மனிதம் வளர்ப்போம் - மகளிரைக் கொண்டாடுவோம்!   

உலக வரலாற்றில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
மனிதம் வளர்ப்போம் - மகளிரைக் கொண்டாடுவோம்!   

உலக வரலாற்றில் அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-8-ஆம் தேதி உலக மகளிர் 
தினத்தன்று அதை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகின்றனர். இத்தினத்ûயொட்டி சிலரது கருத்து:

சரஸ்வதி ராமநாதன் - ஆன்மிகச் சொற்பொழிவாளர், பேராசிரியை. 

மார்ச்-8 எங்கே பார்த்தாலும் மகளிர் தினக் கொண்டாட்டம். இத்தினத்தில் விருதுகள் கொடுப்பதும் பெண் சாதனையாளர்களை கௌரவிப்பதும்  கொஞ்ச காலமாகவே நடந்து வருகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை மகளிருக்கு என்று ஒரு நாள் ஒதுக்க தேவையில்லை ஏன் தெரியுமா? 

நம் சமயம், நாடு, கலாசாரம், பண்பாடு இவற்றில் பெண்கள் மிக உயர்வாக கருதப்படுகின்றனர். மேலும்,  நதியாக, பூமியாக, சக்தியாக, இயற்கையின் ஆற்றலாக தாய்மையைப் போற்றியது பாரதம். 

ஆண் பாதி பெண் பாதி என்று இறைவனையே அர்த்தநாரீஸ்வரராக கண்டது நம் சமயம்தான்.  அன்னையும்-பிதாவும் முன்னறி தெய்வம் என்று அவ்வை சொன்னாளே.. அதன் பொருள், நமக்கு  முதலில் தெரிகிற தெய்வம் அம்மா. அம்மா சொல்லித்தான் அப்பா யார் என்று தெரியும். அம்மாவும் அப்பாவும் காட்டினால் தான் குரு. அந்த குரு தான் உபதேசம் பண்ணி தெய்வத்தை காட்டுகிறார். ஆக அம்மா என்கிறவள் தான் முதல் தெய்வம். 

வித்தாய், எனை பெத்தாய், மாதம் பத்தாய் என்னை சுமந்தாய். முல்லை கொத்தாய், என்னை எடுத்தாய், நீ பித்தாய், எனை வளர்த்தாய், நீ பெரிதாய், என்னை நினைத்தாய், நீ எனதாய் எதை எடுத்தாய் இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.  அப்படிப்பட்ட தாயின் பொறுப்பு ஒன்றோ அல்லது இரண்டோ அல்ல.  ஒரு குழந்தையை ஈன்றது முதல் அதைப் பேணி வளர்த்து, திருமணம் முடித்து, அவனை பெரியவனாக பார்த்து அவன் குழந்தைகளை வளர்க்கும் போதும் அந்தத் தாய்மை அவளை விட்டு போவதில்லை. ஆகவேதான், தாய் என்ற ஸ்தானத்தை தெய்வத்திற்கு சமமாக சொல்லுகின்றனர். 

ஒரு பெண் அன்பு செய்வதற்காகவே ஆண்டவனால் படைக்கப்பட்டவள். உடன் பிறப்பாக இருந்து துணை செய்கிறாள், பிறகு மனைவியாகி,  தாய்க்குப் பின் தாரம் என்று வாழ்வின் ஆதாரமாகிறாள். ஒரு குடும்பத்தின் ஆணி வேராக நிற்கிறாள்.  மரம் வளர்வதற்கு எப்படி வேர் முக்கியமோ அதைப்போல குடும்பம் புகழ்பெற்று திகழ பெண்ணின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாடுபோற்றும் அளவுக்கு அக்குடும்பம் திகழும். 

கவிதா ஜவஹர் -  பட்டிமன்ற பேச்சாளர்

""வீட்டின் கண்களாகவும் நாட்டின் தூண்களாவும் திகழ்பவர்கள் பெண்கள் தான். கதை சொல்லும் பாட்டியாக, கணிவு கொண்ட மனைவியாக, பரிவு கொண்ட அக்காவாக, அக்கறை கொண்ட தங்கையாக, தோள் கொடுக்கும் தோழியாக, பாசம் மிக்க மகளாக, குறும்பு செய்யும் பேத்தியாக நம் வாழ்க்கை முழுவதும் நிரம்பியிருக்கிறார்கள். அன்பால் நம் வாழ்வை அர்த்தப்படுத்துகிறார்கள்.  

