நெல்லி, வெந்தயம் ராஸ்பெரி கலந்த மாற்று தேநீர்...!

நெல்லி மரணத்தைத் தவிர்க்காது என்றாலும் மரணத்தை  தள்ளிப் போடும். நெல்லியின் சிறப்பை அதியமான், அவ்வையார், அருணகிரிநாதர், அரேபிய அறிஞர் ஆல்ப்ரூனி  சிறப்பித்து பதிவு செய்துள்ளார்கள்.  
நெல்லி, வெந்தயம் ராஸ்பெரி கலந்த மாற்று தேநீர்...!

நெல்லி மரணத்தைத் தவிர்க்காது என்றாலும் மரணத்தை தள்ளிப் போடும். நெல்லியின் சிறப்பை அதியமான், அவ்வையார், அருணகிரிநாதர், அரேபிய அறிஞர் ஆல்ப்ரூனி சிறப்பித்து பதிவு செய்துள்ளார்கள்.
தினமும் ஒரு நெல்லிக்காய் விட்டமின் சி குறையைப் போக்கும். அதுமட்டுமா? நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் திரையைப் பாதுகாக்கும்.
விட்டமின் சி நெல்லிக்காயில் அதிகம் இருப்பதால் பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும். நெல்லிக்காய் உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் யாரும் பயன்படுத்துவதில்லை.
வெந்தயத்தில் நார்சத்து அதிகம். வெந்தயம் வயிற்று சம்பந்தமான கோளாறுகளுக்கு நல்ல மருந்து. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் கை கண்ட மருந்தும்கூட. ரத்த அழுத்தம், கொழுப்பு எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் போதும். இந்த உண்மையும் அனைவருக்கும் தெரியும். ஆனால் தினமும் பயன்படுத்துவதில்லை.
பாரம்பரிய மருத்துவ குணங்களுள்ள நெல்லி, வெந்தயத்தை நேரடியாகப் பயன்படுத்தத் தயங்குபவர்களுக்கு நெல்லி வெந்தயத்தைப் பொடி செய்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ராஸ்பெரியையும் உலர்த்தி பொடி செய்து சேர்த்து மதிப்பு கூட்டி "கலவை தேநீர் பொடியாக' உருவாக்கி சந்தைப்படுத்தியுள்ளார் சிவகாசியைச் சேர்ந்த சிவப்பிரியா.
கட்டடப் பொறியாளரான சிவப்பிரியா எப்படி மாற்று தேநீர் பொடி தயாரிக்கும் தொழில் முனைவர் ஆனார்?
சிவப்பிரியாவே விளக்குகிறார்:
""உடல் பருமனைக் குறைக்க "கிரீன் டீ' குடிக்கலாம் என்று விளம்பரங்களை விடாமல் செய்கிறார்கள். சாதாரணமாக நாம் குடிக்கும் தேநீர், காபி, பச்சை தேநீருக்கு மாற்று பானமாக நெல்லி, வெந்தயம், ராஸ்பெரி கலந்த தேநீர் பொடியை நான் உருவாக்கியிருக்கிறேன். நெல்லி வெந்தயத்தின் பாரம்பரிய மருத்துவ குணங்களை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. மேலை நாடுகளில் இனிப்பு சுவையுயுள்ள ராஸ்பெரி உடல் இளைக்கப் பயன்படுத்துகிறார்கள். நெல்லியும் வெந்தயமும் சேர்ந்த பொடி கொஞ்சம் புளிப்பு துவர்ப்பு கசப்பாக இருக்கும். எல்லாருக்கும் அந்த சுவை பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் மருத்துவ குணங்கள் நிறைந்த ராஸ்பெரியை பொடி செய்து சரியான விகிதத்தில் சேர்க்கலாம் என்று முடிவு செய்தோம். ராஸ்பெரி கலப்பதினால் பொடியில் கொஞ்சம் இனிப்பு சுவை ஏறும். சர்க்கரை ஓவ்வாமை உள்ளவர்களும் இந்த கலவை தேநீர் பொடியைப் பயன்படுத்தலாம். ராஸ்பெரி இந்தியாவில் கிடைக்காது. அதனால் ராஸ்பெரியை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம். நெல்லி, வெந்தயம் ராஸ்பெரியை ஹீட்டர்கள் மூலம் அதற்கான வெப்பநிலைகளில் உலர்த்தி பொடி செய்து கலக்கிறோம். தொடக்கத்தில் இந்தத் தேநீர் பொடியை உறவினர்கள், நண்பர்களுக்குக் கொடுத்து தேநீர் தயாரித்து குடிக்கச் சொன்னோம். அவர்கள் திருப்தி தெரிவித்தார்கள். அந்த தைரியத்தில் "கூஸ்பெரி ஃபியூஷன் டீ' என்ற பெயரில் விற்கத் தொடங்கினோம். அமேஸான் ஆன்லைன் தளத்திலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் விற்பனை ஆகிறது.
ஒரு கிரீன் டீ குடிக்க ஆகும் செலவைக் காட்டிலும் நெல்லி வெந்தயம் ராஸ்பெரி கலவை டீக்கு ஆகும் செலவு குறைவு தான். முதலில் வாங்குபவர்கள் சுவை எப்படி உள்ளதோ என்று யோசிப்பார்கள். அதனால் மூன்று சாஷே அடங்கிய தொகுப்பை ரூ.37 க்கு விற்கிறோம். பயன்படுத்தி பார்த்துவிட்டு திருப்தி இருந்தால் பாட்டிலில் விற்கப்படும் பொடியை வாங்கிக் கொள்ளலாம்.
இந்த கலவைத் தேநீருடன் நாட்டு சர்க்கரை, பால் தேவைக்கு ஏற்ற மாதிரி சேர்த்துக் கொள்ளலாம். புதினா, நாட்டு சர்க்கரை, பால், பழங்கள் சேர்த்து குளிர்பானமாகவும், ஷேக்காகவும் அருந்தலாம்.
இந்த கலவை தேநீர் பொடியைத் தயாரிக்க இன்னொரு காரணமும் உண்டு. சென்ற ஆண்டு கரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பானம் குறித்து யோசித்தபோதுதான் நெல்லியும், வெந்தயமும் நினைவுக்கு வந்தன. பிறகு ராஸ்பெரி குறித்த தகவலையும் சேகரித்து நெல்லி வெந்தயத்துடன் ராஸ்பெரியையும் சேர்க்கலாம் என்று முடிவு செய்தோம். இந்தக் கலவை உடல் பருமனை குறைக்கப் பயன்படுவதுடன் உடலில் நோய் எதிர்ப்புசக்தியையும் அதிகரிக்கிறது. இதயத்தையும் பாதுகாத்து தோலையும் மினுமினுக்கவைக்கிறது. இந்தத் தேநீரைக் குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். எனது மகனுக்கும் கொடுக்கிறேன். 64 கப் டீ போடத் தேவையான கலவைத் தேநீர் பொடியின் விலை ரூ.320 தான்'' என்கிறார் 25 வயது தொழிமுனைவரான சிவப்பிரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com