தில்லியில் தமிழ்ப் பொங்கல்!

அண்மையில்  தலைநகர் தில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை என்றாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். என்ற தேசிய சேவை திட்ட
தில்லியில் தமிழ்ப் பொங்கல்!

அண்மையில்  தலைநகர் தில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெறவில்லை என்றாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த என்.எஸ்.எஸ். என்ற தேசிய சேவை திட்ட தன்னார்வலர்களான கல்லூரி மாணவ, மாணவியர்கள் பத்துப் பேர்  கலந்து கொண்டார்கள். 

டிசம்பர் 30 ஆம் தேதியே தில்லி புறப்பட்டுச் சென்ற அவர்கள் தேசிய அளவிலான என்.எஸ்.எஸ். முகாமில் ஒரு மாதகாலம் பங்கேற்றுவிட்டு, குடியரசு தின அணிவகுப்பிலும் கலந்து கொண்டு ஜனவரி இறுதியில் ஊர் திரும்பினார்கள். 

தில்லியில் இருக்கும்போது, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை சந்தித்து உரையாடியவர்கள், சென்னை திரும்பியதும் முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்து உரையாடினார்கள். அந்தப் பத்துபேர்களில் ஒருவரான சரண்யா, கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வி இயல் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவி.  நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

எளிமையான விவசாயத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, தலைநகர் தில்லிக்குச் சென்று குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டு தில்லி ராஜ பாதையில் வீரநடைபோடும்  வாய்ப்பு கிட்டியதும், பிரதமர் நரேந்திரமோடியுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டதும் தன் வாழ்க்கையில் பெற்ற பெரும் பாக்கியம் என்று கூறுகிறார். சென்னையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு, தனது சொந்த ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னால்,   சக என்.எஸ்.எஸ். மாணவ, மாணவிகளோடு தில்லி சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்: 

""ஊட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியின் குடும்பத்துப் பெண் நான். என் சிறு வயதிலேயே, என் அப்பா ஒரு விபத்துக்குள்ளாகி, வேலைக்குச் சென்று சம்பாதிக்க முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டார். எனவே, அம்மாதான் என்னையும் என் தம்பியையும் கஷ்டப்பட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாக, என் தம்பி கல்லூரிக்குச் செல்லாமல், வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. எனக்கு ஸ்போர்ட்ஸில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவேதான், கல்லூரியில் உடற்கல்வி இயல் பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கிறேன். மேலும், நான் தேசிய அளவி லான ஒரு   வாலிபால் பிளேயர். 

குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டது பற்றி...

நான் எங்கள் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ். உறுப்பினர். ஆகவே, என்.எஸ்.எச். மூலமாக பல்வேறு வகையான சமூதாயப் பணிகளை செய்வோம். தில்லி குடியரசு தின அணிவகுப்பில் இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  என்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பங்கேற்பது மரபு. வழக்கமாக 150 பேர் அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், கட்டுபாடுகள் காரணமாக இவ்வாண்டு 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.  இதற்கான தேர்ந்தெடுக்கும் முறை கடினமானது.  சமூக சேவையில் ஆர்வம்,  உடல் வலிமை, தனிநபர் கலை திறன் உட்பட பல்வேறு திறன்களின் அடிப்படையில் தேர்வு செய்வார்கள். மொத்தம் நான்கு கட்டங்களில் தேர்ந்து எடுப்பார்கள். தென்னிந்திய அளவில் பெங்களூரில் நடந்த முகாமில், தில்லி செல்பவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் ஐந்து மாணவர்கள், ஐந்து மாணவிகள் என மொத்தம் பத்து பேர் தில்லி செல்லத் தேர்வு செய்யப்பட்டோம். 

பூபாலன்(திருப்பூர்),  நவீன் சங்கர் (கோவை), பிரவீன் குமார் (சென்னை), அரவிந்த் (திருச்சி), கீர்த்திவாசன்(புதுவை), பபிதா(மதுரை), நிவேதிதா (புதுக்கோட்டை), இளமதி(புதுவை), மலர்கொடி (கோவை) ஆகிய ஒன்பது பேர் தமிழ்நாடு, புதுச்சேரி குழுவில் இடம்பெற்று இருந்தார்கள். எங்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகேஷ் ராஜ்.

