முருங்கை எண்ணெய் லிட்டர் ரூ. 5000

இயற்கை   விஞ்ஞானி   நம்மாழ்வாரின்   இயற்கை விவசாய முறைகளை  பின்பற்றுபவர் கரூருக்கு அருகில் இருக்கும் லிங்கம  நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர்  சரோஜா குமார்.  
முருங்கை எண்ணெய் லிட்டர் ரூ. 5000

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் இயற்கை விவசாய முறைகளை பின்பற்றுபவர் கரூருக்கு அருகில் இருக்கும் லிங்கம நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சரோஜா குமார். தனது 20 ஏக்கர் நிலத்தில் ஏர் வைத்து உழாமல் முருங்கை மற்றும் பலவகை மரங்கள், செடி பயிர் வகைகளை எட்டு ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் கிடைக்கும் விளை பொருள்களை மட்டுமல்லாமல் கரூர் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் விவசாயிகளின் விளை பொருள்களையும் மதிப்பு கூட்டி கூட்டுறவு முறையில் விற்பனை செய்து விவாசாயிகளை ஊக்குவிக்கிறார். வர்த்தக நிர்வாகத்தில் முதுகலை படித்த சரோஜா எப்படி இயற்கை விவசாயத்திற்கு வந்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார்:


""பெற்றோரும் சரி... மாமனார் மாமியாரும் சரி... பரம்பரை விவசாயிகள். அதனால் எனக்கு விவசாயத்தில் ஆர்வம் அதிகம். தற்கால விவசாய முறைகள், அதன் பின் விளைவுகள் என்னை யோசிக்க வைத்தன. 2012 வாக்கில் நம்மாழ்வாரின் "இயற்கை வேளாண்மை' பயிற்சியில் நான் மாணவியானேன்.
விளைச்சல் என்பது "உணவுத் தேவைக்குத்தான்' என்பது மாறி, "சந்தையின் தேவைக்கு' என்று வழி மாறியதும் வேளாண்மை வணிக மயமாகி விட்டது.

"உழவு' என்பது தொழில் அல்ல. காலநிலை, பருவமழை என்னும் இயற்கை காரணிகளைச் சார்ந்து நடக்கும் வாழ்வியல் என்பதை மக்கள் மறந்து போனார்கள்.

கரூர் சுற்றுவட்டாரம் எப்போதுமே மழைக்கு ஏங்கி நிற்கும் . 2021 நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடானது. ஆனால் கரூர் சுற்றுவட்டார கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதுதான் பச்சை உண்மை. "வறண்ட நிலத்தில் "மர வேளாண்மை' , "மாதம் தோறும் வருமானம்' என்று மண்ணுக்கேற்ற விவசாயம் என்ற யுக்தியை கையில் எடுத்தேன். சாலையோரங்களில் தானே வளரும் "புளி, கொடுக்காப்புளி, நாவல் மரங்களுக்கு யாரும் தண்ணீர் பாய்ச்சாமலே வளர்ந்து பலன் கொடுகின்றன. எனது தோட்டத்திற்கு "நந்தவனத் தோட்டம்' என்று பெயர் சூட்டி, முருங்கை, அத்தி, நாவல், இலுப்பை, தென்னை, பனை, ஆமணக்கு, மாதுளை, பப்பாளி, கறிவேப்பிலை, முள்சீத்தா, சப்போட்டா, கொய்யா, நோனி, நெல்லி, வாழை மரங்களை நட்டேன். இந்த மரங்களுக்குக் குறைந்த தண்ணீர், குறைந்த மனித உழைப்பு போதும்.

எக்காரணத்தை முன்னிட்டும் நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை பெருவியாபாரிகளுக்கு விற்பதில்லை. முகநூல் பக்கங்கள், வாட்சப் குழுக்களில் எங்கள் பொருட்கள் குறித்த தகவல்களை மக்களிடம் பகிர்கிறோம். அரவக்குறிச்சியில் காய்ப்பு காலங்களில் முருங்கைக்காய்கள் விலை மிகக் குறைந்து போய் வீணாகும். "பறிக்கும் கூலி' கூட கிடைக்காது. அப்போதுதான் அந்த யுக்தி என்னுள் உதித்தது. முருங்கை இலைகளை உலர்த்திப் பொடி செய்து, முருங்கைப் பூக்களைச் சேகரித்து உலர்த்தி, முற்றிய முருங்கைக்காய்களிலிருந்து விதைகள் எடுத்து உலர்த்தி எண்ணெய் எடுத்து, விற்கத் தொடங்கினோம். முருங்கை விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் லிட்டர் ரூ 5000 வரை விற்கப்படுகிறது.

