சின்னத்திரை  மின்னல்கள்!: சவாலாக உணர்கிறேன்! 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் தொடர் "வள்ளி திருமணம்'.
சின்னத்திரை  மின்னல்கள்!: சவாலாக உணர்கிறேன்! 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஆரம்பமாகியிருக்கும் தொடர் "வள்ளி திருமணம்'. இத்தொடரில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "யாரடி நீ மோகினி' தொடரில் நடித்த நட்சத்திரா நாயகியாக நடிக்கிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

சின்னத்திரைக்குள் வந்தது எப்படி?

எனது பூர்வீகம் கேரளா. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் பள்ளியில் யூத் பெஸ்டிவல் என்று விழா ஒன்றை நடத்தினார்கள். அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் ஒருவர் என்னை குறும்படம் ஒன்றில் நடிக்க கேட்டார். வீட்டிலும் சரி என்றதால் அந்த குறும்படத்தில் நடித்தேன்.

அதன்மூலம், "கிடா பூசாரி மகுடி' என்ற தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் மூலம் "யாரடி நீ மோகினி' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில்தான் அந்தத் தொடர் முடிவடைந்தது. ஆரம்பத்தில் தமிழ் தெரியாமல் வந்தேன். "யாரடி நீ மோகினி' தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் நன்றாகவே கற்றுக் கொண்டேன். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு, தற்போது "வள்ளித் திருமணம்' தொடரில் நடிக்கிறேன்.

"வள்ளி திருமணம்' தொடர் குறித்து?

"யாரடி நீ மோகினி' தொடருக்கும், இந்தத் தொடருக்கும் நிறைய வித்தியாசமுள்ளது. அதில், எப்போதும் முகத்தை சோகமாக வைத்திருக்கும் பாவப்பட்ட அப்பாவி பெண்ணாகவே நடித்து பழகி இருந்தேன். ஆனால், வள்ளிதிருமணம் அதற்கு அப்படியே எதிர்பதம். பணத்தை வட்டிக்குக் கொடுத்து கறாராக வசூலிக்கும் மிகவும் துறுதுறுவென்று இருக்கும் போல்டான கேரக்டர். எனக்கே இது வித்தியாசமாகவும் சவாலாகவும்தான் இருக்கிறது. இதன் ப்ரோமோவை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்பு நான் எதிர்பார்க்காத ஒன்று. மகிழ்ச்சியாக இருக்கிறது.

நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லை. ஆனால், "காக்கா முட்டை' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருந்தால் பிடிக்கும்.

பிடித்த ஹீரோ, ஹீரோயின்?

மலையாளத்தில் மோகன்லால் ரொம்ப பிடிக்கும். நடிகைகளில் ஷோபனா மேடம் ரொம்ப படிக்கும்.

குறும்படங்கள் எதுவும் தொடர்ந்து நடித்து வருகிறீர்களா?

இப்போதைக்கு குறும்படங்கள் எதுவும் நடிக்கவில்லை. காரணம், நடிப்பதற்கு சரியான வாய்ப்பும் அமையவில்லை. நேரமும் கிடைக்கவில்லை.

"வள்ளிதிருமணம்' தொடரின் சக நடிகர்கள் குறித்து?

இந்தத் தொடர் திருக்கழுக்குன்றம் பகுதியில்தான் படமாக்கப்படுகிறது. அதனால், சமயத்தில், அங்கேயே தங்கி இந்தத் தொடரை நடித்து வருகிறோம். இதில் நளினி அம்மாதான் எனக்கு அம்மாவாக நடிக்கிறார். அவங்களுக்கு மலையாளம் பேச தெரியும் என்பதால், ரொம்பவே அவர்களுடன் ஒட்டிக் கொண்டேன். இதைத் தவிர, தற்போதுதான் மற்ற நடிகர், நடிகைகளுடன் பழகி வருகிறேன். எல்லாருமே நன்றாக பழகுகிறார்கள். அது எனக்கும் சௌகரியமாக இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com