உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 6: கற்கை நன்றே கற்கை நன்றே...

கற்றுக்கொண்டே இருக்கும் வரை மனிதன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். கற்றுக்கொள்வதிலும் சிறப்பானது நம்முடைய அனுபவங்களில் இருந்தே பாடம் கற்பது தான்.
உன்னால் முடியும் நம்பு.. நம்பு! - 6: கற்கை நன்றே கற்கை நன்றே...

கற்றுக்கொண்டே இருக்கும் வரை மனிதன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றான். கற்றுக்கொள்வதிலும் சிறப்பானது நம்முடைய அனுபவங்களில் இருந்தே பாடம் கற்பது தான். வெற்றியோ தோல்வியோ இரண்டுமே நமக்குப் பாடம் புகட்டுகின்றன என்பதை மறுக்க முடியாது. நடக்கக் கற்றுக் கொள்ளும் குழந்தை தவறி விழும்பொழுது எழுந்து நிற்கக் கற்றுக்கொள்கிறது. விழுந்து விடாமல் இருப்பதற்கான ஜாக்கிரதை உணர்வையும் அதிலிருந்தே கற்றுக்கொள்கிறது. குழந்தைகளுக்கு உள்ள கற்றுக் கொண்டு முன்னேறும் இந்தப் பண்பை நாம் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் ஒவ்வொருவரும் தங்களது தோல்வியிலிருந்தே வெற்றிக்கான வழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். 

தாமஸ் ஆல்வா எடிசன், மின்விளக்கைக் கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியில் பலமுறை தோல்வி அடைந்தார். அதைப்பற்றிப் பலரும் அவரிடம் விசாரித்தார்கள். நான் தோல்வி அடையவில்லை எப்படிச் செய்தால் மின்சார விளக்கு செயல்படாது என்பதையெல்லாம் கண்டுபிடித்தேன். மாற்று வழிகளை முயற்சி செய்வதற்கு அந்தக் கண்டுபிடிப்புகள் தான் காரணம் என்று சொன்னார். தோல்விகளையோ அல்லது வெற்றி தாமதப்படுவதையோ இப்படிப் புரிந்து கொண்டு புதிய மாற்று வழிகளைக் கண்டால் மட்டுமே வெற்றிக்கான பாதையைக் கண்டறியமுடியும்.

"தோல்வியில் கலங்கேல்" என்கிறார் பாரதி. தோல்வி என்பது வெற்றிக்கான படி என்று சொல்வதன் பொருள் அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதால் தான். புதிய படிப்பினைகளோடு ஒன்றை அணுகும் பொழுது வெற்றிக்கான சாத்தியங்களும் அதிகரிப்பது இயல்பே. மைக்கேல் பாரடே என்றொரு அறிவியல் அறிஞர். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். வேதியியல் துறையில் பெரும் கண்டுபிடிப்புகளைத் தந்தவர். காந்தவியல் மின்காந்தவியல் மின்சாரம் என்று அவருடைய கண்டுபிடிப்புகள் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கான அடித்தளம். மைக்கேல் பாரடே மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஒரு வேளை உணவுக்கே வழியற்ற நிலையில் வாழ்ந்தவர். வறுமை காரணமாக பள்ளிப் படிப்பைக் கூடத் தொடர முடியாமல் போயிற்று. 

பாரடே தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க ஏதேனும் வேலைக்குச் சென்றாக வேண்டும் எனும் கொடுமையைத் தன் பனிரெண்டாம் வயதில் அனுபவித்தவர். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது புத்தகங்கள் பைண்டிங் செய்யும் வேலை. ஒரு நிறுவனத்தில் பைண்டிங் செய்யும் வேலைக்குச் சென்றவர் அங்கே வரும் புத்தகங்களைப் படித்து விட்டுத் தான் கொடுப்பார். பகலில் வேலை; இரவில் படிப்பு என்று தொடர்ந்தார்.