முருங்கை எண்ணெய் வானூர்திகளின் என்ஜின்களில் மசகு எண்ணையாகவும் பயன்படுத்தப் படுகிறது.

சாதா முருங்கையிலிருந்து உலகிலேயே விலை அதிகமான எண்ணெய் தயாரிக்கப்படுவது அதிசயம். நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை இலைப் பொடி, முருங்கைப் பூ, முருங்கை எண்ணெய் மிகச் சிறந்தது.

வர மிளகாய் விற்றால் விவசாயிகள் பெறும் விலை கிலோ நூறு ரூபாய். பருவம் முடிந்த பின் கடைகளில் சில்லரை விலை இருநூறு வரை போகும். இப்போது அவசர உலகத்தில் பெரும்பாலும் மசாலாப் பொடி வகைகளை மக்கள் விரும்புவதால் மசாலா வகைகள் அனைத்தும் கிலோ நானூறுக்குக் குறையாது. விளிம்பு நிலையில் உள்ள ஏழைகள் முதல் பணக்காரர்களின் சமையலறைகளை மசாலாப் பாக்கெட்கள் நிறைத்துள்ளன. மசாலா பொடிகளுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது. விவசாயிகளான நாம் மசாலா பொடி தயாரிப்பதில் ஈடுபட எது தடுக்கிறது? சிறிய அளவில் கலப்படம் இல்லாமல் அரைத்து விற்றால் வருவாய் கூடும். அதை நாங்கள் சாதித்திருக்கிறோம். மிளகாய்த்தூள், இட்லி மிளகாய்ப் பொடி, மாதுளம் பூ கலந்த இலந்தைப் பழத் தேநீர் பொடி, நெல்லி ஊறுகாய், வில்மா (முருங்கை இனிப்பு லட்டு, முருங்கைத் தொக்கு, போன்ற எங்கள் குழுவினரின் தயாரிப்பிற்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உள்ளனர். "நம் விளைச்சல், நம் உழைப்பு, நம் பொருளாதாரம் சாத்தியம் தான்' என்று சாதனை புரிந்திருக்கிறோம்.

நம்மிடம் கிடைக்கும் அத்தனை பொருட்களையும் குப்பை போல் குறைந்த விலைக்கு அள்ளிக் கொண்டு போய், பொடிகளாக மாற்றி கவர்ச்சியான உறைகளில் நிரப்பி மீண்டும் நமக்கே விற்று, கோடிகளில் லாபம் சம்பாதிக்கின்றனர். ஒரு விவசாயி கூடக் கடலை உருண்டை அல்லது மிட்டாய் என்று மதிப்புக் கூட்டி நாம் பார்த்ததில்லை. பீநட் பட்டர் சந்தையில் என்ன விலை விற்கிறது தெரியுமா ? கிலோ 70 ரூபாய்க்கு விற்கவே அரும்பாடுபடும் உடைத்த நிலக்கடலை, பீநட் பட்டராகத் திரும்பி வரும் போது கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாம் செய்ய மறப்பதை வேறு யாரோ செய்து பெரும் பொருள் ஈட்டுகின்றனர்.

சந்தைப்படுத்துதல் பலரும் நினைக்கும் அளவுக்கு அத்தனை சவால் நிறைந்தது அல்ல. உயிர் வாழ்வதற்குச் சிறிது கூட தேவை அற்ற எத்தனையோ பொருட்களைப் பலரும் வெற்றிகரமாக சந்தைப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆனால் ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கு தேவையானவற்றை கலப்படம் இல்லாமல் விற்றால், நிச்சயம் விலை பொருள்களுக்கான ஆதார விலையை எளிதாகப் பெற முடியும். புதிதாக நாம் எதுவும் கண்டுபிடித்து விடவில்லை. நாம் திரும்பிப் பார்க்காத சில பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும். இஞ்சி மொரப்பா தெரியும். நெல்லி மொரப்பா? நெல்லி மிட்டாய் .. நெல்லிமுள்ளி தெரியுமா ? அவைகளையும் நாங்கள் தயாரிக்கிறோம்.

