கரோனா:  நவீன பாதுகாப்பு உடை!

தீப்தி நாதளா. 2007-ஆம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி.யில் நானோ டெக்னாலஜி படிப்பை முடித்தவர். அமெரிக்காவிலும், துபாயிலும் பணியாற்றிவிட்டு, கடந்த வருடம் இந்தியா திரும்பியவர். 
கரோனா:  நவீன பாதுகாப்பு உடை!


தீப்தி நாதளா. 2007-ஆம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி.யில் நானோ டெக்னாலஜி படிப்பை முடித்தவர். அமெரிக்காவிலும், துபாயிலும் பணியாற்றிவிட்டு, கடந்த வருடம் இந்தியா திரும்பியவர்.

"மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ஒரு தொழில் முனைபவராகத் திகழும் தீப்தி தற்போது ஐதராபாத்தில் வசிக்கிறார். இவரது நிறுவனத்தின் பெயர்: ஹிகோல். நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இவர் தயாரித்திருக்கும் முகக்கவசம், நோயாளி மற்றும் ஆபரேஷன் தியேட்டரில் டாக்டருக்கான உடை பல்வேறு உள்ளிட்ட வைரஸ் பாதுகாப்பு உபகரணங்களின் மூலமாக நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் தீப்தி நாதளா.

தீப்தி தயாரிப்புகளின் சிறப்பு என்ன? தோலை சுட்டெரிக்கும் வெயில், சுற்றுச் சூழல் மாசு இவை இரண்டும் நமக்கு பெரும் அச்சுறுத்தல்கள். இவற்றுடன் இப்போது கரோனாவையும் சேர்த்துக் கொள்ளலாம்.

நாம் அணியும் உடைகள் நம்மை இவற்றிலிருந்து பாதுகாப்பதில்லை. தீப்தி, வெயில், சுற்றுச் சூழல் மாசு, கொவைட் உள்ளிட்ட வைரஸ்கள் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் உடைகளை நானோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி வடிவமைத்திருக்கிறார்.

சிறப்பு உடைகளை வடிவமைக்கும்எண்ணம் எப்படி ஏற்பட்டது?'

"நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது, இங்கே பெண்கள் தங்கள் துப்பட்டாவை தலையிலும், முகத்திலும் கட்டிக் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முயல்வதை கவனித்தேன்.

உண்மையிலேயே நம்முடைய துப்பட்டா துணி சூரியனின் சுட்டெரிக்கும் புற ஊதாக்கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்குமா? என்று அறிய விரும்பினேன்.

உடனடியாக துப்பட்டா சாம்பிள்களை தேசிய ஆராய்ச்சிக் கூடம் ஒன்றுக்கு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தேன்.

துப்பட்டாக்கள் வெயில் மற்றும் சுற்றுச்சூழல் மாசில் இருந்து வெறும் 10% பாதுகாப்புதான் அளிக்கின்றன என்று தெரிந்துகொண்டேன்.

இதற்குத் தீர்வுகாணும் நோக்கத்துடன்தான் ஹிகோல் நிறுவனத்தைத் துவக்கினேன். அந்த நேரத்தில் கரோனா தொற்றும் சேர்ந்துகொள்ள, வெயில் மற்றும் சுற்றுச் சூழல் மாசில் இருந்து மட்டுமின்றி நம்மை வைரஸ்களிடமிருந்தும் பாதுகாக்கத் தக்க வகையில் பாதுகாப்பான முகக்கவசம், தலைக்கவசம் மற்றும் ஆடைகளை உருவாக்குவது என்று முடிவு செய்தேன்.

அதி நவீன நானோ தொழில்நுட்பம் அதே சமயம் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் எளிதில் மக்கக் கூடிய பருத்தி இரண்டையும் ஒருங்கிணைத்து இவற்றை உருவாக்கினேன் என்கிறார் தீப்தி.

முகக் கவசம், தலைக்கவசம் இவற்றுடன் மருத்துவமனையில் நோயாளிகளும், ஆபரேஷன் தியேட்டரில் டாக்டர்களும், நர்ஸ்களும் அணிந்துகொள்ளத்தக்க உடைகள், தாய்மார்கள் குழந்தைக்குத் பாலூட்டுவதற்கு வசதியாக அணியத்தக்க உடை, பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பாக சுற்றி வைக்க துண்டுகள், மாணவர்களுக்கான புத்தகப்பை என பல்வேறு வகையான உபயோகமான ஆடைகள் மற்றும் உபகரணங்களைத் தயாரிக்கிறார் தீப்தி.

இவை 95% சுற்றுச் சூழல் மாசுகளையும், வைரஸ்களையும் வடிகட்டுவதுடன் 99% புறஊதாக் கதிர்களையும் தடுத்து தோலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் இந்த பருத்தி ஆடைகள் மற்றும் உபகரணங்கள் பல்வேறு வண்ணங்களிலும் வருகின்றன. இவற்றைத் துவைத்து ஆறுமாதங்கள் வரை மீண்டும், மீண்டும் பயன்படுத்தலாம். இவைகளை இணையம் மூலமாகவும் வாங்கமுடியும்.

"விவசாயக் கூலித் தொழிலில் இருந்த கிராமப்புறப் பெண்கள், வீட்டுவேலை செய்துகொண்டிருந்த பெண்களை ஒருங்கிணைத்து, தையற் பயிற்சி அளித்து, தனது தொழிற்சாலையில் வேலை வாய்ப்பினை அளித்திருக்கிறார் தீப்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com