கதை சொல்லும் குறள் - 61: அழிவைத் தரும் நான்கு !

சூரியன் மள மளவென ஏறி உச்சியைத் தொட்டிருந்ததால் வெயில் தகித்துக் கொண்டிருந்தது. வெப்பத்தைத் தாங்க முடியாமல், இரை தேடும் பணியைக் கைவிட்டுப் பறவைகளும் தங்கள் கூடுகளில் அடைந்து கிடந்தன.
கதை சொல்லும் குறள் - 61: அழிவைத் தரும் நான்கு !

சூரியன் மள மளவென ஏறி உச்சியைத் தொட்டிருந்ததால் வெயில் தகித்துக் கொண்டிருந்தது. வெப்பத்தைத் தாங்க முடியாமல், இரை தேடும் பணியைக் கைவிட்டுப் பறவைகளும் தங்கள் கூடுகளில் அடைந்து கிடந்தன.

சொக்கன், தன் தலைப்பாகையை அவிழ்த்து, தன் உடலில் ஆறாகப் பெருகி வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். விடியற்காலை ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து, தன்னுடைய நிலத்தை உழத் தொடங்கியவன் இப்பொழுதுதான் சிறிது ஓய்வு எடுக்க முடிவு செய்தான்.

தாகம் எடுத்து தொண்டை வறண்டு கிடந்தது. பாசனக் கிணற்றில் உள்ள பம்பு செட்டை இயக்கினான். தண்ணீர் அருவியாக விழத் தொடங்கியது. நிலத்தடித் தண்ணீர் தேனாக இனித்தது. ஆசை தீரக் குடித்தான். தாகம் அடங்கியது.

சொக்கனின் மனைவி அபிராமி, விற்பனைக்குப் போக மீந்துபோகும் தயிரைக் கடைந்து, தாராளமாகத் தண்ணீரைச் சேர்த்து, இஞ்சி, கறிவேப்பிலையைத் தாளித்துக் கொட்டி, ஒரு பானையில் வைத்து விடுவாள். இந்த வெயில் காலத்திற்குத் தேவபானமாக அந்த நீர்மோர் சுவைக்கும். ஒரு நடை வீட்டுக்குப் போய் இரண்டு சொம்பு மோரைக் குடிக்கச் சொக்கனின் உள்ளம் துடித்த து.

வீடுவரை சென்று வந்தால் ஒரு மணி நேரம் வீணாகிவிடும். சாப்பாட்டு நேரம் வந்துவிடும். சாப்பிட்டு விட்டால் மீண்டும் கழனியில் இறங்கி உழ முடியாமல் தூக்கம் கண்களைச் சுழற்றி அடிக்கும். காலையில் இருந்து வேலை பார்த்த உடம்பு ஓய்வு கேட்கும்.

தூக்கம் என்று நினைத்ததுமே, ஏனோ சொக்கனுக்குத் தன்னுடைய சோம்பேறி மகன் கணேசனின் ஞாபகம் வந்தது. வயசு இந்தப் புரட்டாசி வந்தால் இருபது முடியப்போகுது, பத்தாவதுக்கு மேல் படிப்பு ஏறவில்லை.

பத்தாம் வகுப்பிலேயாவது ஒழுங்காகப் படித்தானா? பொதுத்தேர்வில் தோல்வியைத் தழுவினான். அதோடு படிப்புக்கு மூடுவிழா நடத்தியாகிவிட்டது.
சரி, அப்பாவுக்குக் கூட வந்து வயலில் வேலை பார்க்கலாம் இல்லையா? அதுவும் கிடையாது. காலை பதினொரு மணி வரைத் தூக்கம். மெதுவாக ஆடி அசைந்து குளித்து முடித்து வருவதற்குள் பகல் மணி ஒன்றைத் தொட்டுவிடும், பிறகு சாப்பாடு; மீண்டும் தூக்கம். தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்து, சேனல் சேனலாக மாற்றிக் கொண்டே இருப்பது; எதையும் முழுமையாகப் பார்க்காமல் அழிச்சாட்டியம் செய்வது.

""இப்படிச் செய்யறியே'' என்று கேட்கும் அம்மா அபிராமியையும், தங்கை பவானியையும் வாய்க்கு வந்தபடி திட்டுவது, அலைபேசியில் அரட்டை அடிப்பது, மீண்டும் இரவுச் சாப்பாடு, தூக்கம்.

சொக்கன் தன் பிள்ளையைக் கண்டிக்க மாட்டானா என்றால், பலமுறைத் திட்டி, அடித்தும் பார்த்து விட்டான். உடனே கணேசன் கோபித்துக் கொண்டு தன்னுடைய அத்தை வீட்டுக்குப் போய்விடுவான். பிறகு அபிராமி அங்கே சென்று, கெஞ்சிக் கூத்தாடி அவனை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வருவாள். நல்லவிதமாகச் சொல்லியும் பார்த்தாகிவிட்டது. அறிவுரைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது.