 பயண அனுபவம் எப்படி இருந்தது?

நாங்கள் டிசம்பர் மாதக் கடைசியிலேயே சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லிக்குச் சென்றுவிட்டோம். அங்கே அகில இந்திய அளவிலான என்.எஸ்.எஸ். முகாம் நடந்தது. எங்களைப் போலவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் என்.எஸ்.எஸ். உறுப்பினர்களான கல்லூரி மாணவர்கள் வந்திருந்தார்கள்.

எங்களுக்கு அங்கே அணிவகுப்பில் எப்படி நடந்து செல்ல வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. பிற்பகலில், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் யோகா, உடல்நலம், சுகாதாரம் முதல் டிஜிட்டல் இந்தியா வரை பல்வேறு தகவல்களையும், பல புதிய விஷயங்களையும் சொல்லிக் கொடுத்தார்கள். 

இரவில், கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகி இருந்தது. அதாவது தினமும் ஒரு மாநிலத்துக்கு என்றுநேரம் ஒதுக்கப்படும். அம்மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் சுமார் இரண்டு மணிநேரத்துக்கு கலைநிகழ்ச்சிகள் வழங்க வேண்டும். 

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளன்று நாங்கள் வழங்கிய கரகம், சிலம்பம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் போன்றவற்றை மற்ற மாநிலத்தவர்கள் ரசித்துப் பார்த்துப் பாராட்டினார்கள். 

முகாமின் முக்கிய அம்சம் என்ன?

ஜனவரி மத்தியில் பொங்கல் வந்தபோது, அங்கே நாங்கள் பொங்கல் வைத்து கொண்டாடினோம். முகாமிலேயே தமிழ் எழுத்துகள் இடம்பெறும் வகையில் கோலங்கள் போட்டு, பானை வைத்து பொங்கல் செய்து, முகாமில் இருந்த சுமார் 200 பேருக்கும் வழங்கி மகிழ்ந்தோம்.  அங்கே இணை மாநிலங்கள் என்று இரண்டிரண்டு மாநிலங்களை ஜோடி சேர்த்தார்கள். அவர்கள் தங்களுக்குள் இருமாநில வரலாறு, கலாசாரம் பற்றி பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும். 

எங்களோடு இணைந்தவர்கள் ஜம்முகாஷ்மீர் குழுவினர். நாங்கள் அவர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டோம். அவர்களுக்கு நம் பாரம்பரிய உடைகளை அணிவித்தோம்.  மிகவும் வித்தியாசமாக இருந்தது அந்த அனுபவம்.  இரு மொழிகளில் இருந்தும் சில வார்த்தைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டோம். 

என்.எஸ்.எஸ். மாணவர்கள் அணிக்காக பிரதமரால் தனியாக நேரம் ஒதுக்க முடியாமல் போனதால், என்.சி.சி. மாணவர்களுடன் சேர்ந்து சென்று பிரதமரை சந்தித்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோம்.  

தமிழக பிரமுகர்கள் யாரையாவது சந்தித்தீர்களா?

தில்லி வந்திருந்த கேரள அமைச்சர், கேரள மாணவர்கள் அணியை அழைத்து, விருந்தளித்து, நினைவுப் பரிசும் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்போது, நாமும் நம் ஊர் வி.ஐ.பி.க்கள் யாரையாவது சந்தித்தால் நன்றாக இருக்குமே என  நினைத்தோம்.  எங்களுக்கும் எம்.பி. கனிமொழியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களை அன்புடன் உபசரித்து விருந்தளித்த அவர், பாராளுமன்றத்தின் படம் பொறித்த காபி கோப்பையை நினைவுப் பரிசாக வழங்கி, எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் சென்னை திரும்பியதும், முதலமைச்சரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com