முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
மன வலிமையால் மீண்டேன்!
By பூர்ணிமா | Published On : 06th April 2022 06:00 AM | Last Updated : 06th April 2022 06:00 AM | அ+அ அ- |

தும்கூரு மாவட்டம் திப்தூர் தாலுக்காவில் அன்னபுரா நெசவு ஆலையொன்றில் வேலை பார்த்து வந்த ஜெயலட்சுமி, திருமணம் ஆனது முதலே கணவரால் பிரச்னைகளை அனுபவித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவரை திருத்த முடியாமல் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயான நிலையில் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் செல்ல துவங்கியது முதல் கணவரின் தொல்லை அதிகரித்தது. வேலைக்குப் போகக் கூடாது என்று தினமும் வற்புறுத்தி வந்தார்.
2002 -ஆம் ஆண்டு ஜுன் மாதம் பணி முடிந்து ஜெயலட்சுமி வீட்டுக்குக் கிளம்பும் சமயத்தில் நேரே நெசவு ஆலைக்கு குடி போதையில் வந்த கணவர், எதிர்பாராதவிதமாக ஜெயலட்சுமி மீது அமிலத்தை வீசி எறிந்தார்.
அமில எரிச்சலால் பாதிக்கப்பட்டு துடிதுடித்த ஜெயலட்சுமியை உடன் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கணவர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவாயிற்று. அமிலவீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச் சையளிக்க கர்நாடக உள்பட பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை.
இவரைப் போலவே வாரணாசியில் 23 வயதில் திருமணமாகி 12 நாள்களிலேயே பணி நிமித்தமாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பிராக்யா பிரசன் என்ற பெண், பொறாமை பிடித்த ஒருவனால் ரயிலிலேயே அமில வீச்சுக்கு ஆளாகி, சிகிச்சைப் பெற்று குணமடைந்தவுடன் தன்னைப் போலவே நாடு முழுவதும் அமில வீச்சுக்கு ஆளாகி திக்கற்று நிற்கும் பெண்களுக்கு சட்ட ஆலோசனை, மருத்துவ உதவி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு சமூக ஆர்வலராக மாறி தன் கணவர் உதவியுடன் பெங்களூருவில் "அதி ஜீவன்' என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.
பிராக்யாவின் சேவையைப் பாராட்டி 2019- ஆம் ஆண்டு "நாரீசக்தி' விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார்.
ஜெயலட்சுமியின் நிலைமையை அறிந்த பிராக்யா, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்து தர முன்வந்தார்.
சென்னை மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் பழைய முகப் பொலிவைப் பெற்றுத் தந்தார். தொடர்ந்து ஜெயலட்சுமியின் எதிர்காலத்திற்கும், மேற்கொண்டு வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் ஆலோசனைகள் வழங்கினார்.
பிராக்யாவின் உதவி ஜெயலட்சுமிக்கு நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்தது. பிராக்யாவைப் போல் தானும் சமூக சேவையில் ஈடுபட்டு அமில வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு "ஸ்ருஜனா மகிளா வேதிதே' என்ற அமைப்பை 2005 - ஆம் ஆண்டு தொடங்கினார். பிராக்யாவின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி, சட்ட ஆலோசனை, அமில வீச்சுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் போன்றவைகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.
பத்தாண்டுக்கு முன் தன் மகன் திருமணத்தின்போது, சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த இவரது கணவர் நேரே திருமண மண்டபத்திற்கு வந்து ஜெயலட்சுமியின் காலில் விழுந்து தன்னை மன்னித்து குடும்பத்தில் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டபோது, ஜெயலட்சுமி ஒரே முடிவாக அவரை மன்னிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ மறுத்ததோடு, மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கூறிவிட்டார்.
என் முகத்தை அமிலத்தால் அவர் சிதைத்தாலும் என் மன உறுதியை அவரால் சிதைக்க முடியவில்லை என்று கூறும் ஜெயலட்சுமி கடைசி வரை அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
""என்னுடைய மனவலிமையே என்னை மீட்டெடுத்தது என்று கூறும் ஜெயலட்சுமிக்கு தற்போது 57 வயதாகிறது. தொடர்ந்து சமூகச் சேவை ஆற்றி வருவதால் இவரைப் பாராட்டி ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மகளிர் மற்றும் குழந்தைகள் நல வளர்ச்சித் துறை விருது அண்மையில் இவருக்கு வழங்கப்பட்டது.
அமில வீச்சால் பாதிக்கப்பட்டப் பெண்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் இவர் தற்போது சக சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கர்நாடக அரசு அளித்து வரும் மறுவாழ்வுத் தொகை ரு. 3 லட்சத்தை ரூ. 5 லட்சமாகவும், மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தக் கோரி முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக'' கூறினார்.