ஒருமுறை வேதியியல் தொடர்பான புத்தகம் ஒன்று பைண்டிங் செய்ய வந்திருந்தது. பாரடேவுக்கு அந்தப் புத்தகம் பல புதிய விஷயங்களைச் சொன்னதோடு அவருக்குள் இருந்த பல வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருவதாக இருந்தது. இதனால் புத்தக உரிமையாளரிடம் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருவதாகப் பணிவோடு கேட்டார். பாரடேயின் ஆர்வத்தைக் கண்டவர் புத்தகத்தைத் தந்ததோடு அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பெயர்பெற்ற "ராயல் சொசைட்டி' பற்றிச் சொல்லி அங்கே அனுப்பி வைத்தார். 

அங்கே ஹம்ப்ரி டேவி என்ற அறிவியல் அறிஞரின் உரைகளைக் கேட்டு தொடர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டு வந்தார். வறுமை பசி வேலை எல்லாவற்றையும் தாண்டி தொடர்ந்து முகாம்களுக்கு வந்து கற்றுக் கொள்வதில் அவர் காட்டிய ஆர்வத்தை ஹம்ப்ரிடேவி கவனித்துக் கொண்டார். அவரிடம் உதவியாளராக விரும்பினார் பாரடே என்றாலும் அது உடனடியாகக் கைகூடவில்லை. பைண்டிங் வேலையைத் தொடர்ந்து கொண்டே அறிவியல் கற்றுக் கொண்டிருந்தார். 

ஹம்ப்ரிடேவி விபத்தில் கண் பார்வையை இழந்த பொழுது அவரின் உதவியாளராக அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது. என்றாலும் வறுமை ஒருபுறம் வாட்டியது. அதோடு பாரடே கொல்லர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஹம்ப்ரிடேவியின் மனைவி அவரை சிறுமைப் படுத்திக் கொண்டும் அன்றைய சமூகத்தில் பெரும் கொடுமையாக இருந்த தீண்டாமையைத் தொடர்ந்து பின்பற்றியும் வந்தார். இதெல்லாம் பாரடேவுக்கு மனவேதனையை ஏற்படுத்தின என்றாலும் தான் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் ஹம்ப்ரியோடு இருக்க வேண்டும் என்ற முடிவில் அனைத்தையும் சகித்துக் கொண்டார். கற்றல் திறம் ஆர்வம் இவற்றால் குருவை மிஞ்சிய சீடனாகப் பெரும் புகழ் பெற்றுவிட்டார் பாரடே. 

பாரடே "சர்' பட்டம் பெறுவதற்குத் தகுதியானவர் என்று அவரது பெயரை முன்மொழிந்த பொழுது அதனை வேண்டாம் என மறுத்து தன் கற்றலும் ஆராய்ச்சியும் தொடர்ந்தால் போதும் அதற்கு இடையூறான விஷயங்கள் தேவையில்லை என்றே விலகி இருந்தார். உலகம் வியக்கும் பல வேதியியல் கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் என்ற நிலையிலும் பாரடே கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. முதுமையிலும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய ஆராய்ச்சிகளில் பல இளம் விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட்டார். 

பாரடே பனிரெண்டு வயதில் பள்ளிப் படிப்பை விட்டு சுயமாகப் படிக்கத் தொடங்கியவர். இறுதி மூச்சு வரை படித்துக் கொண்டே இருந்தார். வறுமை வாட்டியது. கல்வி மறுக்கப்பட்டது. தீண்டாமைக் கொடுமைகள் துன்புறுத்தின எதுவும் அவரின் ஆர்வத்தை சாம்பலாக்க முடியவில்லை. உலகின் மிகச் சிறந்த 
அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை அடைந்தார். 

இவர்களைப் போன்றோர் நமக்குக் கற்றுத் தருவது என்ன? கற்பதற்கான களம் உலகம் முழுவதும் விரிந்து கிடக்கிறது என்பதைத் தானே. இதெல்லாம் விதி விலக்குகள். எங்கேயோ என்றைக்கோ சாதித்தவரைப் பற்றிச் சொல்லிவிட்டால் நாமும் அப்படி வாழ முடியுமா? என்ற நம்பிக்கையின்மையும் இயல்பாக எழக்கூடும். நான் வாழும் சிற்றூரில் இதெல்லாம் கதையாகப் படிக்கலாம் வேறென்ன செய்ய இயலும்? கேள்விகள் எழும்.  

