குறைந்து வருகிறதா.. பெண்களின் சரிவிகித உணவுமுறை!

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியநிலை என்பது அந்தக் குடும்பத்தை வழிநடத்தும் பெண்ணின் ஆரோக்கியத்தை வைத்தே இருக்கிறது.
குறைந்து வருகிறதா.. பெண்களின் சரிவிகித உணவுமுறை!

ஒரு குடும்பத்தின் ஆரோக்கியநிலை என்பது அந்தக் குடும்பத்தை வழிநடத்தும் பெண்ணின் ஆரோக்கியத்தை வைத்தே இருக்கிறது. ஆனாலும், சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உணவுப் பொருட்களை வீணாக்குவது, ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் நோய்க்குள்ளாவது, முறையான உணவுப்பழக்கமின்றி தொற்றா நோய்களில் சிக்கி ஆரோக்கியம் குன்றிய நிலையில் வாழ்நாள்களைக் கடத்திக்கொண்டிருப்பது போன்ற நிலைகளில் பெண்களே முதலிடத்தில் இருக்கிறார்கள்.

பெண்களின் உணவுப்பழக்கம் என்பது அவர்களது கல்விநிலை, கணவரது கல்வி மற்றும் பணி, அவர்களின் சராசரியான வாழ்க்கைத் தரம் போன்றவற்றையும் பொருத்திருக்கிறது. இதனால், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதற்கோ அல்லது குறிப்பிட்ட ஒரு நோயைக் குணப்படுத்தும் பொருட்டு கூடுதலாக ஏதேனும் புரத உணவு, காய்கள், பழம் அல்லது பால் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தாலும், அதை அவர்கள் புறந்தள்ளி விடுகிறார்கள்.

மனிதனின் வாழ்க்கை ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்து அவசியம். அது சரிவிகித உணவின் மூலமாகவும், நோய் நிலையின் போது அதற்கேற்றவாறு மாற்றம் செய்யப்பட்ட உணவு வழியாகவும் கொடுக்கப்பட வேண்டும். இதில், ஆண், பெண் என்ற பாலினத்தின்படி பார்க்கும்போது, பூப்பெய்துதல், மாதவிடாய், கர்ப்பகாலம், பாலூட்டுதல் என்ற உடலியங்கியல் மாற்றங்களும் அதனால் ஏற்படும் அழுத்தங்களும் பெண்களுக்கென்றே இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பரிமாணங்களைச் சரிவரச் செய்தால்தான் பெண்களின் வாழ்க்கை முழுமைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இத்தனை உடலியங்கியல் நிகழ்வுகளையும் எவ்விதக் குறையுமில்லாமல் செய்து முடித்து, அவர்களும் உடனிருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், அவர்களின் உள்ளார்ந்த காரணயாக இருப்பது அவர்களின் தனிப்பட்ட உடல்நலனும், அதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியஉணவுகளும்தான்.

தானியங்கள், பருப்பு வகைகள், காய்கள் மற்றும் பழங்கள், பால், மீன், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள், எண்ணெய் வித்துக்கள் என்று ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள உணவுகளில் ஒன்றுக்கு ஒன்றை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒவ்வொரு உணவு வகையும் தனிப்பட்ட முறையில், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது என்பதால், அனைத்தும் பரிந்துரைக்கப்பட்டஅளவில் தினசரி உணவில் இருக்க வேண்டியது கட்டாயம்.

இதனால்தான் சரிவிகித உணவுத் தேவை அவசியமாகிறது. தானியங்கள் ஆற்றல்மற்றும் கலோரியையும், அசைவ உணவுகள் மற்றும் பருப்பு வகைகள் புரதத்தையும் எண்ணெய் வித்துக்கள் கொழுப்பையும் காய்கள் மற்றும் பழங்கள் அனைத்து உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றையும் கொடுக்கின்றன.

இதனால், அனைத்து உணவுகளுமே ஒருவருக்கு அன்றாடம் கிடைக்கப்பட வேண்டும். இவற்றுள் எதைத் தவிர்த்தாலும் அல்லது அதிகமாக எடுத்துக்கொண்டாலும் அந்த குறிப்பிட்ட ஊட்டம் பற்றாக்குறை அல்லது மிகை ஊட்டமாகி, நோய் நிலையை ஏற்படுத்திவிடும்.

இந்தியப் பெண்களின் ஒரு நாளைக்கான முழு தானியங்களின் பயன்பாடு குறைந்துள்ள நிலையில், ரெடிமேடாகக் கிடைக்கும் தானிய உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், வெளிப்புறத்தோல் நீக்கப்படாத தானியங்களிலிருந்து கிடைக்கும் வைட்டமின் பி சத்து நார்ச்சத்து போன்றவை பற்றாக்குறையாகின்றன. நடுத்தர வர்க்கத்திற்குக் கீழ் இருக்கும் பெண்களில், பெரும்பாலும் வெளியில் வேலைக்குச் செல்பவர்களும், சுயதொழில் செய்பவர்களும் புரதச்சத்தை அளிக்கக்கூடிய உணவுகளான பால், மீன், முட்டை போன்றவற்றைத் தவிர்க்கிறார்கள் என்றும் அவர்களின் ஒருநாள் உணவுப் பட்டியலில் தானிய வகை உணவுகளே அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இவை இரண்டு முடிவுகளுமே, முறையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவு சத்துக்களைவிடக் குறைவாகவும், அதிகமாகவும் இருக்கிறது. இதனால், 45 - 65 % கார்போ ஹைட்டிரேட், 10 -35 % புரதம் மற்றும் 20 - 35 % கொழுப்பு என்ற பேரூட்டங்களின் விகிதாச்சாரம் பாதிக்கப்படுவதுடன், நீண்டகால சத்துப்பற்றாக்குறை நிலைக்கும் (ம்ஹப்ய்ன்ற்ழ்ண்ற்ண்ர்ய்) உள்ளாக நேரிடுகிறது. இவையனைத்தும் அவர்களின் மொத்த கலோரியும் அதிகரித்து, ஆரோக்கியமற்ற உடல் எடையையும் அதனால் ஏற்படும் இதய நோய்கள், நீரிழிவு போன்றவற்றையும் வரவழைத்துவிடுகிறது.

