ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம்!

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பாதித்து சாதனை
ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம்!

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்திலிருந்து மண்புழு உரம் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பாதித்து சாதனை புரிந்து வருகிறார் அழகு. எம்.எஸ்.ஸி., பிஎட் முடித்த இவர், திருமணத்துக்கு முன்பு வேலைக்கு சென்ற அழகு, திருமணத்துக்கு பிறகு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஏதாவது கைத்தொழிலை செய்ய வேண்டும் என எண்ணிய அழகு, மத்திய அரசின் வேளாண் அறிவியல் பயிற்சி மையத்தில் சேர்ந்து மண்புழு உரம் தயாரிக்கும் முறையை கற்றார்.

பின்னர், கணவர்  தீரனின் உதவியோடு ரூ.1 லட்சம் செலவில் மண்புழு உரம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை வாங்கிய அழகு, தனது வீட்டுத்தோட்டத்திலேயே மண்புழு உரம் தயாரிக்கும் பணிகளை கடந்த 2019 }இல் தொடங்கினார்.

உரங்கள் உற்பத்தி செய்ய தேவைப்படும் மண்புழுக்களை பெரம்பலூரில் உள்ள ஒரு மண்புழு உரம் உற்பத்தி செய்யும் பண்ணையில் வாங்கி வந்து, உரங்களை தயாரித்த அழகு, விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை நாடி அதன் வெப்சைட் தளத்தில் மண்புழு உரத்தின் விவரத்தினை பதிவு செய்தார்.

அன்று முதல் இன்று வரை அமேசான் மூலம் 1 கிலோ முதல் 10 கிலோ வரையிலான பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறார். மேலும், நேரடியாக வரும் விவசாயிகளுக்கும் 50 கிலோ வரையிலான மூட்டைகளை விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து அழகு கூறியது:

""விவசாயியான எனது தந்தை, சூரியநாராயணன் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பாகல், புடலை, வெண்டைக்காய், கத்திரி, அவரை, பச்சை மிளகாய் என எல்லா காய்கறிகளையும் பயிரிடுவார். அங்கு தான் விவசாய வேலைகளை முழுமையாகக் கற்றுக்கொண்டேன்.

வீட்டில் இருக்கும்போது பெற்றோருடன் சேர்ந்து வயலில் வேலை செய்வேன். எனக்கு விவசாயம் மிகவும் பிடித்த தொழிலாக இருந்தது. என்னுடைய தந்தை, வித்தியாசமான பயிர்களை பயிரிடும் மாறுபட்ட விவசாயியாக இருப்பதால், அவரைத் தேடி பலரும் வருவார்கள். அதனால் காய்கறி சாகுபடி தொடர்பாகப் பலருடைய ஆலோசனைகளும் கிடைத்தன. அப்போது மண்புழு உரம் பற்றியும், அதன் பயன்கள் குறித்தும் தெரியவந்தது.

இதையடுத்து எனது தந்தை கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் சென்று, அங்கு மண்புழு வாங்கிவந்து , அதனை தொட்டில் கட்டி விட்டிருந்தார். பின்னர் சில நாள்களில் அதன் மூலம் கிடைத்த உரம் கத்திரி செடிகளுக்கு போடப்பட்டது. கத்திரி நல்ல விளைச்சல் கண்டது. கத்திரிக்காய்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருந்தன.

சாதாரண உரத்திற்கும், மண்புழு உரத்திற்கும் நல்ல வேறுபாடு  தெரிந்தது. அதில் அதிக விளைச்சலும் கிடைத்தது.

உரத்தை தயாரித்து அதன் விற்பனையைப் பெருக்க என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்தேன். நகரங்களை நோக்கிச் செல்லலாம் என தீர்க்கமாக முடிவெடுத்தேன்.

கூகுளில் நர்சரிகளின் முகவரிகளைத் தேடினேன். அமேசான் தளத்தில் சென்று விற்பது எப்படி என்பது பற்றிய அடிப்படைத் தகவல்களைத் திரட்டினேன். மண்புழு பிராண்டின் பெயர் "சாயில் ஸ்பிரிட்'. அமேசான் தளத்தில் லாக்இன் செய்து அவர்கள் கேட்ட ஆவணங்களை எல்லாம் சமர்ப்பிக்க 2 மாதங்களாகிவிட்டன. ஆரம்பத்தில் மிகவும் குறைவாகத்தான் விற்பனை இருந்தது.

விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு வரத் தொடங்கியது.  மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு இந்த மண்புழு உரம் திடமான காய்கறிகளை நச்சுத்தன்மை இன்றி தருகிறது. அதனால் மாடித்தோட்டம் அமைத்துள்ளவர்கள் பெரும்பாலும் வாங்கிச் செல்கின்றனர்.

ஒரு கிலோ வாங்கினால் ரூ.15 எனவும், 25 கிலோவுக்கு மேல் வாங்கும் போது ரூ.12 எனவும் கொடுத்து வருகிறேன். தற்போது 4 ஆட்களை கொண்டு மண்புழு உரம் தயாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு கூலி உட்பட அனைத்து செலவுகளும் போக ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.

இது எனது குடும்பத்துக்கு பெரும் உதவியாக உள்ளது. வேலைக்கு செல்ல முடியாத பெண்கள் இதுபோன்ற சிறு சிறு கைத்தொழில்களை செய்தால் நிச்சயம் வாழ்வில் வெற்றியை அடையலாம். மண்புழு தயாரிப்பது குறித்து பயிற்சியினை தர தயாராகவும் உள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com