சானியா ஒரு சகாப்தம்

தனது ஓய்வு அறிவிப்பின் மூலம் 21 ஆண்டுக்கால டென்னிஸ்  வாழ்க்கைக்கு 2022 சீசனோடு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்ஸா.
சானியா ஒரு சகாப்தம்

தனது ஓய்வு அறிவிப்பின் மூலம் 21 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கைக்கு 2022 சீசனோடு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்ஸா.
விளையாட்டு உலகில் இந்தியாவின் பெயரை நிமிர்ந்து நிற்கச் செய்த பெண்கள் பலர் உள்ளனர். முதன்முறையாக 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மேரி டிசெளஸா. 1951 தில்லியில் நடந்த முதல் ஆசியப் போட்டியில் 200 மீ.இல் வெண்கலம், 4-100 தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். தடகளத்தில் நீலிமா கோஸ், டென்னிஸில் ரீடா தன்வர், டேபிள் டென்னிஸில் கூல் நாசிக்வாலா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
அவர்களுக்கு பின் தடகளத்தில் பி.டி. உஷா. ஷைனி வில்ஸன், ஷைனி ஆப்ரஹாம், வந்தனா ராவ் ஆகியோர் முத்திரை பதித்தனர்.
டென்னிஸில் சானியா மிர்ஸா, கிரிக்கெட்டில் மிதாலி ராஜ், குத்துச்சண்டையில் மேரி கோம், பாட்மின்டனில் சிந்து, சாய்னா, தடகளத்தில் டுட்டி சந்த், ஹிமா தாஸ், மல்யுத்தத்தில் போகட் சகோதரிகள் உள்ளிட்டோர் தற்போது சாதித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியா மிர்ஸா 6 வயது முதலே டென்னிஸில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
தனது 17-ஆவது வயதில் 2003-இல் தொழில்முறை வீராங்கனையாக மாறி, முதன்முதலாக 2004-இல் ஹைதராபாத் ஓபன் போட்டியில் லைசெல் ஹூபருடன் இணைந்து இரட்டையர் பட்டத்தைக் கைப்பற்றினார்.
டபிள்யுடிஏ பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை: அதே ஆண்டில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றதின் மூலம் டபிள்யுடிஏ பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். 2005-இல் டபிள்யுடிஏவின் புதிய வீராங்கனை என்ற விருதும் அவர் வசம் வந்தது. மேலும் முதன்முதலாக ஆஸி. ஓபன் போட்டியில் தரவரிசையில் இடம் பெற்றதின் மூலம் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் சானியாவுக்கு கிட்டியது.
2015 முதல் ஏறுமுகம்: பல்வேறு போட்டிகளில் வெற்றி, தோல்விகளை எதிர்கொண்ட சானியாவுக்கு 2015 முதல் ஏறுமுகமாக இருந்தது. அப்போது அவரது வசம் 23 பட்டங்கள் இருந்தன.
மார்ட்டினா ஹிங்கிஸூடன் இணை: அப்போது பிரபலமான வீராங்கனையாக திகழ்ந்த மார்ட்டினா ஹிங்கிஸூடன் இணைந்து ஓபன் எராவில் சிறந்த இரட்டையர் இணை என்ற புகழ் கிடைத்தது. 16 மாதங்களில் இருவரும் சிறப்பாக ஆடி 14 பட்டங்களை கைப்பற்றினர்.
6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்:அதில் மூன்று அடுத்தடுத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களாகும். விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஆஸி.ஓபன் உள்ளிட்டவை ஆகும். இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மொத்தம் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.
நம்பர் ஒன் வீராங்கனை: 2003 முதல் 2013-இல் ஒற்றையர் பிரிவில் இருந்து ஓய்வு பெறும் வரை சானியா மிர்ஸா தான் இந்தியாவின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தார். ஹிங்கிஸூடன் இணைந்து இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 இணை என்ற சிறப்பையும் பெற்றார். உலகின் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் அவருக்கு உள்ளது.
பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு:
டென்னிஸ் விளையாட்டில் சிறு பெண்களுக்கு ஆர்வத்தை தூண்டியவர் சானியா என்றால் மிகையாகாது. தனது சிறப்பான ஆடை அலங்காரத்தாலும் சர்வதேச அளவில் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளவர்.
அதிகம் பின்பற்றப்படும் வீராங்கனை: சமூக வலைதளங்களில் அதிகம் பின்பற்றப்படும் வீராங்கனை என்ற சிறப்பும் சானியாவுக்கு உண்டு. 87 லட்சம் ஃபாலோயர்களுடன் பெடரர், ஜோகோவிச், நடால், செரீனா வில்லியம்ஸூக்கு அடுத்து 5-ஆவதாக அதிகம் பேரால் பின்பற்றப்படும் டென்னிஸ் வீராங்கனை சானியா ஆவார்.
தன்னம்பிக்கைக்கு உதாரணம்: பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஷோயிப் மாலிக்கை சானியா திருமணம் செய்த போது, பல்வேறு கிண்டல், கேலிக்கு ஆளானார். அவரது தேசபக்தி குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர்.
ஆனால் அதையெல்லாம் பொருள்படுத்தவே இல்லை அவர். சில ஆண்டுகள் காயங்களால் தளர்ந்து போனாலும், 2018-இல் ஆண் குழந்தை பிறந்தவுடன் மீண்டும் களம் கண்டு ஹோபர்ட் சர்வதேச போட்டியில் பட்டம் வென்றார்.
டென்னிஸ் மைதானத்தில் அவர் தொடக்கத்தில் ஆடிய போது, சிறிய ரக ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதகுருக்கள் பத்வா பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னோடி வீராங்கனை: தனது சிறப்பான சாதனைகள், ஆட்டத்திறமை, இந்தியாவின் முன்னோடி வீராங்கனையாக எதிர்கால நட்சத்திரங்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் சானியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com