அதனால் தான் நம் மண்ணில், "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று சொல்லிக்கொடுத்தார்கள் "கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்று ஒளவைப் பாட்டி நினைவூட்டினார். இதற்கான வாழும் உதாரணங்கள் நம்மோடு நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். 

மங்களா மணி என்பவரைப் பற்றிப் பலரும் அறிந்திருப்போம். ஆந்திர மாநிலத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இந்த உலகின் அற்புதங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றைக்கும் மாணவியாகவே வாழ வேண்டும் என்ற ஆவல் தனக்கு இருக்கிறது என்று மலர்ந்த முகத்தோடு தெரிவிக்கும் இவர் இஸ்ரோ விஞ்ஞானி. பள்ளியில் படிக்கும் பொழுதே அறிவியல் தொடர்பான தகவல்களை செய்தித் தாள்களில் பார்த்தல் அதனை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அடிக்கடி படித்துக் கொள்வாராம். 

அப்துல்கலாமோடு இணைந்து பணியாற்றி பல நுட்பங்களைக் கற்றுக் கொண்டவர். எந்த ஓர் ஆராய்ச்சியிலும் ஏன் எப்படி என்பதோடு அடுத்தது என்ன? என்ற வினாவோடு தொடர்ந்து புதிதாக கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். சறுக்கல்கள் புதிய பாதைகளைக் காட்டக்கூடும் என்ற படிப்பினையை  அப்துல்கலாமிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று நமக்கும் அந்தப் படிப்பினையைக் கடத்துகிறார்.   

தன் வாழ்நாளில் பனிச்சாரலைக் கண்டதே இல்லை.  ஆனால் வாழ்க்கை அவரை அண்டார்டிகாவில் கொண்டு போய் நிறுத்தியது. 403 நாட்களை பனி படர்ந்த ஆண்டார்டிகா நிலப்பரப்பில் கழித்து சாதனை படைத்துள்ளார். மைனஸ் 90 டிகிரி செல்சியசுக்கு குறைவான பகுதியில் வாழ்வதென்பது அரிதான, கடினமான விஷயம். ஆனால் 56 வயதான மங்களா, ஓர் ஆண்டிற்கு மேல் அங்கே வசித்துத் திரும்பினார். 

மங்களா மணி, 23 பேர் அடங்கிய ஆய்வுக்குழுவில் நவம்பர் 2016-ம் ஆண்டு அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்திய ஆய்வுக் கூடத்துக்கு சென்றார். இஸ்ரோவின் முதல் போலார் பெண்மணி என்ற கெளரவத்தையும் பெற்றார். அண்டார்டிகாவில் ஆய்வுகூடத்தின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டு அண்டார்டிகாவில் சேட்டிலைட் தகவல்களை சேகரித்து ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்புவது இவரது பணி. 

மங்களா இந்தப் பயணத்துக்கு முன்பு,  பனி  சூழ்ந்த பகுதிகளுக்கு சென்றதே இல்லை.  அண்டார்டிகா பயணத்தை மேற்கொள்ளும் முன் உத்தரகாண்டில் உள்ள சமோலி மாவட்டத்தில் பத்ரிநாத்தில் தங்கியிருந்து எடுத்துக் கொண்ட பயிற்சி பெரிய அளவில் அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. 

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் அடி எடுத்து வைத்துள்ளனர்.  வரும் வாய்ப்பை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். வானம் மட்டுமே எல்லை இல்லை, கற்றல் அதையும் தாண்டி உள்ளது என்று தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கும் வரை வாய்ப்புகளும் சாதனைக்கான களமும் சாத்தியமாக இருக்கும் என்று தன் அனுபவத்தை நம் போன்ற பெண்களுக்கு வழிகாட்டும் ஒளியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நம்மோடு இதே கலாச்சார சூழலில் வாழும் நம் சகோதரி மங்களாமணி தன் அனுபவத்தால் நமக்கு உணர்த்துவது இடையறா கற்றல். கற்றுக்கொண்டே இருப்போம். மங்களாமணி சொல்வதைப் போல வானம் மட்டுமல்ல அதற்கப்பாலும் நாம் தொடர்ந்து உயரலாம். உயர்வை நோக்கி இணைந்து பயணிப்போம்.

தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com