கதை சொல்லும் குறள் - 74: ஐந்தின் ரகசியம்!

அரேபிய நாடுகளில் ஒன்றாக காலிப் உலக வரைபடத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நாட்டின் பூர்வீக மக்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கியிராமல் இடம் விட்டு இடம் பெயர்ந்து, நாடோடிகளாக வாழ்ந்தனர்.
கதை சொல்லும் குறள் - 74: ஐந்தின் ரகசியம்!

அரேபிய நாடுகளில் ஒன்றாக காலிப் உலக வரைபடத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த நாட்டின் பூர்வீக மக்கள் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கியிராமல் இடம் விட்டு இடம் பெயர்ந்து, நாடோடிகளாக வாழ்ந்தனர்.

பிறகு பரந்து விரிந்த பாலைவனத்தில் சோலைகள் நிறைந்த ஓர் இடத்தில் தண்ணீர் கிடைப்பது தெரிந்ததும் அங்கே நிரந்தரமாகக் குடியேறினர். ஒட்டகங்கள், ஆடுகள், அரேபியக் குதிரைகள் போன்றவற்றை வளர்த்தனர். சோளம், மக்காச்சோளம், தினை போன்ற பயிர்களைப் பயிரிட்டனர். மேய்ச்சலும், உழவுமே பிரதானத் தொழில்களாக இருந்தது.

ஓரிரு இடத்தில் குடியேறியதுமே மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கியது. பண்டங்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியதும், உற்பத்தியும் அதிகரிக்கக் கொள்ளையர்கள் தாக்கும் அபாயமும் பெருகியது. மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற ஒரு தலைவன் தேவைப்பட்டான். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அரசனானான், அவனுடைய வழித்தோன்றல்கள் அரச பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆனார்கள். ஓர்  அரசரின் ஆட்சிக்குக் கீழ் வந்த அந்தப் பகுதிகள் ஒரு நாடாகியது; அந்த நாடு "காலிப்' என்று பெயர் பெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலிப்பை ஆண்ட மன்னர் அகமத்; அவருடைய மகன் பரூக் 1910-இல் பிறந்தார். பரூக்குக்கு முதலில் ஒரு பெண், பிறகு 1940-இல் வாசிம் மகனாகப் பிறந்தார். வாசிம் பிறந்த நேரம் காலிப்பிற்கு பொன்மயமான காலமாக அமைந்தது. 1938 மார்ச், 3-ஆம் தேதி அங்கே எண்ணெய் அதாவது பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. கலிபோர்னியாவைச் சார்ந்த கம்பெனி ஒன்று இதைச் சாதித்தது.

வாசிம் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன் சவூதி அரேபியா உலக நாடுகளின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியது. காலிப் நாட்டிலும் பெட்ரோலியம் கிடைக்க அந்த நாடும் பொருளாதாரத்தில் உயரத் தொடங்கியது. பாலைவனங்களில் ஆட்டையும், ஒட்டகங்களையும் மேய்த்தவர்கள், மண்குடில்களில் வாழ்ந்தவர்கள் பங்களாக்களிலும், அரசர்கள் அரண்மனைகளிலும் வாழத் தொடங்கியிருந்தனர்.

""வாசிம்'' என்று தன் மகனை அன்பொழுக அழைத்தார் பரூக்.

""சொல்லுங்க அப்பா'' என்றான் வாசிம்.

""கடல் கடந்து பிரிட்டனில் மேற்படிப்பு படிக்கப் போகிறாய். ஜாக்கிரதை, படிப்பைத் தவிர வேறு எதையும் கற்று வராதே''.

""என்னுடைய விருப்பப்படி என்னைப் படிக்க அனுப்புகிறீர்கள், உங்கள் நம்பிக்கையைக் கெடுக்கமாட்டேன்'' என்று சொன்ன மகனை பரூக் கட்டித் தழுவிக் கொள்கிறார்.

மொத்தம் ஐந்து ஆண்டுகள் உருண்டோடி இருந்தன. கேம்ப்ரிட்ஜில், பொருளாதாரத்தில் டாக்டர் பட்டத்தைப் பெற்று பெற்றோருக்கும், தன் நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்த்து ஊர் திரும்பினார் வாசிம்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு வாசிமுக்கு, ஆயிஷாவைத் திருமணம் செய்து வைத்தனர். வாழ்க்கை இனிமையாக ஓடிக்கொண்டிருந்தாலும் வாசிமின் மனதை ஏக்கம் ஒன்று அரித்துக் கொண்டிருந்தது.

""அப்பா''

""சொல்லுப்பா'' என்றார் பரூக்.

""ஐரோப்பிய நாடுகள் எப்படிப்பட்ட மேன்மையைக் கண்டிருக்கின்றன தெரியுமா? விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. இங்கே காலிப்பில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. நம் நாட்டு மக்கள் இன்னமும் ஆட்டு மந்தைகளை ஓட்டிக் கொண்டு பாலைவனங்களில் ஒட்டகத்தில் சவாரி செய்கிறார்கள். பேரீச்சம்பழ மரங்களையும், சோளம், தினைகளைப் பயிர் செய்து விவசாயத்தில் புதிய முறைகளைச் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். எண்ணெய்யின் மூலம் கிடைக்கும் செல்வத்தை நாட்டு மக்களின் உயர்வுக்காகப் பயன்படுத்தினால் எதிர்காலம் பட்டொளி வீசும்''.