உடல் எடை விகிதாச்சாரம் (ஆர்க்ஹ் ம்ஹள்ள் ண்ய்க்ங்ஷ்) என்பதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில், தமிழ்நாடு, புதுதில்லி, கேரளா, பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் 13% பெண்கள் அதிக உடல் எடையுடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்களில் 9 சதவிகிதத்தினர்தான் அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர்.

இதற்குக் காரணம், நுண்சத்துக்களைக் கொடுக்கும் காய்கள் மற்றும் பழங்கள் உண்பது குறைவாகவும் தானியம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட கொழுப்பு உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான். காய் மற்றும் பழங்களில் மிகுதியாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து இருப்பதால், சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் நச்சு சேராமல் பாதுகாப்பதுடன், செரிமானமின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகளிருந்தும் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாப்பு அளிக்கிறது.

நுண்சத்துக்களும், பைட்டோகெமிக்கல் என்னும் நுண்பொருட்களும் 40 வயதைக் கடக்கும் பெண்களுக்கு, கர்ப்பப்பை பிரச்னைகள், மார்பகப் புற்றுநோய், மூட்டுவலி, எலும்பு தேய்மானம், சீரற்ற மாதவிடாய் மற்றும் மெனோ பாஸ் போன்றவை ஏற்படாமலும் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புடையவை. இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தும், காய்கள் மற்றும் பழங்களை பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட அளவில்கூட பெண்கள் எடுத்துக்கொள்வதில்லை.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் பரிந்துரைப்படி ஒரு நாளைக்கு 50 கிராம் கீரைகள், 50 கிராம் கிழங்கு வகைகள் (உருளைக்கிழங்கு, மரவள்ளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை) 200 கிராம் பிற காய்கள் (வெண்டைக்காய், கொத்தவரங்காய், பரங்கிக்காய், கத்தரிக்காய் போன்றவை) 100 கிராம் பழங்கள் உள்ளிட்டவற்றைப் பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 100 கிராம் அளவிற்குப் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று வரையறுக்கப்படும் நிலையில், ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 36 கிலோ அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களில் ஒரு வருடத்திற்கு ஒரு நபர் 9.6 கிலோ பழங்களை மட்டுமே சாப்பிடும் நிலையில், நகர்ப்புறப் பெண்கள் 15.6 கிலோ அளவில் எடுத்துக் கொள்கிறார்கள்.

உலகளவில் பார்க்கும்போதும் குறைவான அளவில் பழங்கள் சாப்பிடுபவர்களில் பெண்களே அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்திய அளவில் மேற்கொண்ட ஆய்வில், உடல் பருமன் அதிகமாக இருக்கும் நாடுகளில், குறைவான அளவு காய், பழங்கள் உண்பவர்கள் இருக்கும் நாடுகளே முதல் பத்து இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உடல் பருமனுடன் இருக்கும் பெண்களில் 55 சதவிகிதத்தினருக்கு ரத்த சோகையும் இருக்கின்றது என்பதிலிருந்தே, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த காய்கள், பழங்களை தவிர்ப்பதன் விளைவுகள் நன்றாகத் தெரிய வருகிறது. உலகளாவிய நோய்ச்சுமை மற்றும் தேசிய குடும்பநல கணக்கெடுப்பு போன்ற அமைப்புகளின் புள்ளிவிவரங்களின்படி, இதயநோய்கள் 1.18 மில்லியன் பெண்களையும் அது தொடர்பான பக்கவிளைவுகள் 13.80 மில்லியன் பெண்களுக்கும், இவற்றால் ஏற்படும் இறப்பு விகிதம் 0.32 மில்லியனாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இவையனைத்துமே ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக இருக்கின்றது. பெண்களிடம் சரிவிகித உணவுமுறை இல்லாததையே இந்நிலை தெளிவுபடுத்துகிறது.

பணிக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள், பணவசதி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பான்மையான பெண்களுக்கு நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகள் இருக்கின்றன. இதற்குக் காரணம், சரிவிகித உணவு முறையை ஏதோ ஒரு வகையில், ஒரு காரணத்தினால் ஒவ்வொரு தரப்புப் பெண்களும் தவிர்த்து வருகிறார்கள் என்பதுதான். இதன் காரணமாக இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, டி, பி12 போன்ற நுண்சத்துக் குறைபாடுகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் உறுதி செய்துள்ளது. எனவே, சரிவிகித உணவுமுறை, நுண்ணூட்டங்களின் முக்கியத்துவம் குறித்து, தொடர்ச்சியான விழிப்புணர்வை அவசரகாலத் தேவையாகக் கருதி செயல்படுத்துவது அவசியமாகிறது.

ஊட்டச்சத்துக்களால் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கியத்தின் அடிப்படையிலேயே இச்சிக்கலை அணுகுவதும் முறையாகாது. காய்கள் மற்றும் பழங்களின் முக்கியத்துவத்தை தொடர்ச்சியாக எடுத்துக் கூறுவதாலும் எளிமையான வகையில் உணவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதாலும், பெண்களின் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றியமைக்கலாம்.

அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com