உன்னால் முடியும் நம்பு...நம்பு! சிகரம் தொடலாம்  வாருங்கள்!  

'நூறுபேர் செல்லலாம் எப்பொழுதாவது ஒருவர் அபூர்வமாக அடைய வேண்டிய இடத்தை அடைவார்' என்று ஒரு திபெத்திய பழமொழி உண்டு.
உன்னால் முடியும் நம்பு...நம்பு! சிகரம் தொடலாம்  வாருங்கள்!  

'நூறுபேர் செல்லலாம் எப்பொழுதாவது ஒருவர் அபூர்வமாக அடைய வேண்டிய இடத்தை அடைவார்' என்று ஒரு திபெத்திய பழமொழி உண்டு. ஒரு பெüத்த மடாலயத்தின் தலைமை குரு மரணப் படுக்கையில் இருந்தார். மடத்தின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். பக்தி சிரத்தையும் சேவை மனப்பான்மையும் கொண்டவராக குருவிடம் மிகுந்த பணிவும் பக்தியும் கொண்ட ஒரு சீடர் இருந்தார். அவரைத் தான் அடுத்த தலைமை குருவாக நியமிப்பார் தற்போதைய குரு என்று பலரும் கருதினார்கள்.

 குரு ஒருநாள் அந்த சீடரை அழைத்து, பக்கத்து நாட்டில் இருக்கும் மற்றொரு மடாலயத்துக்குச் சென்று அங்குள்ள குருவிடம் நம்முடைய மடத்திற்கு குருவாகப் பொறுப்பேற்க ஆள் வேண்டும் என்றும் அதற்குத் தகுதியான நூறு சீடர்களை அனுப்பும் படி நான் கேட்டதாகச் சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். 

சீடர் காடு மலை எல்லாம் கடந்து பல நாள்கள் பயணித்து  மடாலயத்தை அடைந்து விஷயத்தை விளக்கினார். அந்த மடாலயத்தின் தலைவரும் அப்படியே அங்கிருந்து நூறு சீடர்களை அவரோடு அனுப்பி வைத்தார். அதிகாலையில் நூற்றியோரு பேரும் பயணத்தைத் தொடங்கினார்கள். மாலையில் ஊர் எல்லை வந்தது.

சில சீடர்கள்,"ஐயா, நாங்கள் மடத்துக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தங்களோடு அடுத்த நாட்டுக்குப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். இனி எங்கள்  குடும்பத்தினரை எப்பொழுது பார்ப்போமோ தெரியாது. ஒருமுறை எங்கள் குடும்பத்தைப் பார்த்து விட்டு உங்கள் மடாலயத்துக்கு வந்து சேருகிறோம்" என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்கள். 

மற்ற சீடர்கள் மறுநாள் காலையில் பயணத்தைத் தொடங்கினார்கள். வழியில் அடர்ந்த காடு. அதைத் தாண்டுவது எளிதல்ல வன விலங்குகளால் உயிருக்கே அபாயம் நேரலாம். இத்தகைய ஆபத்தான பயணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சிலர் விலகினார்கள். 

எஞ்சிய சீடர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். மற்றொரு மடாலயம் வந்தது. அங்கே இரவில் தங்கினார்கள். தாங்கள் அறியாத நுணுக்கங்களை அந்த மடத்தின் குரு கற்றுக் கொடுக்கிறார் என்பதை அறிந்தவுடன் சிலர் அங்கேயே தங்கி அந்த குருவிடம் பாடம் கற்பதற்கு விழைந்தனர். 

மிச்சமிருந்த ஐவர் பயணத்தைத் தொடர்ந்தனர். இடையில் ஒரு கிராமம் வந்தது. அங்கே நோயுற்றவர்களுக்கு உதவ மூவர் தங்கிவிட்டனர். மடத்தில் இருந்து வந்த சீடர்களில் ஒருவரும் அழைத்து வர வந்தவரும் மட்டும் எஞ்சினார்கள். அவர்களின் பயணத்தில் ஒரு பெண்ணிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார்கள். அந்தப் பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்புவதாக அந்த ஒருவரும் அங்கே தங்கிவிட்டார். நூறு பேரை அழைத்து வருவதற்காகப் புறப்பட்ட அந்த சீடர் மட்டும் மடாலயத்துக்குத் தனியே வந்து சேர்ந்தார். நடந்ததைக் கூறினார். குரு புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். "எடுத்துக் கொண்ட செயலில் சற்றும் மாறாமல் நீ மட்டுமே அதே குறிக்கோளோடு சென்று திரும்பியிருக்கிறாய். எந்த நிலையிலும் கவனச் சிதறலுக்கு ஆட்படாத நீயே இந்த மடாலயத்தின் தலைவனாக இருக்கத் தகுதியானவன். நீயே இனி இம்மடத்தின் தலைமை குரு' என்று ஆசிர்வதித்தார்.