சொக்கனுக்குப் பத்து காணி நிலம் சொந்தமாக இருந்தது. பரம்பரைச் சொத்தான நிலத்தில் சீசனுக்கு ஏற்றாற்போலப் பயிர் செய்து வசதியாக வாழ்ந்தான். ஓட்டு வீடானாலும் சொந்த வீடு. புழக்கடையில் பத்து பசு மாடுகள், நூறு கோழிகளைக் கொண்ட கோழிப் பண்ணை. வயலில் நெல் விதைத்து அறுவடை செய்கிறான். ஏழு காணி நிலத்தில் மூன்று போகம் விளைந்து நல்ல விலைக்குப் போகும் பொன்னி அரிசி வகை. மீதி மூன்று காணி நிலத்தில் காய்கறிகள், தர்பூசணி போன்ற பழ வகைகள் என்று சொக்கனின் உழைப்பிலும், கூலிக்கு வேலை செய்யும் ஆட்களின் உதவியிலும், சுகமான வாழ்க்கை சொக்கனின் குடும்பத்திற்கு வாய்த்திருந்தது.

அபிராமியும்  சோம்பேறி இல்லை. வீட்டுப் பசுமாட்டுத் தொழுவத்தைப் பராமரிப்பது, பால் கறப்பது, கோழி இடும் முட்டைகளைச் சேகரித்து விற்பது, அவர்கள் வாழும் கிராமத்திலிருந்து, நான்கு கி.மீ. தள்ளி இருக்கும் நகரத்திற்குச் சென்று, பாலை விற்பனை செய்ய ஆட்களை அனுப்பி, பணத்தை வசூலிப்பது, கால்நடை வைத்தியரை மாதத்திற்கு ஒரு முறை வரச் செய்து, மாடுகளுக்கும், கோழிகளுக்கும் நோய்கள் தாக்காமல் இருக்க வைத்தியம் பார்ப்பது என்று வீட்டிலேயே அத்தனை வேலைகள் இருந்தன.

கணேசனைப் பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் சொக்கனுக்கு வேதனையாக இருந்தது. தானும் தன் மனைவியும் கஷ்டப்பட்டுத் தேடி வைத்திருக்கும் செல்வங்களை எல்லாம் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் கணேசன் இழந்து விடுவானோ என்று கவலைப்படுவான்.

தொலைவில், அபிராமி வரப்பில் நடந்து வருவதை, சொக்கன் பார்த்தான். பகல் ஒன்றரை மணிக்கு மேல்தானே சோறு கொண்டு வருவாள், என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வருகிறாள் என்று நினைத்தான்.

""மச்சான், இந்தா இதைக் குடி'' என்று ஒரு பெரிய சொம்பு நிறையத் தாளித்த மோரை நீட்டினாள் அபிராமி. 

""புள்ளே, இப்பத்தான் இந்த மோரைப் பத்தி நினைச்சேன், நீ கொண்டாந்துட்டே''.

""அம்மாடி, வெயில் நெருப்பா தகிக்குது. உனக்கு மோருன்னா புடிக்குமேன்னு கொண்டாந்தேன்''.

""இதுக்கு நீ இவ்வளவு தூரம் வரணுமா? அந்தத் தடித்தாண்டவராயன் கிட்டக் கொடுத்து அனுப்பி இருக்கலாம் தானே''.

""ஆமாம், நல்லாச் சொன்னீங்க. இப்பதான் வாயிலே பிரஷ்ஷை வெச்சுக்கிட்டுக் கொல்லைப்புரத்துக்குப் போறான்''.

""நாம பண்ணின பாவம், அடிச்சாலும் உதைச்சாலும் எருமை மாட்டு மேலே மழை பொழிஞ்சாப்போல நிக்குது'' என்று சொக்கன் முனங்கினான்.

""சரி அத்த வுடுங்க, மீன்காரி மரகதம், ஓடையிலே நெத்திலி மீனுங்களைப் புடிச்சியாந்து வித்தா. மணக்க, மணக்க நெத்திலிக் குழம்பை ஆக்கிக் கொண்டாந்தேன், கூடவே கருவாட்டைப் பொரிச்சி வெச்சிருக்கேன், பொழுதோட சாப்பிடுங்க''.   இன்னைக்கு முதல் தேதி இல்லையா, பால் கணக்கைப் பார்த்து, பணம் வசூல் பண்ணனும். நான் போயிட்டு வரேன்'' என்று அபிராமி கிளம்பி விட்டாள்.

