தேங்காயை ஒதுக்க வேண்டாம்..!

வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்கும் தேங்காய், உலகின் சிறப்பான உணவுப்பொருள்.
தேங்காயை ஒதுக்க வேண்டாம்..!

வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளிலும் பங்கேற்கும் தேங்காய், உலகின் சிறப்பான உணவுப்பொருள். அத்தகைய சிறப்புடைய தேங்காயை அதிலிருந்து கிடைக்கும் எண்ணெய்யை உணவாகப் பயன்படுத்தினால் உடற்பருமன், இதய
நோய்கள், நீரிழிவு போன்றவை  ஏற்படும் என்ற ஒரு தீர்க்கமான கருத்து கண்மூடித்தனமாகப் பரப்பப்பட்டு வந்திருப்பதும், அதை முழுவதும் உள்வாங்கிக்கொண்டு தேங்காய் என்ற ஒரு அற்புத உணவுப்பொருளை இந்நோய்கள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், நன்றாக இருப்பவர்கள் கூட இனி நோய் வந்துவிடுமோ என்று அஞ்சி ஒதுக்கி, வெறுத்து வரும் அவல நிலை தற்போது பெருகிக்கொண்டு வருகிறது. இது நிச்சயம் மாற்றப்பட வேண்டும். அப்படியெனில், தேங்காயில் இருக்கும் சத்துக்கள்;  அவற்றால் ஏற்படும் நன்மைகள், உணவுப்பயன்பாடு குறித்து அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. 

தேங்காயிலுள்ள சத்துக்களுக்கும் தேங்காய் எண்ணெய்யில் உள்ள சத்துக்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கின்றது. நடுத்தரக் காயாக இருக்கும் 100 கிராம் தேங்காயில் 444 கிலோ கிராம் கலோரி, 4. 5 கிராம் புரதம், 41.6 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் இரும்புச்சத்து, 3.6 மி.கிராம் நார்ச்சத்து, 10 மி.கிராம் கால்சியம் போன்றவை இருக்கின்றன. தேங்காயாக சாப்பிடும்போது, இவையனைத்தும் அப்படியே உடலுக்குக் கிடைக்கின்றன. இதில் இருக்கும் புரதச்சத்து அனைத்து வயதினருக்கும் நல்லது. தேங்காயில் இருக்கும் லாரிக் அமிலம், தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது. அது உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. எதையும்  விரைவாக முடித்துவிட வேண்டும் என்று நினைக்கும் நாகரிக சமையலில், பதப்படுத்தப்பட்ட கொப்பரைத்தேங்காய்த் துருவலைப் பயன்படுத்துவது அதிகமாக இருக்கிறது. 

உண்மையில், உடைத்த புது தேங்காயில் இருக்கும் கலோரி, புரதம் மற்றும் கொழுப்புச் சத்தைவிட உலர் கொப்பரையிலிருந்து பெறப்படும் அதே சத்துக்கள் மிக அதிகம் . தொடர்ச்சியாக இந்தக் கொப்பரைத் துருவலை உணவில் பயன்படுத்தும்போது, ஒருநாளைக்கான மொத்த கலோரியும், புரதமும், கொழுப்பும் அதிகரிக்கவே செய்யும். நீரிழிவு, இதய நோய்கள், உடற்பருமன் நோயுள்ளவர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே கலோரியை அதிகம் எடுத்துக் கொண்டிருப்பார்கள். தேங்காய் எண்ணெய்யில் வெறும் கலோரியும், கொழுப்பும் மட்டுமே இருந்தாலும் சுத்தமான தேங்காய் எண்ணெய் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.  தேங்காய் எண்ணெய்யை பொரிப்பதற்குப் பயன்படுத்தும்போது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற வரைமுறையும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, அதுவே trans fat என்னும் மாறக்கூடிய கொழுப்பாகிறது. இது உடலுக்கு நல்லதல்ல என்பதால் அதைத்தான் தவிர்க்க வேண்டும். 

இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் இதயத் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதும், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பும், வெடிப்பும் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுவதற்கும் உடலில் கெட்ட கொழுப்பு என்று கூறப்படும் LDL கொழுப்பு அதிகமாக இருப்பதும், நல்ல கொழுப்பான HDL குறைவாக இருப்பதும் காரணம் என்றும் கூறப்படுகிறது. 

