மகிழ்ச்சியில் மலேசியப் பெண்கள்!

மகிழ்ச்சியில் மலேசியப் பெண்கள்!

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த மலேசியா- சிங்கப்பூர் தரைவழி பாதைகளின் எல்லைகளான உட்லண்ட்ஸ், துவாஸ் கடந்த மார்ச்-31-ஆம் தேதி இரவு மீண்டும் திறக்கப்பட்டது. அதோடு கிருமித் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளாமலும். தனிமைப் படுத்திக்கொள்ள அவசியமின்றியும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தனியார் வாகனங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்ததால் இருநாட்டைச் சேர்ந்தவர், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

இது குறித்து சில பெண்கள் கூறிய கருத்துகள்:
  
கல்யாணி கோபால் 
ஈஸ்ட் கோஸ்ட் சிங்கப்பூர்
 


"இந்நாடு சிறு தீவாக இருந்தாலும் வாழ்வியல், கலை, பண்பாடு, கலாசாரம், நாட்டின் தூய்மை, இயற்கை வளமை ஆகியவற்றில் உயர்ந்து நிற்பதுடன் தமிழ்க்கல்வி வரலாற்றில் மிகுந்த சாதனைக் கண்டு சிறந்து விளங்குகிறது. இதனால் உலக நாடுகளாலும் பாராட்டு பெறுகிறது. 

மார்ச் மாதம் 31-ஆம் தேதி நள்ளிரவில் தரைவழி பாதை திறப்பை தொலைக்காட்சியின் நேரலையில் பார்த்தபோது நாங்கள் எல்லோரும் வெடி, வெடித்து கொண்டாடினோம். மலேசிய உணவு வகைகள் எப்போதும் சற்று வித்தியாசமாக இருக்கும். அதனால் ருசிப்பதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் அங்கே செல்வது வழக்கம். அது இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டிருந்தது. இப்போது அது மீண்டும் நிறைவேறப் போகிறது. இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்களின் வேலையினை இங்கேயே தங்கியிருந்து பார்த்து வந்தனர். அது இப்போது நீங்கியுள்ளது. எங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பயணக் காப்புறுதி இனி வேண்டியதில்லை என்று சொல்லியுள்ளது மகிழ்ச்சி
யளிக்கிறது''. 


கலைமகள் வனிதா
மலேசியா


"நான் கோலாலம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். இந்தியாவிற்கும் எனக்கும் பெரிய ஆன்மிக தொடர்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு விடுமுறைக்கும் அங்கே வருகிற பழக்கம் உண்டு. வரலாறுகளை திரும்பிப் பார்த்தால் இரண்டு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது  கண்டிப்பாக தெரியும். குறிப்பாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மலேசிய இளவரசனை வளர்த்து, தன் மகளையும் திருமணம் செய்து கொடுத்து மலேசிய நாட்டிற்கு இந்தியத் திருநாடு அனுப்பி வைத்ததாகவும் மலேசிய மக்கள் அந்த இளவரசனுக்கு முடி சூடி மகிழ்ந்ததாகவும் இன்றைக்கும் மலைப்புரத்தில் நாட்டுப் புறக்கதை ஒன்று வழங்கி வருவதை பார்க்கமுடிகிறது. 

தரை போக்குவரத்து திறந்து விடப்பட்டதால் கிடைக்கின்ற விடுமுறையை பயன்படுத்தி சிங்கப்பூரில் உள்ள முக்கிய கோயில்களுக்கும், பாரம்பரிய இடங்களுக்கும் சென்று வருவதற்கு பயனுள்ளதாக இருக்கும். 

வாகன  நெரிசலை தவிர்க்க உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பேருந்து வழிகளில் இருக்கும் தானியக்கத் தடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நிலப்போக்குவரத்து ஆணையமும், குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையமும் பல்வேறு முறைகளையும் பராமரித்து பரிசோதித்து வருகின்றனர்'' என்றார். 

பிரேமா தேவி
மலேசியா 


"மலேசியா எனும் சொல்லிற்கு ஆசியாவில் உள்ள மலைநாடு என்பது பொருள். பிற நாடுகளில் மலைகளே இல்லையா எனும் ஐயம் எழலாம். மலேசியா தீபகற்பத்தில் உள்ளதைப் போன்று மலைகளும் அவற்றை அடுத்து பள்ளதாக்குகளும் ஆசியாவின் பிற பகுதிகளில் காணப்படவில்லை என அறிஞர்கள் கூறுகின்றனர். சுமார் 200ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டு நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்து, தங்களது அயராத உழைப்பை கொடுத்தனர். நேர்மையான தொழில் செய்து பொருள் சேர்த்துப் புகழ் பெற்றிருக்கிறார்கள். 

ரப்பர் மரத்தை முதன் முதலில் பயிரிட்ட பெருமைகளும் அவர்களைச் சேரும் என்று கூறலாம். பாதை திறப்பு என்பது எல்லோரும் மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். ஓவ்வொரு ஆண்டும் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அந்நேரத்தில் நம்முடைய உறவு முறைகளையும் நேரடியாக பார்த்து தங்கியிருந்து மகிழ்ச்சியோடு வருவோம். உலகையே உருட்டி எடுத்த கரோனா பொது முடக்கத்தால் அப்பயணங்கள் ரத்தானது. ஆனால் தடைகள் நீங்கி இப்போது மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளோம். தரை வழி பாதை திறந்த நொடியே பயணிக்க வேண்டும் என்று தோன்றியது'' என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com