திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள்!

கீதா ரவிசந்திரன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை வருமானவரி ஆணையராகப் பதவி வகிக்கிறார்.  
திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள்!


கீதா ரவிசந்திரன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை வருமானவரி ஆணையராகப் பதவி வகிக்கிறார். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்; சென்னையில் படித்தவர். அவருடன் ஒரு சந்திப்பு:

""நான் சென்னையில் ரோஸரி மெட் ரிக் பள்ளியிலும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் படித்தேன். என் அப்பா கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றியவர். நாங்கள் மூன்று சகோதரிகள். பெண்களுக்கு படிப்பு முக்கியம் என்று அந்தக் காலத்திலேயே வலியுறுத்துவார் அப்பா.

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத உங்களை ஊக்குவித்தவர் யார்?

அப்பாவும், எனது மூத்த சகோதரியும்தான் என்னை சிவில் சர்வீஸ் எழுத ஊக்குவித்தவர்கள். என் சகோதரி ரிசர்வ் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். அவரும், என் அப்பாவும்தான் சிவில் சர்வீஸ் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, எனக்கு ஆர்வம் ஊட்டியவர்கள். பரிட்சைக்கு எந்தெந்த பாடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும்? என்றெல்லாம் வழிகாட்டி, என்னை ஊக்கப்படுத்தியவர்களும் அவர்களே. நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி மையங்கள் எதிலும் சேரவில்லை; சொந்தமாகவே படித்தேன். தினமும் சுமார் நான்கு மணி நேரம் ஒதுக்கி, திட்டமிட்டு ஆர்வத்துடன் படித்தேன். என் அப்பா, சகோதரிகள் மற்றும் சிநேகிதிகளுடன் பல்வேறு விஷயங்கள், நாட்டு நடப்புகள் குறித்து விவாதித்து, நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வருமானவரித்துறைக்கு வந்தேன்.

ரோல் மாடல் யார்?

எனது பணியின் ஆரம்ப காலத்தில் உஷா கோவிந்தன் என்று ஒரு பெண் அதிகாரி இருந்தார். மிகவும் துணிச்சலான பெண்மணி. தெளிவாக சிந்திக்கக் கூடியவர். அப்போது பணி தொடர்பாக என்ன பிரச்னையானாலும், சந்தேகமானாலும் அவரைத்தான் நான் அணுகுவேன். அவர் உடனுக்குடன் சிந்தித்து, தீர்வுகளை, ஆலோசனைகளை வழங்குவார். அவை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

பொறுப்பான அரசு உயர் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு வீட்டில் பல்வகையான குடும்பப்பொறுப்புகள் இருக்கும்; அலுவலகத்திலும் சவாலான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எனவே, ஒர்க்-லைஃப் பேலன்ஸ் என்பது ஒரு சவாலான விஷயம்!

எப்படி சமாளிக்கிறீர்கள்?

என் கணவரும் வருமானவரித்துறையில்தான் பணிபுரிகிறார், என்னுடைய பேட்ச்மேட்தான். என்னுடைய பணிக்காலத்தில் சென்னை, மும்பை, நாக்பூர், பெங்களூரு என்று பல்வேறு இடங்களிலும், வருமானவரித்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் பணியாற்றி இருக்கிறேன். குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதுதான் மிகுந்த சவாலாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில், அலுவலகத்திலேயே அமர்ந்து வேலை செய்யும்படியான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு ஓரளவுக்கு சமாளித்தேன்.

மேலும், வருமானவரித்துறை பணி என்பது ஒரு டீம் ஒர்க். உங்களுக்குக் கீழே பணிபுரிவபர்கள், மேலதிகாரிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு குழுவாக செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். வருமானவரித்துறை பணியில் அந்தக் கலாசாரம் மிக நன்றாக வேறூன்றி இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பினரது ஒத்துழைப்புடன் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணிகளைச் செய்து முடிக்க முடிகிறது.

வருமானவரித்துறை என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படுகிறதே! அதற்குக் காரணம் என்ன?