""அண்ணி, அண்ணனுக்கு மட்டும்தான் நெத்திலிக் குழம்பா, எங்களுக்கு இல்லையா'' என்று வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருத்தி கேட்க.

""அண்ணன் எல்லாம் கொடுப்பாரு, நீ என்ன கொடுப்பேன்னு ஒரு கிழம் கிண்டல் அடிக்க'', அங்கே எழுந்த சிரிப்பலை ஓய நெடு நேரமானது.

செவிப்பறையைக் கிழித்துவிடுமோ என்ற அளவிற்கு இடி இடித்தது. திடுக்கிட்டு எழுந்த அபிராமியின் உடல் பயத்தில் வெட வெடத்தது. இந்த இடிதானே அவள் வாழ்க்கையைப் பாழும் கிணற்றில் தள்ளியது.

நான்கு வருடங்களுக்கு முன்பு வயல் வேலையை முடித்துக் கொண்டு வீடு நோக்கிச் சொக்கன் வர, திடீர் என்று வானம் இருண்டு இடி இடித்து மழை "சோ' என்று கொட்டத் தொடங்கியது. அருகே இருந்த ஆல மரத்தின் அடியில் சொக்கன் தஞ்சம் புகுந்தான். இடி ஒன்று மரத்தைத் தாக்க, அதன் அடியில் இருந்த சொக்கன் கருகித் தன் இன்னுயிரை இழந்தான்.

போன வருடம் பவானிக்குத் திருமணம் ஆகி அவள் மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். ஒரே ஆதரவான கணேசனிடம் எந்த மாறுதலும் இல்லை, வேளா வேளைக்குச் சாப்பாடு, தூக்கம், உடல் முழுவதும் அப்பிக் கிடக்கும் சோம்பல் என்று பொழுதைக் கழித்தான்.

வீட்டுத் தலைவனாகச் சொக்கன் இருந்து, அவ்வப்பொழுது அடித்தும், திட்டியும் திருந்தாதவன், இப்பொழுது கேட்க ஆளில்லாமல் கொழுத்துத் திரிந்தான்.

அம்மா அபிராமியை மதிப்பதே இல்லை. அப்பாவின் அகால மரணம் அவனுள் எந்த ஒரு மாறுதலையும் ஏற்படுத்தவில்லை.

திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் என்று அபிராமி அவனுக்குத் திருமணம் செய்து வைத்தாள். தன் கடமை முடிந்தது என்று எண்ணினாளோ என்னவோ மாரடைப்பில் போய்ச் சேர்ந்தாள்.

கணேசனின் மனைவி பத்மினி எப்படியோ அவனுடன் ஒரு ஐந்து வருடங்களை ஓட்டினாள். இடையில் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயும் ஆனாள்.

சோம்பேறிக் கணவனுடன் எவ்வளவு நாட்கள் காலத்தைத் தள்ளுவது. தொழுவத்தில் இருந்த மாடுகள் விற்கப்பட்டன. கோழிப்பண்ணை மறைந்து போனது. பத்துக் காணி நிலம் ஐந்து காணியானது. மூதேவி வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்தாள்.

பத்மினியின் தந்தை, ஒரு நாள் தன் மருமகனிடம் பெருத்த சண்டை இட்டார். வாய் வாக்குவாதம் முற்றி அடிதடியில் இறங்க வேண்டியதானது. கணேசனை மிரட்டிக் கையெழுத்துப் போடச் சொல்லி ஐந்து காணி நிலத்தை விற்று பணமாக்கி, தன் மகளையும் பேத்திகளையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். 

கணேசனின் சோம்பல், ஓயாதத் தூக்கம், மறதி அவனை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டது.

இதோ கணேசன் இறக்கும்வரை சோம்பேறியாக வாழ ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டான்.

காவி உடையுடன், தாடி வளர்த்து சடாமுடியுடன் ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து இருக்கிறான். அந்தப் புதிய ஊரில் வாழும் மக்கள் அவனைப் பெரிய மகான் என்று எண்ணி, அவன் இடம் தேடி வந்து சோறு இடுகிறார்கள்.
கணேசனின் சோம்பல் அவனுக்கு அழிவைத்தான் நிச்சயம் தரப்போகிறது. எப்பொழுது என்ற கேள்வி எழுகிறதுதானே?

அவன் போலிச் சாமியார் என்பது தெரிய வரும்பொழுது, தர்ம அடியும் சிறையில் களியும் நிச்சயம்.

ஆனால் ஜெயிலில் கணேசன் கல் உடைக்க வேண்டும், அப்பொழுதுதான் அவனுக்குச் சோறு கிடைக்கும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

(குறள் எண் : 605)

பொருள் :

காலம் தாழ்த்திச் செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவோர் விரும்பி ஏறும் தோணிகளாம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com