எண்ணத்தின் வண்ணம்!
By எம்.மாரியப்பன் | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

உதவாத பொருள்களும் கலைநயமிக்க ஓவியமாகலாம் என்கிறார் யுவாஆதி.
நாமக்கல் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அவருக்கு சிறு வயது முதலே ஓவியம் மீதான ஆர்வம் அதிகம் உண்டு. தற்போது முப்பது வயதைத் தொட்டுவிட்ட நிலையில், சிறந்த ஓவியராகவே மாறிவிட்டார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது:
""டி.வி., சினிமா என பொழுதைக் கழிக்காமல் கையில் கிடைத்தவற்றை கொண்டு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது.
பள்ளி, கல்லூரிப் படிப்புகளில் பாடங்கள் கவனிப்பு ஒருபுறம் இருந்தாலும், ஓவியம் வரைதலிலும் கவனம் செலுத்தி வந்தேன்.
பிளஸ் 2-வுக்குப் பிறகு ஈரோட்டில் எம்.எஸ்ஸி. சாப்ட்வேர் என்ற ஐந்து ஆண்டு படிப்பை முடித்தேன். அதுதொடர்பான வேலைக்குச் செல்ல நாட்டமில்லை.
தொடக்கத்தில் துணிகளில் ஓவியம் வரைந்து அதை வீட்டில் உள்ளோரிடம் காட்டுவேன். அவர்கள் அளித்த ஊக்கம், சிறிய, சிறிய பொருள்களில் நுணுக்கமாக ஓவியங்கள் வரைவதற்கான முயற்சிகளை எடுத்தேன்.
வீட்டிலும், வெளியிடங்களிலும் கிடைக்கும் தேவையற்ற பொருள்களைச் சேகரித்து அதில் கலைநயமிக்க ஓவியங்களை வரைந்தேன். அதுவே பிறகு தொழிலாக மாறிவிட்டது.
குறிப்பாக, பாட்டில்களைச் சுத்தம் செய்து அதில் வரையும் வண்ண ஓவியங்கள் பளிச்சென பார்ப்போரை கவரக்கூடியது. இவைத் தவிர பழைய பரீட்சை அட்டைகளை சிறிது, சிறிதாக வெட்டி எடுத்து அதில் சுவாமி படங்கள், குழந்தைகள் படங்களை வரைந்தேன். அதனை வீட்டில் உள்ள பிரிட்ஜ், ஏ.சி., வாஷிங் மெஷின் போன்றவற்றின் முகப்புப் பகுதியில் ஒட்டிப் பார்த்தேன். வீடே அழகாக காட்சியளித்தது. அதன்பின்னர் அவற்றை கண்காட்சிகளில் விற்பனை செய்ய தொடங்கினேன்.
பலரும் பாராட்டியதும், ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இது எனக்கான அங்கீகாரத்தை வழங்கியது. மூன்று ஆண்டுகளாக இதனை தொடர்ந்து செய்து வருகிறேன். குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களின் சேலை, சுடிதார் போன்றவற்றிலும் விரும்பிய ஓவியங்களை வரைந்து கொடுக்கிறேன்.
சென்னை, நாமக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்காட்சிகளிலும் பங்கேற்றுள்ளேன். அனைத்து இடங்களில் நடைபெறும் கண்காட்சிகளில் வரைந்த ஓவியங்களை மக்கள் பார்வையில் இடம் பெற செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். உதவாதது என்று எந்தப் பொருளையும் ஒதுக்காதீர்கள்; திறமையிருந்தால் அவற்றையும் அழகாக்கலாம்'' என்றார்.