 சின்ன வயதில் ஒரு குழந்தையிடம் என்னவாக விருப்பம்? என்று கேட்டால்,  டீச்சர், என்ஜினீயர், டாக்டர் என்று ஒரு பதிலைத் தெளிவாகக் கூறுவார்கள். வளர வளர அவர்களுக்குள் மாற்றங்கள் நிகழ்கின்றன. இருபது வயதுக்கு மேல் ஒரு பெண்ணிடம் என்னவாகப் போகிறாய் என்று கேளுங்கள். ஐந்து வயதில் சொன்னதைப் போலத் தெளிவாக பதில் சொல்ல முடியாமல் திணறுவார்கள். ஆசை இருக்கிறது ஆனாலும் எங்கே நினைத்தத்தைச் செய்ய முடிகிறது என்று ஒருகுறை நம்மிடம் புலம்பித் தீர்ப்பார்கள். 

வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று சில பெண்கள் குறைபட்டுக் கொள்வார்கள். அதற்காக மேற்கொண்ட முயற்சிகளைக் கேட்டால் பதில் இருக்காது. ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் தொடர் முயற்சிகளே உயிரூட்டுகின்றன. நம்முடைய லட்சியங்களுக்கான பாதை நமக்குள் இருந்து தோன்றும் உத்வேகத்தினால் தான் நிறைவேறும் என்று புரிந்து கொண்டால் மட்டுமே இலக்கை நோக்கிப் பயணிப்பதும் சாத்தியமாகும்.

ராஜேஸ்வரி நான்கு சகோதரிகளோடு பிறந்தவள். அவள் பிறந்த போது அவள் தகப்பனார் இந்த உலகில் இல்லை. தகப்பன் இல்லாமல் தாய் மட்டும் உள்ள குடும்பங்களில் ஆசை என்பதே குற்றம். மூன்று வேளை சாப்பாடு என்பது கூட கனவு என்ற நிலை. பத்துப் பனிரெண்டு வயதிலேயே சகோதரிகள் கிடைக்கும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். கடைக்குட்டி என்பதால் ராஜேஸ்வரி மட்டும் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். மகள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடித்துவிட்டால் அதுவே சாதனை என்று தாயார் நினைத்தார். மகளுக்கோ உயர்கல்வி கனவுகள் இருந்தன. 

பள்ளிப் படிப்பை முடித்த பொழுது பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று நிற்கிறாள். கல்லூரிக்குப் போக ஆசை. வசதியில்லை. " நம்முடைய பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் பெண் கல்லூரிக்குப் போகாமல் படிப்பை நிறுத்துவதா? கூடாதம்மா. நீ மேலே படிக்க வேண்டும்'' என்று கல்லூரியில் படிக்க வங்கிக் கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பற்றிச் சொல்லி தானே அவளுக்கு உத்தரவாதக் கையெழுத்தும் போட்டு கல்விக் கடன் பெற்றுக் கொடுத்தார் தலைமை ஆசிரியர் லீலா. 

குடும்பத்திலேயே கல்லூரிக்குப் போகும் முதல் பெண். அதிலும் இன்ஜினியரிங் படிப்பு. கல்லூரிக் கட்டணத்திற்குக் கடனுதவி கிடைத்துவிட்டது. ஆனாலும் நல்ல உடை கூட இல்லையே, இதெல்லாம் ராஜேஸ்வரியின் தாயார் பட்ட கவலை. அவளுக்கு அதெல்லாம் ஒன்றும் யோசனை இல்லை. பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது அணிந்து கொண்டிருந்த சீருடையை அப்படியே கல்லூரிக்கும் அணிந்து கொண்டு போயிருக்கிறாள் ராஜேஸ்வரி.  

 
அங்கே அவள் சந்தித்த மீனா அப்படியே அவளுக்கு நேரெதிர். வசதியான குடும்பத்தில் பிறந்தவள். பணம் தண்ணீர் பட்ட பாடு. படிப்பில் சுமார். இன்ஜினியரிங் அவளுடைய விருப்பம் இல்லை. என்றாலும் நன்கொடை கொடுத்து சேர்ந்திருக்கிறாள். இருவருக்கும் நட்பு ஏற்பட்டுவிட்டது. ராஜேஸ்வரியோ பல நாள்கள் சாப்பாடு கூட எடுத்துவராமல் இருப்பாள். கிழிந்த உடையைக் கையால் தைத்து அது வெளியில் தெரியாத படி உடுத்திக் கொள்வது அவளுடைய வழக்கம். மீனாவோ புதிது புதிதான உடைகள் கேன்டீனில் ஹோட்டலில் என்று விரும்பிய உணவு இப்படிப் பழகியிருந்தாள்.

