கண்ணீரால்  வந்த கோபம்!

உலக  நாடுகளில்  இன்று பரவலாகப் பேசப்படும் விஷயம்   வில் ஸ்மித் -ஜடா- கிறிஸ் ராக் விவகாரம்தான்..!
கண்ணீரால்  வந்த கோபம்!

உலக நாடுகளில் இன்று பரவலாகப் பேசப்படும் விஷயம் வில் ஸ்மித் -ஜடா- கிறிஸ் ராக் விவகாரம்தான்..!

ஆஸ்கர் விழா மேடையில் தன்னை கிறிஸ் ராக் கேலி செய்ததற்காக மனம் உடைந்து போன ஜெடா பிங்கட், தனக்காக கணவர்வில் ஸ்மித், கிரிஸ் ராக்கிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது குறித்து கருத்துதெரிவிதுள்ளார்:

""கேலியை அத்தனை சுலபமாக கணவர் வில் ஸ்மித்தால் கடந்துவர இயலவில்லை. அதற்கு காரணம் நான் அனுபவித்த அவமானங்கள் தான்.

நான் அலோபேசியா என்னும் மரபியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். தொடக்கத்தில் வட்டவட்டமாக தலையில் சொட்டை விழ ஆரம்பித்து.. தொடர்ந்து கொத்துக் கொத்தாக தலைமுடிகள் கழன்று கொண்டன. ஒருகட்டத்தில், தலைமுடி கொட்டிவிடுமோ என்று குளிப்பதற்குக் கூட பயந்தேன். எப்போதாவது ஷவரில் குளிக்க நேர்ந்தால், வழியும் தண்ணீருடன் சேர்ந்து உடல் முழுவதும் முடியாக இருக்கும். அப்போது பயத்தில் அலறியிருக்கிறேன்.

ஏன் இந்த ஒவ்வாமை...? எனக்கு புற்றுநோய் இருக்கிறதா? சர்க்கரை ஒவ்வாமை உள்ளதா ... அல்லது வேறு ஏதாவது வித்தியாசமான நோயா...? என பயந்து மருத்துவ பரிசோதனைகள் செய்தேன். பல லட்சம் செலவானதுதான் மிச்சம். எனது கருப்பு இனத்திற்கே உரிய கருஞ்சுருட்டை முடியுடன் நான் பிறக்கவில்லை. இயற்கையாகவே எனக்கு ஆசிய பெண்களை போல நீளமான சுருள் இல்லாத தலைமுடி இருந்தது. எனது தலைமுடியின் அழகுக்காகவே என் கணவர் வில் ஸ்மித் என்னை காதலித்து திருமணம் செய்தார்.

என் அழகிற்கு காரணமாக அமைந்த எனது தலை முடியே எனக்கு எதிரியாக மாறியதை நினைத்து நான் வேதனையை அடைந்தேன். அதைவிட விசுவரூப பயம் என்னைப் பிடித்து ஆட்டியது. எனது தலைமுடி உதிர்வதை காரணம் காட்டி வில் என்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என பீதி கொண்டேன். ஆனால் வில் அப்படி செய்யவில்லை... கடவுளுக்கு நன்றி!

""வெள்ளையர் இனத்தில் அதிக விவாகரத்துகள் நடக்கின்றன. அதனால், என்னைக் காதலிக்கும் அமெரிக்க வெண் சிவப்பு அழகிகளை ஒதுக்கிவிட்டு, என் இனத்திலேயே ஒரு வாழ்நாள் இணையை தேடிக் கொள்ள வேண்டும் என்று உன்னைத் திருமணம் செய்து கொண்டேன்'' என்று வில் ஸ்மித் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

"திருமணம் என்பது பின்னாளில் குறைபாடுகளை சுட்டிக்காட்டி பிரிந்து கொள்வதற்காக நடத்தப்படுவதல்ல, மாறாக ஆயுள்வரை இணைந்திருந்து சிறந்த தலைமுறையை உருவாக்குவது தான் என்பது வில் ஸ்மித்தின் நம்பிக்கை. அதை ஸ்மித்தின் பெருந்தன்மை என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிகளைக் குவிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு பொருத்தமான ஜோடியாக என்னை வைத்துக் கொள்ள பெரும் பிரயத்தனங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன்.

