46 ஆண்டு கலைப்பயணம்!
By பொ.ஜெயச்சந்திரன் | Published On : 16th February 2022 06:00 AM | Last Updated : 16th February 2022 06:00 AM | அ+அ அ- |

இலங்கை நாட்டியக் கலா மந்திர் நிறுவன இயக்குநர், சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் நடன ஆசிரியர் கலாசூரி-வாசுகி ஜெகதீஸ்வரன். கடந்தாண்டு அயோத்தியில் நடைபெற்ற விழாவில் இவரின் மாணவர்கள் பங்கேற்ற "ஸ்ரீராம ராஜ்யபிஷேகம்' பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தவிர, முதலாவது சார்க் உச்சி மாநாடு, 6-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, இலங்கை சுதந்திரப் பொன் விழா, போன்ற பல விழாக்களிலும், இந்தியாவில் பெங்களுரு, ஐதராபாத், புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம், உலக தமிழ் செம்மொழி மாநாடு போன்றவற்றிலும் இவரது தலைமையில் நடனம் அரங்கேறியுள்ளது. அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""எனது பெற்றோர் மிருதங்க வித்வான் கே. சண்முகம்பிள்ளை, விஜயலெட்சுமி ஆகியோர் சிறுவயது முதல் நடனத்தையும் சங்கீதத்தையும் எனது முதல் குருவாக இருந்து கற்று கொடுத்தனர். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்தான் அவருக்கு பூர்வீகம். திருமணத்தின் பின் இலங்கையிலேயே தங்கி விட்டார். சென்னையில் அடையாறு லட்சுமணனின் பரத சூடாமணி நிறுவனத்தில் நடனம், நட்டுவாங்கம் பயின்று பட்டம் பெற்றேன். இதற்கு மேலாக கெளரி முத்துக்குமாரசாமி, கலைமாமணி சுவாமிமலை ராஜரத்தினம் பிள்ளையவர்களிடமும் பரதத்தில் சிறப்புப் பயிற்சிகளையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. சாந்தா தனஞ்ஜெயனுடன் இணைந்து இந்தியாவில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் அனுபவமும் கிடைக்கப் பெற்றது. எனது முதல் நடனம் 1963-ஆம்ஆண்டில் யாழ்ப்பாணம் மருதனார் மடம் ராமநாதன் கல்லூரியின் பொன்விழாக் கலை நிகழ்ச்சிகளின் போது இடம் பெற்றது. எனது பங்களிப்பானது அன்று முதல் இன்று வரை 5 தசாப்தங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
கலைத்துறையில் 46ஆண்டுகளாக முழுநேரத்தையும் செலவிட்டாலும் நாட்டிய நிகழ்ச்சி உருவாக்குவதற்கும் நடத்துவதற்கும் பல்வேறு இடங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. அப்பொழுது எத்தனையோ சவால்களை எதிர் நோக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அதற்கான சரியான தீர்வுகளையும் மேற்கொண்டு வெற்றி பெறுகிறோம்.
அந்த வெற்றிகள் சில நேரங்களில் கண் முன்னே வந்து சென்றாலும் அதைவிட கண்ணைக் கவரும் லேசர் ஒளிக் காட்சிகளுடன் சரயு நதிக்கரையில், 12லட்ச தீப விளக்கு, வானவேடிக்கை இவை அனைத்துக்கும் மத்தியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் எமது நிகழ்ச்சி நடைபெற்று பாராட்டு பெற்றது. இராமபிரான் தனது அவதார முடிவினைக் கண்ட சரயு நதியின் குப்தர் காட் கரை மண்ணையும் எமது வழிபாட்டிற்காக கொண்டு வரும் பாக்கியமும் கிடைத்தது. இந்தப் பயணம் மறக்க முடியாதது''.