உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 13: அணுகுமுறையால் அகிலம் திறக்கலாம்!

உமா புதிதாக மணமானவள். ஜானகி அம்மாளின் ஒரே பிள்ளையை மணந்து கொண்டிருக்கிறாள். ஜானகியம்மா என்றவுடன் ரொம்ப வயதானவர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். வயது ஐம்பது கூட இருக்காது.
உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 13: அணுகுமுறையால் அகிலம் திறக்கலாம்!


உமா புதிதாக மணமானவள். ஜானகி அம்மாளின் ஒரே பிள்ளையை மணந்து கொண்டிருக்கிறாள். ஜானகியம்மா என்றவுடன் ரொம்ப வயதானவர் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். வயது ஐம்பது கூட இருக்காது.

டுத்தரக்குடும்பத்தின் தாய். உமா இப்போது தான் படித்து முடித்திருக்கிறாள். இருபது இருபத்தியிரண்டு வயது தான் இருக்கும். ஜானகியம்மா இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முகம் நிறைய சிரிப்பு செயலில் நிதானம் இது தான் அவருடைய அடையாளம். 

புதுமணப் பெண்ணான உமா சில நேரங்களில் பகலில் அசந்து தூங்கிவிடுவாள். அந்த நேரத்தில் யாரும் அழைப்பு மணி அடித்து அவளின் தூக்கம் கெட்டுவிடக் கூடாதே என்று கதவை லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு கூடத்தில் செய்தித்தாள் அல்லது ஏதேனும் பத்திரிகையைப் படித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கேலி கூட செய்வதுண்டு. "மருமகள் தூங்க மாமியார் காவல் காக்கிறீர்களே மருமகள் என்றால் அவ்வளவு கரிசனமா? அல்லது பயமா?" இதற்கு பதிலும் புன்னகை மாறாமல் வரும் ஜானகியம்மாளிடம் இருந்து. "என் பிள்ளை மேல் உள்ள பாசம் தான் மருமகளிடமும். என் பிள்ளை சந்தோஷமாய் இருக்க வேண்டுமென்றால் அது என் மருமகள் எவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள் என்பதைப் பொறுத்துத் தானே இருக்கிறது." வாயடைத்துப் போவார்கள் அக்கம்பக்கத்தினர்.

உமா ஒரு நாவல் பைத்தியம். புத்தகத்தை எடுத்தால் முடிக்காமல் வைக்கமாட்டாள். அதிலும் பாலகுமாரன் நாவல் என்றால் யாரால் தான் புத்தகத்தைக் கீழே வைக்கமுடியும்? ஒருநாள், ஜானகியம்மா வெளியில் போயிருந்த நேரம். உமா-காபி போடலாமே என்று அடுப்பில் பாலை வைத்தாள். அவள் படித்துக் கொண்டிருந்த பாலகுமாரன் நாவலை கையில் ஏந்திக் கொண்டே தன்னுடைய அறையில் ஏசி போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். அடுப்பில் பால் வைத்தது மறந்து போயிற்று. புத்தகத்துக்குள் முழுகிப் போனாள். நேரமாக ஆக பால் தீய்ந்து பாத்திரம் கருகத் தொடங்கியது. அவள் நாவலை விட்டு வெளியே வரவில்லை. குடியிருப்பில் அனைவருக்கும் யார் வீட்டிலோ பால் பாத்திரம் கருகுகிறது என்று தெரியும் அளவுக்குத் தீய்ந்து போகும் வாசனை வருகிறது. 

ஜானகியம்மா வெளியே போயிருந்தவர் வீடு வந்து சேர்ந்தார். வீடு புகையும் கரியும் நாற்றமுமாய் இருந்தது. மடமடவென அடுப்படிக்கு ஓடி அடுப்பை அணைத்துவிட்டு கரிந்து கனலாகி நின்ற பாத்திரத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் தள்ளி அப்படியே பால்கனியில் கொண்டு வைத்தார். வெளியில் வந்த உமாவுக்கு நிலைமை புரிந்தது. தன் மீதான தவறும் தெரிந்தது. உமாவுக்கு ஒரு படபடப்பு. 

நல்லபடியாக இருந்த உறவை நம்முடைய கவனக்குறைவால் கெடுத்துக் கொண்டுவிட்டோமோ? மாமியார் கோபப்பட்டால் அதற்குக் காரணம் என்னுடைய அஜாக்கிரதை தான். ஏறத்தாழ பாதிக்கும் மேல் சிலிண்டர் காலியாகி இருக்கக்கூடும் இந்த எண்ணங்களோடு உடனே தான் செய்ய வேண்டியது தன்னுடைய தவறுக்கு வருத்தம் தெரிவிப்பது தான் என்ற முடிவுக்கு வந்தாள். "சாரி அத்தை" பணிவோடு சொன்னாள். 