முடி கொட்டத் தொடங்கியபோது எனது முடியின் நீளத்தைக் குறைத்து குட்டையாக்கினேன். முடி மேலும் கொட்டத் தொடங்கியபோது ஆண்களைப் போன்று சிறிதாக வெட்டிக் கொண்டேன், ஆனாலும் பலனில்லை.

எனக்கு வந்த நோய் எனது தலைமுடியைக் குறி வைத்து துரத்தியது. என் தலையை வழுக்கை ஆக்கிவிட்டுத்தான் அந்த நோய் ஓய்ந்தது. காண்பிக்காத மருத்துவர்கள் இல்லை. இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை... சிகிச்சை செய்தாலும் பயனளிக்காது. உங்களது மயிர்கால்கள் மூடத் தொடங்கிவிட்டன. தலைமுடி மாத்திரமல்ல... உங்களது உடலில் எங்கெங்கு முடிகள் உள்ளதோ எல்லாம் உதிர்ந்து போகும். பிறகு முளைக்கவே முளைக்காது' என்று கூறிவிட்டனர்.

ஒரு பெண்ணுக்கு இதைவிட கொடுமை உண்டா... விஷம் குடித்து இறந்துவிடலாமா என்று கூட நினைத்தேன். என் மகன் ஜேடனின் முகமும் மகள் வில்லோவின் முகமும் மனதில் வந்து போக, அந்த முயற்சியை கைவிட்டேன். இப்படியான நெருக்கடியான சமயத்தில் என் தாய் உயிருடன் இருந்திருந்தால் என் தலையில் கிரீடத்தை சூட்டி "நீ தானே என் இளவரசி' என்றிருப்பார். அதை நினைத்துக்கொண்டு தலையில் தலைப்பாகை கட்டும் பழக்கத்தை ஏற்றுக் கொண்டேன்.

"இதற்கு முன் நீங்கள் தலைப்பாகை கட்டுவதில்லையே... இப்போது எதற்காக இந்த தலைப்பாக்கட்டு' என்று தெரிந்தவர்கள் துளைத்தெடுத்தார்கள். எனது தலைமுடி பிரச்னை நிறைய பேட்டிகளில் பேசு பொருளானது. போகும் இடமெல்லாம் நான் ஒவ்வொரு நபருக்கும் இதுபற்றிய விளக்கத்தை கொடுக்க வேண்டியதாகியிருந்தது. அவரவருக்கு ஏற்படும் பிரச்னைகளை குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசுவதையும் கேள்வியெழுப்புவதையும் கேலி, எள்ளல் செய்வதையும் இந்த மனித சமூகம் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. எனவே இவர்களுக்கு பதில் கொடுத்து மனதளவில் பலவீனப்பட நான் விரும்பவில்லை.

"இனி எனக்கு இந்த மொட்டைத்தலை தான்' என உலகிற்கு காட்ட தலைப்பாகையை கழற்றிவிட்டேன். நமக்கானது என்று விதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பிறருக்கு சொல்ல நம்மை தயார் செய்து கொள்ளவேண்டும். அதைச் சொல்லவே இனி மொட்டைத் தலையுடன் வெளியுலகில் வர முடிவெடுத்தேன்.

ஆஸ்கர் மேடையில் தோழர் கிரிஸ் ராக் என்னை கேலி செய்தபோது கூட , வில் அதனை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார். ஆனால் வலிகளை சுமந்த எனது கண்களில் கண்ணீரைந்க் கண்டவுடனே அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். தன்னை இழந்துவிட்டார் " என்கிறார் கனத்த இதயத்துடன் ஜெடா.

கிரிஸ் ராக்கை தாக்கியதற்காக ஏப்ரல் 18 அன்று வில் ஸ்மித் மீது அகாதெமி அவார்ட்ஸ் குழு விசாரணை கமிஷன் போட்டுள்ளது. ராக்கை அறைந்தவுடன் வில் வெளியேறும்படி பலமுறை அறிவிப்பு கொடுத்த பின்னரும் தொடர்ந்து விழாவில் இருந்து ஆஸ்கரை பெற்றது அவார்டு வழங்கும் குழுவிற்கு எரிச்சலை கொடுத்துள்ளது. வில் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆஸ்கர் குழு திட்டமிட்டுள்ளது. பிறரது குறையை சுட்டிக்காட்டி பலபேர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமானப்படுத்திய கிரிஸ் ராக் மீது எந்தவித நடவடிக்கையும் கண்டனமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com