நந்தவனத் தோட்டத்தில் சம்பாக் கறிவேப்பிலைச் செடிகள் காடாகப் பரவியுள்ளன. அதை வாங்கிய வணிகர், ஒரு கட்டத்தில் "கறிவேப்பிலையை நீங்கள் எடுத்துத் தந்தால் எடுத்துக் கொள்கிறேன்" என்றார். "சரி' என்றேன். பின்பு கடன் சொல்லி எடுத்துக் கொண்டு போனார். பணம் தரவேயில்லை. தளர்ந்து போகாமல், கறிவேப்பிலைகளைப் பறித்து நிழலில் காயவைத்துப் பொடி செய்து விற்கிறேன்.

முருங்கைத் தொக்கு செய்யும் போது மணம் கூட்டுவதற்கு இந்தப் பொடியும் கொஞ்சம் சேர்த்தோம். இலந்தை வடை தயாரிக்கும் போதும் கறிவேப்பிலைப் பொடியைச் சேர்த்தோம்.கறிவேப்பிலைத் தொக்கு ... அனைத்து தயாரிப்பும் நன்றாக விற்பனை ஆகிறது. உப்பு, புளி, நல்லெண்ணெய், மிளகாய் எதுவும் 600 ரூபாய்க்கு விற்பனை ஆவதில்லை. ஆனால் "தொக்கு' என்று வரும் போது எல்லாம் சேர்ந்து 600 ரூபாய் ஆகிறது. நாமே இந்த வேலையைச் செய்தால் என்ன என்று ஆரம்பித்தேன். இப்போது கறிவேப்பிலை பொடியே கிலோ 600 ரூபாய்க்கு விற்கிறது. கறிவேப்பிலை இலந்தை வடை, முருங்கை இலந்தை வடை, முடக்கத்தான் இலந்தை வடை, வாதநாராயணன் இலந்தை வடை இந்தப் பகுதியில் பிரபலம். கறிவேப்பிலை முறுக்கையும் அறிமுகம் செய்யப் போகிறோம்.

"மாடா உழைக்கக் கூடாது. மனிதராக உழைக்கணும்" என்று நம்மாழ்வார் ஐயா சொல்வார். சாகும் வரை உழைக்கும் உடல் வலிமையும், அதற்கான உணவுப் பொருளும் கிடைத்தால் வேறென்ன வேண்டும்? எந்த வர்த்தகத்திலும், விற்கிறவங்க மட்டும் நல்லா இருக்கணும் என்பது வெறும் வணிகம். வாங்குகிறவர்களும், விற்கிறவர்களும் நல்ல இருக்கணும் என்பதுதான் நியாயம்.

இயற்கை வேளாண்மை தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி பேருக்கு சோறு போடுமா என்று கேட்கிறார்கள். எட்டு கோடி பேருக்கு சோறு போடும்படியாக இயற்கை வேளாண்மை உற்பத்தி, நுகர்வு குறித்து அரசு என்னவிதமான திட்டம் வகுத்திருக்கிறது? இயற்கை வேளாண்மை செயற்பாட்டாளர்களை, விவசாயிகளை, அறிஞர்களை அழைத்து எட்டு கோடி பேருக்கான உணவு உற்பத்திக்கு என்ன ஆலோசனை நடத்தியிருக்கிறது?

இந்த மண் அறிவுதான் எதிர்காலத்தில் நம் குழந்தைகளைக் காக்கும். எனது தோட்டத்தில் வெட்டி விற்றால் விலை கிடைக்கும் மரங்களை வளர்க்கவில்லை. தானும் வாழ்ந்து இயற்கையைக் காத்து, வளர்ப்பவர்களுக்கும் பலன் தரும் மரங்களை வளர்த்தேன்.

விவசாய பூமியில் உணவுக் காடு வளர்ப்பு என்பது "ஏர் ஓட்டா' வேளாண்மையில் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபணம் செய்துள்ளேன்'' என்கிறார் சரோஜா குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com