பெண் தெய்வ வழிபாடு! 

மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், சமய பண்பாட்டு ஆய்வாளர், ஆசியவியல்-ஆய்வியல் நிறுவனத்தில் பணியாற்றியவர்.
பெண் தெய்வ வழிபாடு! 

மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், சமய பண்பாட்டு ஆய்வாளர், ஆசியவியல்-ஆய்வியல் நிறுவனத்தில் பணியாற்றியவர். அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தவர். எம்.ஜி.ஆர் பெயரில் தொடங்கும் வரிசையில் 21நூல்கள் வெளியிட்டவர். பல விருதுகள் பெற்றவர். நாளிதழ்களில் ஆன்மிக தொடர்கள் எழுதுபவர் இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் முனைவர் செ.இராஜேஸ்வரி. தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

ஆன்மிகத்தால் கிடைத்த அனுபவம் குறித்து?

அப்பா சித்த பாரம்பரியத்தைச் சேர்ந்த ஜோதிடர் என்பதால் வராகி உபாசனை வீட்டிலே நடந்து வந்தது. அதனால் எனக்கு சிறு வயது முதல் தாந்திரீகச் செயல்முறை, சடங்கு முறைகள் பற்றிய அறிவு இருந்தது. வராகி உபாசனையில் வராகிமாலை பாடல்களும் எனக்கு மனப்பாடமாக இருந்தன. கல்லூரி படிப்பு முடித்து மொழி பெயர்ப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் ஆய்வுகள் செய்து கொண்டிருந்த போது எபிரேயம், கிரேக்கம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு வந்தது.

ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது. பெரியஅளவில் தேர்ச்சி பெற்றதாகச் சொல்ல இயலாது ஏதோ எழுதப் படிக்க தெரியும். சமயச் சொல்லகராதி தொகுக்கும் பணியிலும் திருமறை மொழிபெயர்ப்பு சார்ந்த சில பணிகளிலும்; ஈடுபட்டிருந்தேன். இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுத்தது ராபின்சன் வேலி நடத்திய மக்கள் கல்வி அறக்கட்டளையாகும்.

இப்பணிகளில் சுமார் பத்தாண்டுகளாக ஈடுபட்டு வந்ததும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் முத்து மோகன், தி.சு.நடராசன் போன்றவர்கள் சமூக இயல் சார்ந்த ஆய்வுகளை அறிமுகப் படுத்தியதுமாகும். இவையிரண்டும் சமயம் என்பதை சமூகவியல் அடிப்படையில் அணுக வேண்டும் என்ற ஆழமான சிந்தனையே எனக்கு ஊட்டியது.

பல்கலைக்ககழகத்தில் நடக்கும் ஆய்வரங்கங்ளோடு முடிந்து விடக்கூடாது. பொது மக்களைச் சென்றடைய வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது.2019-ஆம் ஆண்டில் செந்தமிழ்ப் புரவலர் கவிஞர் முத்தமிழ் விரும்பி, தன்னுடைய "நெருஞ்சி' காலாண்டு இதழ்க்காக என்னை தமிழ்நாட்டிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற தெய்வங்கள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றி கட்டுரை எழுதும்படி கூறினார். நானும் எழுதினேன் பின்பு இந்த கட்டுரைகளைத் தொகுத்து நெருஞ்சி இலக்கிய இயக்கம் ஒரு நூலாகவும் வெளியிட்டது. பொதுமக்களிடம் என்னுடைய சமூகவியல் சார்ந்த சமய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொண்டு சேர்க்கிற நோக்கம் ஓரளவு நிறைவேறியுள்ளது என்று கூட சொல்லாம்.

தேவேந்திரன், பண்பாட்டு நகர்வுகள், தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு பெண் தெய்வ வழிபாடு, மருத நிலப் பெண் தெய்வங்கள், வேளாண் மரபில் பூப்பும்-விதையும், முன்னோர் வழிபாடு, இருநிலத்தில் திருமுருகன் யானைக் கடவுள் ஆகிய எட்டு நூல்கள் வெளிவந்துள்ளன. ஆன்மிகம் தொடர்பாக இன்னொரு விஷயமும் செய்து வருகிறேன்.

அதாவது ஒவ்வொரு ராசிக்கும்; ஒரு தனிப் பண்பு உண்டு அந்தந்த ராசியில் பிறந்தவர்களில் அப் பண்புகள் 70சதவீதமாவது காணப்படும். சோதிடம் ஆன்மிகம் சார்ந்தது தானா என்ற கேள்வி எழுந்தாலும் கூட ராசி நட்சத்திரம் போன்ற விஷயங்களில் சில உண்மையான கருத்துகள் இருப்பதைக் கண்டு அவற்றை மக்களோடு பகிர்ந்து கொள்வது எனக்கு மன நிம்மதியை தருகின்றது. சமயம் என்பது சமூதாயத்தின் தேவையை ஒட்டி அதுதோன்றிய காலத்தில் உருவாக்கப்பட்டு பின்னர், சமூகத்தின் தேவைகளுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் என்பது என் கருத்து. நமக்கு மிஞ்சிய சக்தி உண்டு என்ற நம்பிக்கையும் அது தன்னைப் பாதுகாக்கும் என்ற எண்ணமும் மனிதருக்குத் தெம்பூட்டுவதால் தெய்வ நம்பிக்கை என்பது இன்றியமையாதது.

எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

சத்துணவுத் திட்டம் அறிமுகம் செய்த போது தமுக்கம் மைதானத்தில் ஒரு பெரிய அறிமுக விழா பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது என்னுடைய 2வயது மகளோடு சென்று அவர் பேசியதைக் கேட்டேன். அதன் பிறகு உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்கவிழா, உலகத் தமிழ் மாநாடு போன்றவை நடந்த போதும் அவர் பேசியதை கேட்டுள்ளேன். எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அவரைப் பற்றி வந்த கட்டுரைகளை தொகுக்க தொடங்கினேன். அச்சமயத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குக் தமிழ் கற்பித்த போது, அவர்களும் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுப்பட்டனர்.

இதுவரை 20நூல்களை கொண்டு வந்திருக்கிறேன். எல்லாமே ஆய்வு நூல்கள் எதுவும் அவருடைய வாழ்க்கை வரலாறு அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com