இஞ்சி பச்சடி
By கவிதா சரவணன் | Published On : 18th December 2022 06:00 AM | Last Updated : 18th December 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையான பொருள்கள்:
இஞ்சி - 2 அல்லது 3 பெரியதுண்டுகள்
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
வறுத்தரைக்க...
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3 முதல் 4 வரை
பெருங்காயம் - ஒரு சிறுதுண்டு
எள் - 1/2 தேக்கரண்டி தாளிக்க...
நல்லெண்ணைய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 தேக்கரண்டி
வெல்லம் - ஒருசிறுதுண்டு
செய்முறை:
இஞ்சியை நன்றாகக் கழுவி, தோலை சீவிவிட்டு துருவிக் கொள்ளவும். அல்லது மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.துருவிய இஞ்சி 3 மேசைக்கரண்டி அளவுக்கு இருக்க வேண்டும்.
புளியை ஊற வைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்துக் கரைத்து, இரண்டு அல்லது இரண்டரை கிண்ணம் அளவுக்குப் புளித் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு மேசைக் கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும், அதில் இஞ்சித் துருவலைப் போட்டு வதக்கவும். இஞ்சி சிவக்க வதங்கியதும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், எள்ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, ஆறியதும், மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி, அதில் புளித்தண்ணீரை ஊற்றவும். அதில், மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும். ஓரிரு விநாடிகள் கொதித்ததும், அதில் வதக்கிவைத்துள்ள இஞ்சித் துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, இன்னும் சில விநாடிகள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி வைக்கவும்.
சாதம், சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ளலாம். பிரட்டுடனும் சேர்த்து சாப்பிடலாம்.