ஜானகியம்மா முகத்தில் எந்த சலனமும் இல்லை. "உமா, இனிமேல் புத்தகம் படிக்க விரும்பினால் அந்த நேரத்தில் அடுப்பில் எதுவும் வைக்காதே, படித்து முடித்த பிறகு வேலையைப் பார்த்துக் கொள். ஒரு பிரச்னையும் வராது" அதற்கு மேல் ஒரு சொல்லும் இல்லை. எப்போதும் போல வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டார். இந்த சம்பவம் உமாவுக்கு மாமியார் மீது அதிகப்படியான மரியாதையையும் அந்தப் பக்குவத்தைத் தானும் கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தியது. 

ஜானகியம்மா அக்கறையோடு நடந்து கொண்டார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. நம்மில் பலர் இப்படியொரு சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொண்டிருப்போம்? சிந்தித்துப் பாருங்கள். முதலில் பதட்டம் வரும் "குய்யோமுறையோனு' கத்துவோம். மருமகளின் பொறுப்பின்மையைச் சாடுவோம். குற்றம் நிகழ்ந்து விட்டதைப் போல கோபப்படுவோம். கேஸ் வீணாகி விட்டதே என்று புலம்புவோம். நல்ல பாத்திரம் பயன்படுத்த முடியாத அளவுக்குக் கெட்டுப் போய்விட்டதைச் சொல்லி அங்கலாய்ப்போம். வீட்டில் அன்றைக்கெல்லாம் இதையே பேச்சாக பேசிக் கொண்டிருப்போம். 

இந்தக் கோபம் ஆத்திரம் கூட அக்கறையால் பொறுப்பால் வருவது தான் என்றாலும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? கோபப்பட்டவுடன் மருமகளும் நிதானத்தை இழந்து கோபப்படக் கூடும். தெரியாத்தனமாக நடந்து விட்ட சிறிய விஷயத்தைப் பெரிதுபடுத்தி வீட்டில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துகிறார் என்று மருமகளுக்கு மாமியார் மீது வெறுப்பு தோன்றலாம். தவறும் செய்துவிட்டு மரியாதை இல்லாமல் மல்லுக்கு நிற்கிறாள் என்று மருமகள் மீது மாமியாருக்கு ஆத்திரமும் அதிருப்தியும் தோன்றலாம். உறவில் விரிசல் ஏற்படுவது வரை நீளலாம். 

நமக்கு இருப்பது அக்கறை. மீண்டும் இத்தகைய தவறு நடந்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வு எனும் பட்சத்தில் ஜானகியம்மா போல அமைதியாக மருமகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதே நேரத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தையும் சொல்லிவிட்டால் சொன்னவருக்கும் மரியாதை கூடும். கேட்பவருக்கும் இனி நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்படும். 

சிறிய விஷயங்கள் தான் பெரிய மாற்றங்களுக்குக் காரணம்" என்று ஒரு பழமொழி உண்டு. பதட்டம் சிறிய விஷயம் அதன் விளைவுகள் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும் அளவுக்கு வலிமையானவை. பதட்டத்தில் பல வகைகள் உண்டு. சூழ்நிலைக்கு ஏற்ப அந்த நேரத்தில் தோன்றும் பதட்டம். இது தற்காலிகமானது. சில நேரங்களில் அதையே நிரந்தரமானதாக நாமே செய்து கொள்கிறோம் மேலே குறிப்பிட்டதைப் போல. ஜானகியம்மா போல நல்ல மனமுதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் அணுகும் பொழுது உறவு பலப்படுவதோடு சூழலும் ஆரோக்கியமாகிறது.

உமா நிலையில் இருந்தும் நாம் இதை அணுகலாம். தவறு நிகழ்ந்து விட்டது. காரணம் நம்முடைய கவனக் குறைவு. புரிந்த விநாடியில் தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்துப் பணிந்து போய்விட்டாள். அப்படி இல்லாமல் "உலகத்தில் இல்லாத பெரிய குற்றம் என்ன நடந்துவிட்டது' என்பது போல அவள் நடந்து கொண்டாலும் மனக்கசப்பு ஏற்பட்டுவிடும். அவளும் பதட்டப்படாமல் புரிதலோடு சிக்கலை அணுகும் பொழுது எல்லாம் சுமுகமாகி விடுகிறது.

இந்த சம்பவத்தைப் பற்றி ஒருமுறை என்னுடைய அலுவலகத்தில் சொல்லிவிட்டேன். உடனே, "இப்போது ஜானகியம்மாவும் உமாவும் எப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்டாள் என்னுடைய தோழி பிருந்தா. 