கல்லூரியிலும் ராஜேஸ்வரி முதல் மதிப்பெண். கல்லூரிக்கே வந்து பன்னாட்டு நிறுவனம் அவளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியது. படிப்பை முடித்த கையோடு வேலைக்குப் போனாள். வேலையிலும் கவனமாக இருந்தாள். வெளிநாட்டில் வேலை வாய்ப்பை வழங்கியது அவளுடைய நிறுவனம். நான்கு ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றி இந்தியா திரும்பினாள். 

வீடு வாசலோடும் சொகுசுக் கார்களோடும் வசதியாகக் குடும்பம் மதிப்போடு இருக்கிறது. சகோதரிகள் சேர்ந்து ஒரு மழலையர் பள்ளி நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறாள். குடும்பத்தில் அனைவரும் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டார்கள். கல்லூரிக்குப் போக தலைமை ஆசிரியர் உதவினார் அல்லவா? அதற்கு நன்றி தெரிவிப்பதாக அவருடைய பெயரில் அறக்கட்டளை அமைத்து ஆண்டுதோறும் பத்து ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறாள். 

மீனா படிப்பில் கவனம் செலுத்தவில்லை. மூன்றாம் ஆண்டில் படிப்பை நிறுத்தி விட்டாள். தனக்குப் பிடித்த பேஷன் டிசைனிங் படிக்கப் போனாள். அங்கும் முழுமையாகப் படிப்பை முடிக்கும் முன் ரமேஷைக் காதல் செய்து திருமணமும் செய்து கொண்டாள். அவளின் குடும்பம் இதை ஏற்கவில்லை. ரமேஷுக்கோ வேலை இல்லை. வறுமை தொற்றிக்கொண்டது. வறுமையை அனுபவித்திராத மீனா திணறுகிறாள். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் ஓயாத சண்டை. இப்போது, ராஜேஸ்வரி இயக்குநராக இருக்கும் நிறுவனத்தில் அவள் தயவில் ஒரு சிறிய வேலை கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டு குடும்பத்தை நடத்துகிறாள்.

இந்தப் பெண்களைப் பற்றிக் கேட்டவுடன் நமக்கு ராஜேஸ்வரி மீது அபிமானம் ஏற்படுகிறது. ஆஹா! அருமையான பெண் என்று மதிப்பு தோன்றுகிறது. மீனாவை நினைத்துப் பச்சாதாபப்படுகிறோம் அல்லது கோபப்படுகிறோம். ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். நம்மில் பலரும் மீனாவைப் போன்றவர்களே. ராஜேஸ்வரிகள் அபூர்வமாகத் தான் இருக்கிறார்கள்.

யதார்த்தத்தில் நாம் எப்படியெல்லாம் கவனச்சிதறலுக்கு ஆளாகிறோம்? உடம்பைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். யோகா வகுப்புக்கோ உடற்பயிற்சிக் கூடத்திற்கோ சென்று பணம் கட்டிச் சேருகிறோம். தினம் காலையில் வகுப்புக்குப் போக வேண்டும். நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து வகுப்புக்குச் சரியாகப் போகிறோம்? அதிகாலையில் எழுந்து கொள்வதற்கு இருக்கும் ஆயிரம் சிக்கல்களைச் சொல்லி புலம்பிக் கொண்டு வகுப்புக்குப் போவதை நிறுத்தி விடுகிறோம்.

சரி, வீட்டிலேயே உணவுக் கட்டுப்பாடோடு இருந்து உடல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறோம். அதையாவது சரியாகக் கடைபிடிக்கிறோமா? நான்கு நாள் போவதற்குள் செய்த சாப்பாடு வீணாகிவிடும் என்று அதை நாமே சாப்பிடுகிறோம். கல்யாணம் விசேஷம் என்று போனால் அன்றோடு இந்த வகை உணவுகள் இனி உலகத்தில் கிடைக்காது என்பதைப் போல சாப்பிட்டுவிட்டு வருகிறோம். நமக்கு விருப்பமான உணவு வகைகளைப் பார்த்தவுடன் நம்முடைய கட்டுப்பாடு மறந்தே போய்விடுகிறது.

இது ஒரு உதாரணம் தான். இப்படி நம்முடைய அன்றாடங்களில் பல கவனச்சிதறலுக்கு இடம் கொடுத்து லட்சியப் பாதையில் இருந்து பிறழ்ந்து விடுவது சகஜமாகி இருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டு நாம் தேர்ந்தெடுத்த பாதையில் மட்டும் கவனத்தை வைத்தால் சிகரம் தொடுவதும் சாத்தியமே.
 

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com