உன்னால் முடியும் நம்பு.. நம்பு!- 10: ஒதுங்காதே உயரப் பறந்திரு!

அப்துல்கலாம்  இளம் பிள்ளைகளோடும் மாணவர்களோடும் உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார்.
உன்னால் முடியும் நம்பு.. நம்பு!- 10: ஒதுங்காதே உயரப் பறந்திரு!

அப்துல்கலாம்  இளம் பிள்ளைகளோடும் மாணவர்களோடும் உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் ஒரு கிராமத்துப் பள்ளிக்கு விஜயம் செய்தார். அந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்களோடு உரையாடும் பொழுது," கனவு காணுங்கள்" என்று ஊக்கப்படுத்தியதோடு,"உன் வாழ்வில் வரும் அனைத்து சங்கடங்களும் உன்னை அழிக்க வரவில்லை. உன் திறமையையும் மற்றும் உள்மன சக்தியையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்துச் செல்கிறது" என்று பேசினார்.

கலாம், பேசிவிட்டதோடு நிகழ்ச்சியை முடித்துக் கொள்ள மாட்டார்கள். உரையைக் கேட்ட மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்காக கேள்விகள் கேட்கவும் அனுமதிப்பார்கள். கேள்விகளுக்கு அந்த மாணவரின் வயதுக்கேற்ப புரிந்து கொள்ளும் விதத்தில் கதைகள் சொல்லி பதில் அளிப்பார்கள். அன்றைக்கும் மாணவர்கள் கேள்விகள் கேட்டார்கள்.

ஒரு மாணவன், "ஐயா என் வாழ்வில் வரும் துன்பங்களே என்னை மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றன. நானோ எளிய நிலையில் இருப்பவன். அன்றாட வாழ்க்கையே என் குடும்பத்தில் பிரச்னையாக இருக்கிறது. என் துன்பங்களில் இருந்து விடுபட்டு எப்படி என் கனவுகளை நோக்கிப் பயணிப்பது என்று எனக்குப் புரியவில்லை. கனவு காணுங்கள் என்று சொல்லித் தரும் தாங்களே அந்தக் கனவை நோக்கி எப்படி பயணிப்பது என்பதற்கும் வழி காட்ட வேண்டும்" என்று ஆர்வத்துடன் கேட்டான்.

மாணவனின் கேள்வியில் இருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டார் அப்துல்கலாம்.

"நண்பனே, கனவுகள் மெய்ப்படுவது நம்முடைய மனதின் வலிமையைப் பொறுத்திருக்கிறது. முயற்சியின் வேகத்தைப் பொறுத்திருக்கிறது. உனக்குப் புரியும் படியாக ஒரு கதை சொல்கிறேன். அதிலிருந்து கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான வழியைக் கண்டுகொள்ள முயற்சி செய்' என்று சொல்லிவிட்டு கதையைத் தொடங்கினார்.

""ஒரு பெரிய மலைக்காடு. அதன் அடிவாரத்தில் கிராமங்கள் இருந்தன. கிராமத்தையடுத்து மலையடிவாரத்தில் காடுகளில் விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து வந்தன. பறவைகள் பகலில் கிராமங்களை நோக்கிச் சென்று வயலில் இரை தேடி மாலை நேரத்தில் காடுகளுக்குத் திரும்பி தங்கள் கூடுகளில் அடைந்து கொள்ளும். தங்கள் தேவைகளுக்கான வசதிகள் கிடைத்ததால் அந்தப் பகுதியில் பறவைகள்  உற்சாகமாக வாழ்ந்தன.

ஒருநாள், பகல் பொழுதில் பறவைகள் இரை தேடிப் பறந்து கொண்டிருந்தன. அப்பொழுது, மேகம் சூழ்ந்து மழை பொழியத் தொடங்கியது. நல்ல கனமழை. பறவைகள் மழையில் நனைந்து பறக்க முடியாமல் எங்கேனும் ஒதுங்குவதற்கு இடம் தேடி அலைந்தன. அவற்றின் கூக்குரல் அந்தப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தது. மழையில் திறனற்ற பறவைகள் வீழ்ந்தன. மழையில் நனைந்து மறைவிடம் சேர்ந்தன. சற்றே சக்தி உள்ள பறவைகள் மழையில் நனைந்து கொண்டே தங்கள் கூடுகளை அடைந்து விடும் நோக்கத்துடன் பறந்து கொண்டிருந்தன.

ஒரே ஒரு பறவை மட்டும் ஒதுங்குவதற்கு இடம் தேடிக்கொண்டிருக்கவில்லை. தன்னுடைய ஆற்றலையெல்லாம் பயன்படுத்தி தான் பறந்து கொண்டிருந்த உயரத்தை விட இன்னும் அதிக உயரத்தில் பறக்கும் முனைப்புடன் பறந்தது. அதைப் பார்த்து கூடுகளைத் தேடிப் பறந்த பறவைகள், "இதென்ன? இந்தப் பறவைக்கு அறிவில்லையா? ஒன்று ஒதுங்குவதற்கு இடம் தேட வேண்டும் அல்லது கூட்டைத் தேடி விரைந்து பறக்கவேனும் முயல வேண்டும் இரண்டும் இல்லாமல் இப்படி மழையை எதிர்த்து மேலே பறக்கிறதே" என்று சொல்லின.