"சந்தேகமென்ன? இருவரும் நண்பர்கள் போல இன்றைக்கும் மகிழ்ச்சியாக ஊர் சுற்றுகிறார்கள். இருவரும் சேர்ந்து வீட்டிலேயே ஆன்லைன் முறையில் உணவகம் நடத்துகிறார்கள். ஜானகியம்மா கைமணம் ஊருக்கே நல்ல சாப்பாடு தருகிறது. மருமகள் படித்த மேலாண்மைப் படிப்பு உணவக நிர்வாகத்தைத் திறம்பட நிர்வகித்து வளர்க்கிறது. வீடு வியாபாரம் இரண்டும் செம்மையாய் இருக்கிறது." சொன்னேன்.

பிருந்தாவுக்கு ஆச்சரியம், "எனக்கு  ஹாஸ்டலில் இருந்து கொண்டு  அலுவலகம் வந்து போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது. எப்படித் தான் வீட்டையும் பார்த்துக் கொண்டு வியாபாரத்தையும் பெண்கள் பார்க்கிறார்களோ?" பிருந்தா சென்ற ஆண்டுதான் படிப்பை முடித்துவிட்டுப் பணிக்கு வந்திருக்கிறாள். 

நிறையப் பெண்களுக்கு இந்தக் கேள்வி இருக்கிறது. பதட்டம் எப்போது வருகிறது? நாம் எதையாவது தவறாகச் செய்துவிட்டால் அல்லது செய்ய வேண்டிய வேலையைச் சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் இருந்து விட்டால் பதட்டம் தொற்றிக்கொள்கிறது. இதற்கெல்லாம் மூல காரணம் திட்டமிடாமை என்று சொல்லலாம்.

உமா ஜானகியம்மா இருவரின் அணுகுமுறையில் தனிப்பட்ட முறையில் பதட்டம் தவிர்க்கப்படுவதையும் அதன் விளைவுகளையும் பார்த்தோம். வேலை, வியாபாரம் திருமணம் போன்ற பெரிய விசேஷங்கள் இவற்றில் பதட்டத்தைத் தவிர்ப்பதற்கு சரியான திட்டமிடல் கைகொடுக்கும். ஜானகியம்மா நிர்வாக விஷயங்களில் தலையிட மாட்டார். சமையல் விஷயங்களில் உமா தலையிட மாட்டாள். அவரவர் வேலை அவரவர்க்கு. மேலும், இன்ன வேலையை இப்படிச் செய்யப்போகிறோம், இன்ன நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று ஜானகியம்மாவும் உமாவும் அன்றாடம் இரவில் உறங்கச் செல்லும் முன் அடுத்த நாளுக்கான வேலைகளுக்குத் திட்டமிட்டுக் கொள்கிறார்கள். அதன்படி அன்றாடம் வேலை ஒரு குழப்பமும் இல்லாமல் நடக்கிறது.

இப்படிப் பட்ட மாமியாரையும் மருமகளையும் பார்த்தே தீருவேன் என்று பிருந்தா முடிவாகச் சொல்லி விட்டு ஒருநாள் என்னோடு வந்தாள். நாங்கள் அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அடித்தோம். எப்போதும் போல புன்னகை பூசிய முகத்தோடு ஜானகியம்மா எங்களை வரவேற்றார்கள். உமா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிறாள். முடிந்ததும் வெளியில் வருவாள் என்று சொல்லிவிட்டு மணக்க மணக்க காபி கொடுத்தார். காபியோடு கதை பேசத் தொடங்கினோம். சற்று நேரத்தில் உமா வந்தாள்.

சென்ற மாதம் மகன் மருமகள் இரண்டு பேரக்குழந்தைகளோடு சிங்கப்பூர் மலேஷியா, கம்போடியா சுற்றுலா முடித்து வந்தோம் என்று ஜானகியம்மா கம்போடியாவின் அங்கோர்வாட் பற்றி விவரிக்கத் தொடங்கினார். அகல விரிந்த கண்களோடு பிருந்தா கதை கேட்டுக் கொண்டிருந்தாள். ஜானகியம்மாவிடம் இருந்து உமா கற்றுக் கொண்டிருந்ததை இனி பிருந்தாவிடமும் பார்க்க முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பெண்களின் அணுகுமுறையில் இருக்கும் சின்னஞ்சிறு நுட்பங்கள் உலகின் வாசலை அவர்களுக்குத் திறந்து விட்டிருக்கின்றன. விமானப் பயணத்தின் அனுபவத்தை விவரிக்கும் உமாவின் முன்னால் வானம் விரிந்து கிடக்கிறது. நமக்கும் இத்தகைய அணுகுமுறை கைவந்துவிட்டால் இதோ "வானம் தொட்டுவிடும் தூரம்' தான். தொடர்ந்து பயணிப்போம்.

தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com