தலைமைக்கும் ஒரு பயிற்சி!

123  உலகநாடுகளை உள்ளடக்கிய ஜெ.சி.ஐ என்ற  சுய வளர்ச்சி மேம்பாட்டு  அமைப்பின்  தமிழகத்தின் இரண்டாவது பெண் பிரெசிடெண்ட்டாக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,
தலைமைக்கும் ஒரு பயிற்சி!

123 உலகநாடுகளை உள்ளடக்கிய ஜெ.சி.ஐ என்ற சுய வளர்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தமிழகத்தின் இரண்டாவது பெண் பிரெசிடெண்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அனிதா முரளி. 20 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஒரு பெண்மணி இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"எனக்கு சென்னைதான் பூர்வீகம். ஒரு மிடிஸ் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள் நான். வணிகவியல் முடித்திருக்கிறேன். 2005-இல் திருமணத்திற்கு பிறகுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. திருமணத்திற்கு பிறகு கணவரது சொந்த ஊரான ராணிபேட்டையில் செட்டிலானேன். இல்லத்தரசியாக இருந்த நான். வீட்டிலிருந்தபடியே ஏதாவது செய்யலாமே என்று நினைத்தபோது, கணவரது நண்பர் மூலம் எக்சைட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முகவர்களுக்கு டீம் லீடராக பணியில் சேர்ந்தேன்.

இந்நிலையில், 2013-இல் டீம் லீடர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களது திறமையை வளர்த்துக் கொள்ளவும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு சென்ற போதுதான், ஜெ.சி.ஐ பற்றி தெரிந்து கொண்டேன்.

ஜெ.சி.ஐ என்பது சுய வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ( செல்ஃப் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷன்). ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிக் கொணரும் பயிற்சி நிறுவனம். இது உலகளவில் 123 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிற அமைப்பு. அதில், 13-18 வயது, 18-40, 40- 50 வயது உள்ளவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதில் அந்தந்த வயதில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு அவர்களது திறமையை வளர்த்துக் கொள்ளும் திறன், பேச்சாற்றலை மேம்படுத்துதல், தன்னம்பிக்கையை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு பியிற்சி வழங்கி வருகிறார்கள்.

மேலும், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை போன்ற இடங்களில் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி உதவியுடன் ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்து கொடுப்பது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சீரோ ஹங்கர் என்ற புரொஜக்ட்டின் மூலம் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் உணவை உட்கொள்ள அவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் வழியைக் கற்றுக் கொடுப்பது. க்ளைமேட் ஆக்ஷன் என்ற அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு செய்து தருதல், ஏழை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவது போன்றவற்றையும் செய்து வருகிறார்கள்.

சுயதொழிலில் இருப்பவர்கள், இந்த நிறுவனம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளை முறையாக பெற்றுவிட்டால் அவர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சுலபமாக கையாளும் திறன்பெற்றுவிடுவார்கள். அந்தளவுக்கு நேர்த்தியான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதற்கு உதாரணம் நானே, வீட்டைவிட்டு தனியாக வெளியே வர தயங்கிய நான் இன்று தனியாக எங்கும் பயணம் செல்லவும், ஒரு கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்தி அவர்கள் முன்னிலையில் தைரியமாக எனது கருத்துகளை முன் வைத்து பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்.

அந்த மீட்டிங் என் வாழ்க்கை பாதையையே மாற்றிவிட்டது எனலாம். எப்படியென்றால், அந்த மீட்டிங்கிற்கு பிறகு நான் ஜெ.சி.ஐ-இல் இணைந்து படிப்படியாக வளர்ந்து, தற்போது 7 மாவட்டத்திலுள்ள சுமார் 1800 பேருக்கு நான் தலைமை ஏற்று, மண்டலத்தலைவராக ஆகி இருக்கிறேன் என்றால் அங்கே பெற்ற பயிற்சிதான் காரணம்.

இந்த அமைப்பின் முக்கியப் பணியே தலைவர்களை உருவாக்குவதுதான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், புதுச்சேரி எம்.பி. செல்வகணபதி, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், கோஃபிஅண்ணன் போன்றோர் இந்த அமைப்பின் மூலம் உருவானவர்கள்தான்.

இந்தியாவில் மொத்தம் 25 மண்டலங்கள் இருக்கின்றன. அதில், தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, திருவண்ணாமலை, ஓசூர் முதல் புதுச்சேரி வரை úஸான் 16 -இல் வருகிறது. அதற்குதான் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன்.

இதற்கு முன்பு, 2002-இல் ஜெ.சி. பத்மா என்பவர் தமிழகத்தின் பிரெசிடெண்ட்டாக இருந்தார். 20 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழகத்தின் இரண்டாவது பெண் பிரெசிடெண்ட் ஆகியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது இந்தத் தருணம்.

இதற்கு எங்கள் குழுவிற்கும், குழு தலைவர் இ.மணிவண்ணன் அவர்களுக்கும்தான் நன்றி சொல்லனும். பொதுவாக, ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். ஆனால் என்னுடைய வெற்றிக்கு பின்னால் என் கணவர்தான் இருக்கிறார். அவர் அளிக்கும் உற்சாகமே என்னை இயங்கச் செய்கிறது ' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com