொடுத்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதை நான் வாழ்வின் நல் அனுபவமாக பார்க்கிறேன். யாருக்கோ நம்முடைய முயற்சி பயனுள்ளதாக இருக்குமானால் அதை விட சந்தோசம் என்ன இருக்கிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com