'அம்மா' பயணம்...!

"பெண்கள் சுற்றுலா போவது கணவன் அல்லது பெற்றோர்கள் எப்போது சுற்றுலாவுக்கு கிளம்புகிறார்கள் என்பதை பொறுத்தது.
'அம்மா' பயணம்...!

"பெண்கள் சுற்றுலா போவது கணவன் அல்லது பெற்றோர்கள் எப்போது சுற்றுலாவுக்கு கிளம்புகிறார்கள் என்பதை பொறுத்தது. எல்லா விஷயங்களிலும் பெண் கணவன் அல்லது பெற்றோர்களை சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. எனது லட்சியமே யாரையும் எதிர்பார்த்து காத்திராமல் இந்திய "அம்மா'க்களைத் தனியாக சுற்றுலா போக உற்சாகம் கொடுப்பதுதான்' என்கிறார் தீனாஸ் ராய்சிங்கானி.

தீனாஸ் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். தனது மகளான அரியன்னாவுடன் சுற்றுலா போய் வருகிறார்.

"பல இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருக்கிறது. அந்த ஆசை அவ்வப்போது பெற்றோர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் போது நிறைவேறிவந்தது. 19 வயதிலிருந்து தனியாக இந்தியாவைச் சுற்றி வந்திருக்கிறேன். எனக்குத் திருமணம் 2008 இல் நடந்தது. கணவர் இந்திய ராணுவத்தில் அதிகாரி. அதன் காரணமாக அவருடன் இந்தியா முழுவதும் சுற்றி வந்துள்ளேன். சியாச்சின் பனி படர்ந்த மலை உச்சியையும், லடாக் பகுதியையும் விட்டுவைக்கவில்லை.

கணவருடன் வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். 2014- இல் நான் கருவுற்றேன். மகள் அரியன்னா பிறந்தால். அவளுக்கு இரண்டு வயது ஆகும்முன்பு அவளுடன் தனியாக சுற்றுலா போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். "தனியே குழந்தையுடன் எப்படி சுற்றுலா போவது... சாமான்களைப் பார்ப்பாயா? குழந்தையைப் பார்ப்பாயா ... சாமான்கள் அடங்கிய பையையும் குழந்தையையும் எப்படி சுமப்பாய்..' என்று கணவருக்கும் பெற்றோருக்கும் பதைபதைப்பு. "எனக்கும் என் குழந்தைக்கும் ஒன்றும் ஆகாது' நான் சமாளித்துக் கொள்வேன்' என்று அவர்களை சமாதானம் செய்வதற்குள் பெரும்பாடாகிவிட்டது.

அவர்களிடம் அப்படிச் சொன்னாலும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பதில் எனக்கும் உள்ளுக்குள் பயம் இருந்தது. இருந்தாலும் தனியே மகளுடன் செல்லும் பயணத்தைக் சவாலாக எடுத்துக் கொண்டேன். அரியன்னாவுக்கு ஒரு வயது ஆன போது ஜெர்மனிக்கு நானும் அரியன்னாவும் சுற்றுலா சென்று வந்தோம்.

பெற்றோர், கணவர், குழந்தையுடன் நான் இதுவரை 17 நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். நான் எனது பயணங்கள் பற்றி வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். நான் எழுதுவதைப் பலர் வாசித்தாலும், மகள் பெரியவளாகும் போது நான் எழுதியதை வாசிக்க வேண்டும் என்பதற்காக எழுதி வருகிறேன். எனது அனுபவங்களை வாசித்துவிட்டு பல அம்மாக்களும் என்னிடம் பல சந்தேகங்களைக் கேட்கிறார்கள். நான் அவர்களுக்கு சுற்றுலா சமயங்களில் உணவு, உடை எங்கே தங்குவது, எப்படிப் போவது... அனைத்து விவரங்களையும் வழங்கி வருகிறேன். அவர்கள் சுற்றுலா சென்று வந்ததும் நான் அவர்களுக்குச் சொன்ன தகவல்கள் பெரிய உதவியாக இருந்தனவென்று சொல்லி நன்றி கூறுவார்கள். எனது பயணங்களின் வெற்றி அதுதான்.

அம்மாக்கள் தனியாக சுற்றுலா செல்ல வேண்டும் என்று உற்சாகப்படுத்துவதற்காக, ஊக்கப்படுத்த வலைதளத்தில் "பேக் பேக் வித் மாம்' என்ற குழுவைத் தொடங்கியுள்ளேன். 2021 -இல் ஆறு அம்மாக்கள், ஏழு சிறார்களுடன் மேகாலயா சென்று வந்தேன். இந்தியாவின் தெள்ளத் தெளிவான நதியான உம்ங்கோட் நதி தீரத்தில் ஒரு நாள் தங்கியிருந்தோம். காற்றில் மிதக்கும் அனுபவத்தைப் போல் உம்ங்கோட் நதியில் படகு சவாரி அமைந்தது. ஆற்று நீரில் படகு மிதப்பது போல நம் கண்களுக்குத் தோன்றாது. படகு ஏதோ அந்தரத்தில் பயணிப்பது போல தோன்றும். இந்த அனுபவம் மேகாலயாவில் மட்டுமே கிடைக்கும். மேகாலயா பயண அனுபவத்தை நான் எனது பக்கத்தில் சிலாகித்து எழுத, "அடுத்த பயணம் எப்போது... நானும் வருகிறேன்' என்று புதிய அம்மாக்கள் கேட்கத் தொடங்கியுள்ளார்கள்'' என்கிறார் தீனாஸ் ராய்சிங்கானி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com