வரிவசூல் என்பது தொன்றுதொட்டு இருக்கிற ஒரு விஷயம் என்பது சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் தெரியும். வரி வசூலிப்பவர் என்றாலே மக்களுக்கு பிடிக்காதவர் என்று ஒரு பிம்பம் அந்தக் காலம் முதலே மக்கள் மனதில் அழமாக இருந்து வருகிறது. வருமானவரி செலுத்துவது என்பது வருமானவரித்துறை விதிகளுக்கேற்ப மக்கள் ஆற்றவேண்டிய கடமை. எனவே, நேர்மையாக வரி செலுத்தும் எந்தக் குடிமகனும் வருமானவரித்துறை குறித்து பயப்படவேண்டிய அவசியமில்லை.

மேலும், வரிகள் மூலமாக மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகை, இந்த நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில் மீண்டும் மக்களுக்காகவே அரசாங்கத்தால் செலவிடப்படுகிறது. அதன் மூலமாக சாலை வசதி, கல்வி மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.

எனவே, வரி செலுத்துவது என்பது மக்களின் அடிப்படைக் கடமை. அப்படி செலுத்தாமல் இருப்பவர்களிடமிருந்து சட்டப்படி வரியை வசூலிக்க வருமானவரித்துறை தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

வருமானவரித்துறையில் ஏற்பட்டிருக்கும் சமீபகால மாற்றங்கள் குறித்து?

வருமானவரித்துறை என்பது, வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து வரிவசூல் செய்யும் துறை என்பதைவிட, மக்களுக்கு எளிமையாக தங்கள் வரிகளை செலுத்துவதற்கு உதவும் துறை என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற பல உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் வரி விகிதங்கள் குறைவுதான் என்று சொல்ல முடியும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் வருமான வரிவிகிதங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
சமீபகாலமாக, வருமானவரித்துறையில் பல்வேறு வகையான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மக்கள் வரி செலுத்தும் முறைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோருக்கு, வருமானவரித்துறை அதிகாரிகளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லாமல், ஆன் லைன் மூலமாகவே, நிவாரணம் பெறும் முறைகள் அறிமுகமாகியுள்ளன. இதனால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது. நவீன தொழில்நுட்பத்தின் பலனாக இந்த மாற்றங்கள் எல்லாம் சாத்தியமாகி இருக்கிறது.

சமீபத்திய பட்ஜெட்டில் கூட, வரி செலுத்துபவர்கள், தங்கள் வருமானவரி ரிட்டர்னை சமர்பித்த பிறகும் கூட அடுத்த இரண்டாண்டு காலத்துக்குள், வருமானம் ஏதாவது விடுபட்டிருந்தால், அதனை சரி செய்து திருத்தப்பட்ட ரிட்டர்ன் சமர்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மறக்க முடியாத அனுபவங்கள்?

நிறைய உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் மீடியாவில் பகிர்ந்துகொள்வது சரியாக இருக்காது. அது போன்ற சந்தர்பங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நான் கற்றுக் கொண்ட ஓர் உண்மையை மட்டும் என்னால் பகிர்ந்துகொள்ள முடியும். முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவான கேஸ்களில் கூட கேûஸ முழுமையாகப் புரிந்துகொண்டு, மூன்றாவது மனிதராக அந்தக் கேûஸ அணுகி, விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுப்பதே சரி.

பெண்களுக்கு உங்கள் செய்தி என்ன?

பெண்களின் அறிவும், ஆற்றலும், திறமையும், மதிநுட்பமும் அபாரமானது. அவர்களால் எதையும் சிறப்பாக செய்து, சாதனைகள் புரிய முடியும். ஆனால், அவர்கள் தங்கள் மீது, தங்கள் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்து, பாடுபட வேண்டும். உங்களைப் பற்றி, மற்றவர்கள் சொல்லும் அபிப்ராயங்களின் அடிப்படையில் உங்களின் திறமையை நீங்கள் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்! வாழ்க்கையில் உங்களால் சாதிக்க முடியும்'' என்றார்.

படம்: ஏ.எஸ். கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com