தனக்குத் தானே திருமணம்
By தி.நந்தகுமார் | Published On : 19th June 2022 06:00 AM | Last Updated : 19th June 2022 06:00 AM | அ+அ அ- |

குஜராத்தில் இளம்பெண் ஒருவர் அண்மையில் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நெருங்கிய தோழிகள், உடன் பணியாற்றுவோர் என 10 பேர் மட்டுமே பங்கேற்ற விழா, 40 நிமிடத்தில் முடிவடைந்தது.
குஜராத்தில் உள்ள பரோடாவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24), எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றவர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.
வெளிநாடுகளில் பரவலாகக் காணப்படும் "சோலோகேமி' என்ற இந்த முறைக்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், ஜூன் 11-ஆம் தேதி நடத்தப்படவிருந்த திருமணத்தை 8-ஆம் தேதியே ஷாமா பிந்து தனது வீட்டில் நடத்திவிட்டார். மெஹந்தி, மஞ்சள் பூசும் விழா உள்பட அவரது குடும்பப் பாரம்பரிய வழக்கபடி சடங்குகள் நடத்தப்பட்டன. அப்போது, அவர் தனது நெற்றியில் தானே குங்குமம் வைத்து தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கான மந்திரங்கள் ஒலிபெருக்கியில் இசைக்கப்பட்டது. கழுத்தில் மாலை அணிந்து, நெற்றியில் குங்குமம் இட்டு மணப்பெண்ணாக மாறி ஷாமா பிந்து தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார்.
இதுபற்றி ஷாமா பிந்து கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன்.
அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன். மகிழ்ச்சி அளிக்கிறது. திருமணத்துக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், எனது உணர்வைப் புரிந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தவர்களுக்கு நன்றி.
திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன்.
சுய திருமணத்தை சிலர் அர்த்தம் இல்லாததாகக் கருதலாம். எனது பெற்றோரும், எனது திருமணத்துக்கு திறந்த மனதுடன் ஆசி வழங்கியுள்ளனர்'' என்றார்.