கற்காலத்தில் ஸ்கான்டிநேவியன் நாட்டில்; எடுக்கப்பட்ட ஆறு பெண்களின் மண்டை ஒடுகளில் அடிப்பட்ட காயம் இருந்திருக்கிறது. காலங்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தான்சானியாவில் லோராலி எனும் இடத்தில் ஏறத்தாழ 3.6மில்லியன் வருடப் பழமையான மனிதக் காலடிச் சுவடுகள் பதிவாகி இருந்ததை தற்காலத்தில் கண்டுப்பிடித்தனர். இத்தனை மில்லியன் வருடங்கள் எரிமலைச் சாம்பலால் பழுதடையாமல் பாதுகாக்கப்பட்டு இருந்த அந்த சுவடுகள், முதன் முதலில் மனிதன் நிமிர்ந்து நடந்ததற்கான அடையாமாய் உள்ளது. பக்கத்தில் ஒரு பெண்ணின் காலடிச்சுவடும் உள்ளது. ஆணின் காலடி அழுத்தமாகவும் பெண்ணின் காலடிச்சுவடு சரிந்து பள்ளமாகவும் இருந்தது. அதன் மூலம் அவள் ஒரு குழந்தையைச் சுமந்து நடந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.  ஒரு குடும்பம் நடந்து போன முதல் அடையாளத்திலேயே அடுத்த தலைமுறையைச் சுமக்கும் பொறுப்பு பெண்ணைச் சார்ந்ததாகத் தான் இருந்திருக்கிறது.

சில நேரம் அச்சுறுத்தல்கள், தொடக்கத்திலேயே உற்சாகத்தை கிள்ளி விடுதல், பொறாமை போன்றவை இருக்கத்தான் செய்கிறது. அதையும்தாண்டி பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

நாம் ஜெயித்து காட்டும் போது உன்னால் எப்படி முடியும்? என்று சொன்னவர்கள் கூட உன்னால் மட்டுமே முடியும் என்று எனக்கு தெரியும் என்பார்கள் ஆகவே எதையும் மனதில் போட்டு வருந்தாமல் அனைத்தையும் கடந்து செல்லுங்கள்'' .


செ.ராஜசஹஸ்ரநாமி - முதன்மை செயல் அதிகாரி,
தமிழ்நாடு உணவுப் பொருள் வணிகவளாகம்,
மதுரை.

""இன்றைய சமூகத்தின் பெரிய சவால் நாட்டின் உற்பத்தியை அதிகரித்தல். பெரிய தொழிற்சாலைகளை அமைத்தல். பாலம் கட்டுதல். நெடுஞ்சாலையை அகலப்படுத்துவது ஆகியவை அல்ல. தரமான மனிதவளம் தான். இந்தியா, அமெரிக்கா, சீனா  எந்த நாடாக இருந்தாலும் உலகம் முழுக்க இன்றைய தேவை தரமான மனிதவளம்.  அத்தகைய தரமான மனித வளத்தை உலகுக்கு அளிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பெண் தான். 

தனித்துவம், ஆற்றல், உற்பத்தி என பெண் ஆணுக்கு நிகராக வளர வேண்டும். உயர வேண்டும்.  சுதந்திரம் அடைய வேண்டும் இவையெல்லாம் அரசியல். ஊடலியல் மற்றும் உளவியல் அடிப்படையில், ஆண் ஒரு தனிப்பிறவி, பெண் ஓரு தனிப்பிறவி ஆணைப் போல பெண் வளர வேண்டும் என்று சொல்லுவது அர்த்தமற்றது. குடும்பம் என்ற அடிப்படை அமைப்பில் இருந்து தான் உருவாகிறது ஊர், நாடு, உலகம்.

இன்றைய குடும்பத்தின் பெரிய சவால் எது என்று கேட்டுப்பாருங்கள், ஆணும், பெண்ணும் உடனடியாகச் சொல்வார்கள் குழந்தை வளர்ப்புதான் என்று.  இந்த சவாலான விஷயத்தில் பெரும்பாலான பங்கு பெண்ணையே சாருகிறது. 

