மன அழுத்தம் தீர...
By எஸ். சந்திர மெளலி | Published On : 26th January 2022 06:00 AM | Last Updated : 26th January 2022 06:00 AM | அ+அ அ- |

சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டரை நாம் சந்திக்கப்போகிறோம். இந்திய நாட்டின் குடியரசு தினத்தையொட்டிய மிகவும் பொருத்தமான பெண்மணி அவர். பெயர் டாக்டர் ரிபப்ளிகா.
இந்த வித்தியாசமான பெயருக்குக் காரணம், அவரது பிறந்த நாள் இந்தியக் குடியரசு தினமான ஜனவரி 26 நாளன்று வருகிறது. நோய்வாய்ப்பட்டு, மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களின் கடைசிக் காலத்தில் அவர்களைப் கவனித்துக்கொள்ளும் "முதியோர் பராமரிப்பு மருத்துவமனை' நடத்தி வரும் அவருடன் ஒரு சந்திப்பு:
உங்களின் குடும்பப் பின்னணி பற்றி?
சென்னையில் செட்டில் ஆன குஜராத்தி குடும்பம் எங்களுடையது. அப்பா ஆர்.எம்.தவே. சென்னை மாநகரத்தின் "ஷெரீஃப்' பதவி வகித்தவர். தலைவர் காமராஜருக்கு நெருக்கமானவர். தேசப்பற்று மிகுந்த குடும்பம். குடியரசு தினத்தன்று பிறந்த எனக்கு "ரிபப்ளிகா' என்று என் பெற்றோர் பெயரிட்டதில் வியப்பொன்றும் இல்லை.
டாக்டராக ஏன் ஆசைப்பட்டீர்கள்?
"எனக்கு ஸ்கூல் படித்து முடித்தவுடன், குடும்ப கலாசாரப்படி அடுத்த சில வருடங்களில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தைப் பராமரிப்பது என்ற வழக்கமான விஷயத்தில் ஈடுபாடு இல்லை. என்னுடைய திருமணத்தைத் தள்ளிப் போட விரும்பினேன். அதற்காக நான் கண்டுபிடித்த காரணம்தான் மருத்துவப் படிப்பு! அடுத்து ஐந்து வருடங்கள் வீட்டில் திருமணம் பற்றி பேச்சு எடுக்கமாட்டார்கள் இல்லையா? போரூர் ராமசந்திரா மருத்துவக் கல்லூரியில்தான் எம்.பி.பி.எஸ். படித்தேன். படிக்கும்போதே, என்னை அறியாமல் மருத்துவத்தின் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒரு டாக்டராக, இந்த சமூகத்துக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும் என்பது புரிந்தது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரு சின்ன கிளினிகில் துவங்கி அடுத்து ஒரு நர்சிங் ஹோம் ஆகி, இன்று ஒரு சிறிய மருத்துவமனையாக வளர்ந்து முதியவர்ககளுக்கு மருத்துவ சேவை செய்வதை ஒரு பாக்கியம் என்று நினைக்கிறேன்.
முதியவர்களை பராமரிக்கும் சேவையைத் தேர்ந்தெடுத்தது குறித்து?
நான் கிளினிக் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு முதிய பெண்மணியை சந்தித்தேன். அவருடைய கணவர் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை; தன்னிடம் இருந்த கொஞ்சம் சொத்துக்களையும் ஒரு கோயிலுக்கு தானமாகக் கொடுத்துவிட்டார். அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, என்னிடம் வந்தார். அவருக்கு கேன்சர் என்று கண்டுபிடித்தேன். சிகிச்சை செய்து கொள்ள வசதி இல்லை; அவரை கவனிக்கவும் யாருமில்லை; அவரது பரிதாபமான நிலை என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. அவரை, அக்கறையோடு கவனித்துக் கொண்டேன். அவர் மறைந்தபோது, அவரைப் போன்ற கடுமையான நோய் பாதிப்புக்குள்ளாகிய, வசதி இல்லாத நோயாளிகளை அவர்களின் இறுதிக் காலத்தில் நாம் வலி நிவாரண சிகிச்சை அளித்து, கடைசி மூச்சு வரை வைத்து காப்பாற்ற ஒரு மருத்துவமனை துவங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றியது. அதன் செயல் வடிவம்தான் இன்று நடத்திவரும் ஆர்.எம்.டி. பாலியேடிவ் கேர் டிரஸ்ட் மற்றும் மருத்துவமனை. கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், வலியின் தீவிரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ரயிலின் முன் விழுந்து உயிரையே மாய்த்துக் கொள்ள முயற்சித்தார். அவருக்கு வலிநிவாரண சிகிச்சையோடு சேர்த்து மனநல ஆலோசனையும் அவசியமாக இருந்தது.
