சங்க பாடல்களுக்கு நடனம்!

நாட்டுப்புற நடனமானாலும்,  கலை சார்ந்த நடனமானாலும் சரி அவை ஆன்மிகக் கதைகளையும்- நீதிக்கதைகளையும் விளக்குவதாகவே அமைந்துள்ளன.
சங்க பாடல்களுக்கு நடனம்!

நாட்டுப்புற நடனமானாலும்,  கலை சார்ந்த நடனமானாலும் சரி அவை ஆன்மிகக் கதைகளையும்- நீதிக்கதைகளையும் விளக்குவதாகவே அமைந்துள்ளன. மொழித்தடைகளை தாண்டி சைகைகள் மூலம் பலவற்றை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த சைகைகளை கூர்ந்து கவனிக்கும்போது,  நாம் அன்றாடம் பழக்கப்படுத்தும் சைகைகளுக்கும், இவற்றிற்கும் வேறுபாடு இல்லை என்பதை அறியலாம். 

அஞ்சலி என்ற சைகை நாம் பொதுவாக வணக்கம் என்று குறிப்பிடுவதாகும். அதுபோன்று, கத்தரி முகா என்ற சைகை கத்தரிக்கோலை குறிக்கிறது. தெற்கத்திய மொழிகளில் இதை கத்தரி என்றும் கூறுவார்கள். கத்தரி என்பது சமஸ்கிருத வார்த்தை. கை சைகைகள் மட்டுமல்லாமல், முக பாவங்களும் இந்திய நாட்டியங்களில் பயன்படுத்தப்பட்டு, அவற்றை உலகெங்கும் மக்கள் எளிதாக புரிந்து கொள்கிறார்கள். அதனால்தான் பல வெளிநாட்டவர்கள் இந்திய நடனங்களைப் பாராட்டுகிறார்கள். 

இப்படிப்பட்ட கலையை சற்று வித்தியாசமான முறையில் கொண்டு செல்பவர் அபர்ணா ரமேஷ்.  சேலத்தில் ஜதீஸ்வரம் என்ற பெயரில் நாட்டியப் பள்ளியை நடத்துகிறார். பாடகி, வயலின் வாசிப்பவர், பாடிக்கொண்டே நட்டுவாங்கம் செய்வது இவருடைய தனித்திறமை. 6 வயதில் அருணகிரிநாதரின் திருப்புகழில் உள்ள 400பாடல்களை பாடியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பந்தநல்லூர் பாணியை பின்பற்றும் இவர், சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களுக்கு தானே புதிதாக நடனம் அமைத்து அரங்கேற்றம் செய்பவர்.

2020-ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது, நாட்டியச் சுடர், நாட்டிய கலா விபஞ்சி, பாரதி சேவை செம்மல், நாட்டியக் கலா சகாரா போன்ற விருதுகள் பெற்றவர்.

""எட்டு வயதில் மேடையேறிய எனக்கு ஒவ்வொரு மேடையும் ஒரு அழகான அனுபவமே. ரசிகர்களின் நாடி பிடித்து பார்த்து நிகழ்ச்சி வழங்குவதே ஒரு தேர்ந்த கலைஞனின் திறமை. அவ்வகையில் எந்த மாநிலம் சென்று நிகழ்ச்சி வழங்கினாலும் அம்மாநிலத்தின் மொழி, நாகரிகம், வரலாறு அங்குள்ள கோயில்களின் சிறப்பு, ஞானிகளின் பெருமை போன்றவற்றை நம் நடன முறையின் மூலமாக அழகுற உணரவைப்பதே ஒரு தனிக் கலை.

உதாரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மொழியில் சந்த், ஞானேஷ்வர், நாமதேவர், துக்கராம் போன்ற குருமார்கள் அருளிச் செய்த அபங்கம் என்ற பாடல் வடிவத்தை எடுத்துக் கொண்டு நடனம் செய்வது, அதைப் போல கொல்கத்தா சென்றால் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய வங்காள மொழியில் அமைந்த கீதங்களுக்கு நடனம் அமைப்பது இது போன்றவை அங்குள்ள மக்களின் உள்ளத்தைக் கவருகின்றது.

அதுபோன்று, தமிழ் பலவாறாக இருக்கும் குறிப்பாக 7-ஆம் நூற்றாண்டில் ஒரு விதமாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் மற்றொரு விதமாக இருந்தது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் தமிழ் வேறு விதமாக இருக்கும்.

ஆகையால் அதனை நன்கு படித்து நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உரைபொருள் உணர்ந்து அந்த காலகட்ட வரலாறு, இறை அனுபவம் அத்தனையும் உணர்ந்து படித்து பாடம் செய்ய வேண்டும்.

அதில் சொல் நயமும், பொருள் நயமும் இருப்பதனால் தான் அது நடன வடிவமைப்புக்கு ஏதுவாக இருக்கும். இதற்கு அத்தனை இலக்கியங்களையும் முழுமையாக தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்'' என்றார்.                                                              

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com