நாளைய சமூகம் வளமாக இருக்க வேண்டுமெனில் இன்றைய குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட வேண்டும். இந்த உன்னத பணியை ஏற்றிருக்கும் பெண்களுக்கு உலகம் சரியான முறையில் கை கொடுக்க வேண்டும். 

எட்டு மணி நேரப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் குறைந்தது பத்து மணி நேரம் பணியிடத்தில் இருக்க வேண்டியிருக்கும். ஒன்று- இரண்டு மணி நேரம் ரயில் அல்லது பேருந்தில் பயணித்து அருகிலுள்ள ஊர்களில் வேலை பார்க்கும் பெண்களும் உண்டு. பின்னர் குழந்தையுடன் எப்படி நேரம் செலவழிப்பது, எப்படி தரமான மனித வளத்தை உருவாக்குவது. பெண்கள் வேலை பார்க்க வேண்டும் பொருளாதார ரீதியாக குடும்பத்தில் அவர்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றால் பெண்ணின் ஆற்றல் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். குழந்தை மற்றும் குழந்தை பராமரிப்பு இவற்றைத் தாண்டி பிற பணிகளிலும் சிறப்பாக செயல்படும் ஆற்றல் பெண்ணுக்கு உண்டு. இதனை நாம் இழந்து விடக்கூடது.  


கிருபா- கவிஞர், நடிகை.

""பெண் மென்மையானவள்.  பெண்களுக்கு சாதாரணமாக கோபம் வந்தாலும் அதன் தீவிரம் ஆண்கள் அளவுக்கு இருப்பதில்லை. ஆத்திரம் வந்து ஆண்கள் 
சத்தம் போடுவது, ஆக்ரோஷமாகச் சண்டை போடுவது, வன்முறையைக் கையாளுவது போல் பெரும்பாலும் பெண்கள் செய்வதில்லை. ஆனால் அவர்களது மெளனம், அதனோடு சேர்ந்த போராட்டம். கோபத்தை வெளிப்படுத்துகிறது.

இப்போதுள்ள கால கட்டத்தில் பெண்கள் தானாகவே எல்லாவிதத்திலும் முன்னேற்றத்திற்கான முயற்சிகளையும் எடுக்க தொடங்கி விட்டனர். ஆனால் வெளியில் நடமாடுகிற பெண்ணை அச்சமூகமே தவறான பார்வையில் பார்க்கின்ற நிலைமையும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

பிறக்கின்ற அனைத்து மனித இனமும் சுதந்திரமாக வாழ்வதில்லை. ஒரு சிலருக்கு பல இடர்பாடுகள் வருகின்ற நிலைமை இருக்கத்தான் செய்கிறது. அதற்காக ஒடிக் கொண்டிருக்கிற மனிதர்களை பாதியில் நிறுத்தி விடுவது நல்ல குறிக்கோள் அல்ல. ஆகவே,  உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு ஓடக் கற்றுக்கொடுங்கள், ஓடிக் கொண்டு இருப்பவர்களுக்கு மாரத்தான் ஓடுவதற்கு ஊக்கத்தை அதிகரிக்கச் செய்யுங்கள். பள்ளிக்கல்வியில் இந்தியா ஆண், பெண் இருவருக்கும் சமமான வாய்ப்பளிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. மருத்துவம், சட்டம், தகவல் தொழில் நுட்பம், பொறியியல், மேலாண்மை போன்ற சிறப்புப் படிப்புகளிலும் பெண்களின் பங்கு உயர்ந்து வருகிறது. 

இன்று பணி செய்யும் இடங்களில் நான்கில் ஒருவர் பெண்ணாக இருக்கிறார். பட்டம் பெற்ற பொறியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு இப்போது பெண்கள். ஆரம்ப சுகாதாரப் பணிகளில் நான்கில் மூன்று பேர் மகளிர். மருத்துவ ஆய்வு, வங்கித்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பட்டயக் கணக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மகளிரே ஆகவே கல்வி தான் பெண்களுடைய வெற்றிக்கு வழிவகுக்கிறது.  மண்ணில் இருந்து மறையும் வரை பெண்கள் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் என்னுடை  ஆசை ''.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com