"பாலியேடிவ் கேர்' என்பது என்ன?
"பாலியேடிவ் கேர்' என்பதற்கு மரணவலி தணிப்புச் சிகிச்சை என்று பொருள் கொள்ளலாம். இது தீராத நோய்களால் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு மருத்துவ பராமரிப்பு மற்றும் செவிலியர் கவனிப்பு ஆகியவை கொண்ட பல்நோக்கு மருத்துவ அணுகுமுறை ஆகும். நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான வலி, மன அழுத்தம் மற்றும் இதர அசெளகரியங்கள் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும் விதமாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தச் சிகிச்சையின் நோக்கம் நோயாளி மற்றும் அவரது குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது ஆகும். இதில் ஒரு முக்கியமான விஷயம், நவீன உயர் மருத்துவச் சிகிச்சைகள் அந்த நோயாளிகளுக்கு பயனளிக்காத சூழ்நிலையில், இந்த மரணவலி தணிப்புச் சிகிச்சை என்பது முற்றிய நிலையில் உள்ள நோயைக் குணப்படுத்தாது. வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை குறைந்த சிரமங்களுடன் கடக்க உதவும். இறக்கும் நிலையில் நோயாளிக்குத் தேவைப்படும் அரவணைப்பையும் மரணவலி தணிப்புச் சிகிச்சையையும் அளிக்கவேண்டியது இன்றைய சமூகத்தில் மிக அவசியம். இது ஒரு மனிதநேய அணுகுமுறை என்றும் சொல்லலாம்.
நான் இதற்கென பிரத்யேகமாகப் படித்து, உரிய பயிற்சியும் பெற்றிருக்கிறேன். என்னுடைய வழக்கமான மருத்துவப் பணிகளோடு சேர்த்து, இதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன்.
எல்லா நோயாளிகளையும், கடைசி வரை பராமரிக்கும், வசதிகள் நம்மிடம் இல்லையே?'
உண்மைதான். எல்லோரையும் ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிப்பது சாத்தியமில்லை என்பதால்தான், அத்தகைய நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்களுடன் உடன் இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு "கேர் டேக்கர்களை' உருவாக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம்.
ஆகவே, அத்தகைய பயிற்சி கொடுத்து, ஆட்களை தயார் செய்து வருகிறோம். முறையான படிப்பினை முடித்து, பயிற்சி பெற்ற அவர்கள், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் கூட இருந்து அல்லது பகல் நேரத்தில் மட்டுமாவது அவர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த பட்டயப் படிப்பினை இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக்கழகத்திலும் படிக்க முடியும். ஆரம்ப காலத்தில், நான் அளிக்கும் பாலியேடிவ் கேர் சிகிச்சையை சில டாக்டர்களே கிண்டல் செய்திருக்கிறார்கள்.
பாலியேடிவ் சிகிச்சையை கிண்டல் செய்ய என்ன காரணம்?
ஓரு நோயாளி, தன் நோய் குணமாகவேண்டும் என்றுதான் டாக்டரிடம் வருவார். டாக்டரின் சிகிச்சையின் பலனாக தன் நோய் தீரவேண்டும் என நினைப்பார். ஆனால், நீங்கள் பாலியேட்டிவ் சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் மரணத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து அவர்களை நோயிலிருந்து குணப்படுத்தவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்பது அவர்களின் வாதம்.
உண்மையை சொல்லவேண்டுமானால், இத்தகைய நோயாளிகளுக்கு உடல் ரீதியான வலி 40% என்றால் மனோரீதியான வலிதான் 60%. எனவே, அவர்களுக்கு வலியை கட்டுப்படுத்தும் சிகிச்சையோடு கூடவே, அவர்களுக்கு மன ரீதியான சிகிச்சையும் அளித்து, அவர்களை ஆறுதல் படுத்தவேண்டிய இரட்டிப்பு வேலை எங்களுக்கு. அது மட்டுமில்லை; நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நோயின் தீவிரத்தை எடுத்துச் சொல்லி புரிய வைப்பதுடன் மனநல ஆலோசனைகள் சொல்லி, தைரியமூட்ட வேண்டியதும், மிகவும் அவசியம்.