இந்த இரண்டு கொழுப்புகளில் தீமை செய்வதை மட்டுமே அதிக கவனத்தில் எடுத்துக்கொள்கிறோமே தவிர, நார்ச்சத்துள்ள கீரைகள், காய்கள், முழுதானியங்கள், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்கள் போன்றவை LDL கொழுப்பைக் குறைப்பதுடன், HDL அளவை அதிகரிக்கின்றன என்பதை மறந்துவிடுகிறோம்.  தாவர வகை எண்ணெய்களில், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் சற்றே கூடுதலாக நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், தேங்காயின் உணவியல் பயன்பாடு மிக அதிக அளவில் இருப்பதாலும் அதிக கொழுப்பால் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தேங்காயே காரணமாகக் காண்பிக்கப்படுவது ஏற்புடையதல்ல. 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, தென்னை வளர்ப்பும், தேங்காய் உற்பத்தியும் தேங்காய் எண்ணெய் சமையலுமே பிரதானமாக, வாழ்க்கை முறையாக, பொருளாதாரத்திற்கான ஆதாரமாக இருக்கும்; கேரளாவில், அனைத்துத் தரப்பினரும் இதய நோய்களாலும், உடற்பருமனாலும் அல்லவா பாதிக்கப்பட்டு, வாழ்க்கையை இழந்திருக்க வேண்டும்? இந்தக் கேள்வி பல காலமாக, பல தரப்பட்ட மக்களுக்கும் இருக்கிறது என்பது உண்மைதான். இதற்காக பல்வேறு வகையாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்தனை முடிவுகளின் பொதுக் கருத்தும், தேங்காய் எண்ணெய்யை சமையலுக்குப் பிரதானமாகப் பயன்படுத்துவதால்தான் கேரள மக்களுக்கு இதய நோய்கள் வருகின்றன என்பதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை. 

உலக சுகாதார நிறுவனமும், பிற பல்கலைக்கழங்களும் இந்திய மாநிலங்களில் இதய நோய்களின் தாக்கம் குறித்து  2016, 2019, 2020 ஆம் ஆண்டுகளில் செய்த ஆய்வில், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் குருதி ஊட்டக் குறை நோய் மற்றும் பக்கவாதம் அதிகம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளனர். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பஞ்சாப், தமிழ்நாடு, ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உச்சத்தைத் தொட்டுள்ளன. 

கேரளா பின்சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் காரணமாக தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பயன்பாடு இருப்பதாகக் கூறவில்லை. ஏனெனில் கடந்த 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர், இதே உணவுப் பழக்கத்தைக் கொண்ட இவர்களின் வாழ்க்கை முறையும் உடல் ஆரோக்கியமும்  நன்றாகவே இருந்ததுடன் தொற்றா நோய்களும் அதிகமாக இருந்ததில்லை. மாறாக, தற்போதிருக்கும்  வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பாரம்பரியம், சமூக உளவியல் அழுத்தம், முழு உணவுமுறை, உடலுழைப்பு, பிற நோய்கள், அதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் போன்ற அனைத்தும் காரணங்களாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கூடுதல் தகவலாக, தற்போது, இந்திய மக்கள் தங்கள் உணவுமுறையில் காய்கள், பழங்கள், கீரைகளை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பரிந்துரைத்துள்ள அளவீட்டின்படி எடுத்துக்கொள்ளாததும், நீரிழிவு, உடற்பருமன், இதயநோய்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

நார்ச்சத்து நிறைந்த கீரை, முழு தானியங்கள், காய்கள் போன்றவற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பயன்படுத்தும்போது, கொழுப்பு சேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நமது உணவும் அவ்வாறே இருக்கிறது என்பதையும் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டும். தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகள் அனைத்தும், குறிப்பாக தென் தமிழ்நாட்டின் உணவுகளான சட்னி, துவையல், புட்டு, கொழுக்கட்டை, உருண்டைகள், ஆப்பம், இடியாப்பம், குழம்பு வகைகள், கூட்டு, பொரியல் என்று ஏறக்குறைய அனைத்து உணவு வகைகளிலும் தினசரி தேங்காய் பயன்பாடு காலங்காலமாக இருந்துகொண்டு வருகிறது. 

 தேங்காய்ப்பால் சேர்த்த காலை உணவும், திண்பண்டங்களும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று என்பதுடன், புதுத் தேங்காயிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பால், இன்றளவும் வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் இருப்பவர்களுக்கு சிறந்த நிவாரண உணவாகப் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. 

எனவே, தேங்காயை உணவில் பயன்படுத்துவதால் மட்டுமே ஒருவருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கோ இதய நோய்களும் பிற தொற்றா நோய்களும் வருகிறது என்பது தவறான கருத்து.  தேங்காயை அப்படியே சாப்பிடுவதும், நார்ச்சத்துள்ள உணவில் சேர்த்து சாப்பிடுவதும், பால் பிழிந்து உணவில் சேர்த்துக்கொள்வதும், கலப்படமில்லாத சுத்தமான, தரமான தேங்காய் எண்ணெயை ஒரு சில நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடிக்கும் மருந்தாகப் பயன்படுத்துவதும் உடலுக்கு ஆரோக்கியத்தையே கொடுக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com