சதிர் ஆட்டம்: கடைசிக் கலைஞர்!

ஏழு வயதில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு தேவரடியாராக விடப்பட்ட சதிராட்டக் கலையின் கடைசி வாரிசான ஆர். முத்து கண்ணம்மாள், நிகழாண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதினைப் பெறுகிறார்.
சதிர் ஆட்டம்: கடைசிக் கலைஞர்!

ஏழு வயதில் விராலிமலை சுப்பிரமணிய சுவாமிக்கு தேவரடியாராக விடப்பட்ட சதிராட்டக் கலையின் கடைசி வாரிசான ஆர். முத்து கண்ணம்மாள், நிகழாண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதினைப் பெறுகிறார்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ தேவரடியார்களான 32 பேர்களில் ஒருவர் இவர். சென்னை மாகாணப் பேரவையில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் (1947) நிறைவேற்றப்பட்ட போது முத்து கண்ணம்மாளுக்கு வயது 21.

விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினமும் நடைபெறும் வழிபாட்டின்போது முருகனைப் பற்றிப் பாடல் பாடுவதும், சுவாமி வீதியுலாவின்போது நடனமாடுவதுமே இவரது பணி. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசிமகம், தைப்பூசம் போன்ற திருவிழாக் காலங்களில் கும்மி, கோலாட்டம் என 'சதிர் ஆட்டம்' களைகட்டும்.

ஒவ்வொருவராக இறந்து போக எஞ்சி நிற்கும் ஒரேயொரு சதிராட்டக் கலைஞராகத் திகழ்கிறார் முத்து கண்ணம்மாள். அநேகமாக இவரோடு 'சதிர் ஆட்டம்' என்ற கலையும் முடிவுக்கு வருகிறது.

முத்து கண்ணம்மாளின் முக்கியமான கலைப்படைப்பாக 'விராலிமலைக் குறவஞ்சி' அறியப்படுகிறது. இவரது தந்தை ராமச்சந்திர நட்டுவனார் விராலிமலைக் குறவஞ்சியைச் செவிவழிப் பாடமாகப் பயிற்றுவித்திருக்கிறார். சுமார் 2 மணி நேரம் வரை நிகழ்த்தப்படும் இந்தப் படைப்பு, முருகப்பெருமானின் வரலாற்றை - சாகசத்தை விளக்கும் பாடல்களையும், கோலாட்டம், கும்மி உள்ளிட்ட நடனங்களையும் கொண்டது.

முத்து கண்ணம்மாளுடன்  விராலிமலைக் குறவஞ்சியும் முடிவுக்கு வருகிறது. எழுத்து வடிவாகவும் இல்லை. முத்துக்கண்ணம்மாளும் யாருக்கும் சொல்லித் தரவில்லை.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட பிறகு, தினம் தினம் முத்து கண்ணம்மாளின் வீட்டுக்கு பொதுமக்கள் பலரும், பிரமுகர்களும் வந்து வாழ்த்திச் செல்கின்றனர். 

தனக்கான இந்த விருது குறித்தும், சதிராட்டக் கலை குறித்தும் முத்துக்கண்ணம்மாள் கூறியது:

""எங்கள் பரம்பரையில் ஏழாவது தலைமுறை நான். எனது தந்தை ராமச்சந்திர நட்டுவனார்தான் கடைசித் தலைமுறைக்கு பாடம் பயிற்றுவித்த ஆசிரியர். பத்மா சுப்பிரமணியமும் கூட சில நாட்கள், எனது தந்தையிடம் படித்தவர். பாட்டுக்கு ஆடுவது  'பரதம்', பாடிக் கொண்டே ஆடுவது 'சதிர்'. எங்களுக்கு வாய்மொழியாகவே பாடல்களும் பயிற்றுவிக்கப்பட்டன.

தொண்டைமான் மன்னர்கள் நடனத்துக்குப் பிறகு எங்களுக்கு பணமும், சில ஏக்கர் நிலங்களும் வழங்கினர். சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு கட்ட வேண்டிய தீர்வைக்காக, அந்த நிலத்தையும் விற்றுத்தான் கட்டினோம்.

தேவதாசிகள் ஒழிப்புச் சட்டத்துக்குப் பிறகு மைசூரு அரண்மனை, கொடுமுடி மலைம்மன் கோயில், பெங்களூரு போன்ற இடங்களுக்குச் சென்று ஆடி வந்தோம். அதற்கு முன்பே கடவூர் ஜமீன், கோவில்பட்டி ஜமீன், ஊனையூர் ஜமீன்களுக்கும் சென்று ஆடியிருக்கிறேன்.

நடிகை சொர்ணமால்யா இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டு, விராலிமலை வந்து சென்றார். இடையே சென்னையில் 10 நாட்கள் தங்கியிருந்து அவருக்கு நடனம் சொல்லித் தந்திருக்கிறேன். அவரைத் தவிர, இப்போது இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள யாருக்கும் ஆர்வமில்லை. நாளொன்றுக்கு ரூ. 15, 30 என சொற்ப பணத்தையும் கூட நடனத்துக்கான தட்சிணையாகத் தரத் தயங்குகிறார்கள்.

சும்மா இருக்க முடியாதே, எனது பேத்திகளுக்கு நான் கற்ற நடனத்தைச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறேன்.

2018-ஆம் ஆண்டு தக்ஷிண சித்ரா அறக்கட்டளையின் 'தக்ஷிண சித்ர விருது', 2019-இல் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையின் 'கலைமுதுமணி' விருது, தமுஎகசவின் விருது, 2020-இல் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் திரைப்படப் பிரிவினர், என்னைப் பற்றி ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளனர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி நாட்டின் உயரிய விருதைப் பெற்றுள்ளது பெரும் மகிழ்வைத் தருகிறது'' என்கிறார் முத்துக்கண்ணம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com