""வாசிம், உன்னை அயல்நாட்டுக்குப் படிக்க அனுப்பியது உன் புத்தியை வளரச் செய்ய, எனக்குப் புத்தி சொல்ல அல்ல. மேலும் நம் நாட்டு மக்களுக்கு என்ன குறை? உணவு இல்லையா? தங்கும் இடம் இல்லையா? ஐந்து வேலை தொழுகை நடத்தி மன நிம்மதியோடு வாழ்கிறார்கள். விஞ்ஞான வளர்ச்சி இவர்களின் வாழ்க்கையைத் திசை மாற்றிவிடும். இந்த அர்த்த மற்றப் பேச்சு இனி என் முன் எடுக்காதே''.

பரூக் அரசர் உயிரோடு இருந்தவரை வாசிமின் கரங்கள் கட்டுண்டுக் கிடந்தன.

தனது எழுபதாவது வயதில் பரூக் மாரடைப்பில் இறக்க, வாசிம் அரசராக முடி சூட்டிக்  கொண்டார்.

வாசிம் தன் நாட்டில் கொண்டு வந்த மாற்றங்கள், உலகச் சரித்திரத்தில் காலிப்பின் வரலாற்றைப் பொன் எழுத்துக்களால் பதிக்க வைத்துவிட்டன.

வாசிம் அரசராகப் பொறுப்பேற்ற சமயத்தில் காலிப் நாட்டின் உள் கட்டமைப்பு மிகவும் மோசமாக இருந்தது. கல்வி, சுகாதாரம் போன்றவை கீழ்நிலையில் இருந்தன. மக்கள் வசதியாகப் பயணிக்கக் கூடிய சாலைகள் என்பது ஐம்பது கி.மீ தூரமே இருந்தது.

எண்ணெயின் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு தன் நாட்டை வாசிம் நவீனமயமாக்கத் தொடங்கினார். பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டரில் சாலைகள் போடப்பட்டன. விமான நிலையம் விரிவாக்கப்பட்டது. துறைமுகங்கள் புதுப்பிக்கப்பட்டன. தொலைத்தகவல் தொடர்பு நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டன.

பன்னாட்டுத் தொழில் அதிபர்களைத் தன் நாட்டில் வந்து தொழிலை நடத்த வாசிம் அழைத்தார். அதனால் காலிப்பில் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இதனால் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்தன.

கிராமங்களில் மின்சார வசதிகள் பெருகின. காலிப் நாட்டில், பாலைவனப் பகுதிகளுக்கே உண்டான தண்ணீர்  தட்டுப்பாடு இருந்தது. எங்கே எல்லாம் தண்ணீர் கிடைக்கும் என்பதைக் கண்டறியச் செய்து அதிகாரிகளைக் கொண்டு அதைச் சாதாரண குடிமக்களுக்கும் கிடைக்க வழி செய்தார்.

அது மட்டுமா, கடல் நீரை உப்பு நீக்கம் செய்து குடிநீராக்கும் நிலையங்களை நிறுவினார். இதனால் காலிப்பில் தண்ணீர் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

அதிநவீன ஹோட்டல்கள், கேளிக்கை நிலையங்கள், மால்கள், ரிசார்ட்டுகள் என்று கட்டி காலிப்பை நோக்கிச் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும்படிச் செய்தார். இதனால் அந்நியச் செலவாணி அதிகமாகக் கிட்டியது. காலிப்பில் சர்வதேச வங்கிகளும் நிறுவப்பட்டன. ராணுவமும் பலப்படுத்தப்பட்டது. வாசிம் அரசரால்தான் தங்களுக்குப் பொன்மயமான எதிர்காலம் அமைந்தது, தங்கள் தாய்நாடு உலகின் அதிநவீன வளர்ச்சியைப் பெற்ற நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்பதை காலிப் மக்கள் புரிந்துக் கொண்டனர்.

வாசிமை அல்லாவுக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றி வணங்குகின்றனர்.

""வாசிம்'' என்று ஆயிஷா அன்போடு கூப்பிட்டாள்.

நள்ளிரவு மணி பன்னிரெண்டைத் தாண்டி இருந்தது.

""என்னம்மா'' என்றார் வாசிம். 

வாசிமுக்கு இப்பொழுது வயது எண்பது முடிந்திருந்தது. கம்பீரமான அவர் நடை தளர்நடையாகியிருந்தது.

""இந்த வயதில் இவ்வளவு நேரம் வேலை பார்க்கணுமா? நம்ம மகன் இஸ்மாயிலிடம் சிலவற்றை ஒப்படைக்கலாமே.

என் உயிர் உள்ளவரை என் நாட்டிற்கானப் பணிகளை நானேதான் செய்வேன். எனக்குப் பிறகு இஸ்மாயில் என் வழியில் நடந்து நாட்டுக்கு வளம் சேர்க்கட்டும்'' என்று புன்முறுவலுடன் கூறி வாசிம் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

இப்பொழுது புரிகிறதா, மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு என்ற ஐந்தும் பெற்ற நாடாக காலிப் விளங்குவது எதனால் என்று!

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

( குறள் எண்: 738)

பொருள் :

மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்பநிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com