இது பற்றியெல்லாம் அந்தப் பறவை கவலைப் படவில்லை. கவனம் செலுத்தவில்லை. அதன் கவனம் மழையை எதிர்கொண்டு உயரத்திற்குப் போவதில் குவிந்திருந்தது. இப்படிப் பறந்த பறவை தன்னுடைய முழு வலிமையையும் பயன்படுத்தி மழை மேகங்களையும் தாண்டி உயரப் பறந்தது. மேகங்களுக்குக் கீழே தானே மழை. மேகங்களுக்கு மேல் மழை ஏது? பறவை உயரத்தில் மலை உச்சியில் மழை இல்லாத இடத்திற்குச்  சென்றுவிட்டது.

இப்பொழுது மலை உச்சியின் வனத்தில் மழை இல்லாத இடத்தில் பறவை தன்னுடைய இரை தேடும் பணியை ஆனந்தமாக மேற்கொண்டது. துன்பம் இல்லை. தடைகள் இல்லை. துணிச்சலோடு மழையை எதிர்த்து அந்த நேரத்தில் பறவை மேற்கொண்ட உயரப்பறந்த பயணத்தால் புதிய பாதை புலப்பட்டு விட்டது.

நண்பனே, இந்தக் கதை என்ன சொல்கிறது? நம்முடைய கனவுகளை நோக்கிய பயணத்தில் இடையூறுகளும் துன்பங்களும் ஏற்படும். பிரச்னைகளைக் கண்டு மற்ற பறவைகள் ஒதுங்க இடம் தேடி அலைந்தனவோ அப்படி ஆகி விடக் கூடாது. பின்வாங்கிவிடாமல் பிரச்னையைத் தாண்டிப் பறந்த பறவையைப் போல நம்முடைய ஆற்றலை மனதை ஒருமுகப்படுத்தி நம்முடைய துன்பங்களைத் தாண்டிச் சென்று விடவேண்டும். அப்போது துன்பங்களும் பிரச்னைகளும் நம் காலுக்குக் கீழே போய்விடும்.

இந்த முயற்சியில் பறவையின் இரு குணாதிசயங்களைப் பார்க்க வேண்டும். மற்ற பறவைகளைப் பார்த்து எல்லாரும் ஒரு வழியில் கூடுகளை நோக்கிப் பயணிக்க நாம் இப்படியான முயற்சியில் இருக்கிறோமே  இது சரிதானா? என்ற குழப்பம் இல்லாத தெளிவான மனநிலை அதற்கு இருந்தது. பன்மடங்கு வலிமையோடு பறக்க சிறகுகள் வலிமையானவையாக இருக்க வேண்டும். இந்த வலிமை ஒரே நாளில் வந்துவிடாது. ஒவ்வொரு நாளும் உயரத்தில் பறக்க வேண்டும் என்ற சிந்தனையோடு பயிற்சியும் அதற்கு இருந்ததும் காரணம்.

அப்படித் தான் நாமும் நம் கனவுகளை நனவாக்க எந்தத் துறையாக இருந்தாலும் அதிலே தேவையான பயிற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு நம் முயற்சியில் நமக்கே சந்தேகம் தோன்றிவிடக் கூடாது. தெளிவான மனநிலையோடு சுற்றி நடப்பவற்றைப் பற்றியும் பேசும் சொற்கள் பற்றியும் கவலைப் படாமல் தொடர் முயற்சியில் இருக்க வேண்டும். உன் துன்பங்கள் யாதாயினும் அதனை ஒருநாள் தாண்டி விடுவாய்'' என்று  டாக்டர்.அப்துல்கலாம் ஐயா அந்த மாணவனுக்கு வழி காட்டினார்கள்.

கதையாக மட்டுமில்லாமல் அந்தக் கதையின் கருத்தைத் தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டியவர் அல்லவா? அதனால் நம்பிக்கை நம் மனதில் அழுத்தமாக வேரூன்றுவதும் சாத்தியமாகிறது.

இந்தக் கதையும் அதன் கருத்தும் என்னை மிகவும் பாதித்தன. சில நாட்கள் இதே சிந்தனையோடு இருந்தேன். இந்தக் கதை கேட்ட எல்லாருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.

மனத்தெளிவும் வலிமையும் கொண்டு தன்னுடைய பிரச்னைகளைக் காலுக்குக் கீழே போட்டு மிதித்துவிட்டு முன்னேறிய பெண் ஒருவரின் நினைவும் எனக்கு வந்தது. சாஹித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திருமதி ராஜம் கிருஷ்ணன். எத்தனையோ விமர்சனங்களுக்கிடையில் அவர் தன்னுடைய கதைகளை எழுதினார் என்பது ஒருபுறம், அவருடைய வாழ்க்கையே சவால்கள் நிறைந்ததாகவே இருந்தது என்பதும் தெரியுமா?

ராஜம் கிருஷ்ணன், பள்ளிக்கல்வி கூட முழுமையாகக் கிடைக்கப் பெறாதவர். வயதுக்கு வரும் முன்னரே சிறு வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டவர். அதிலும் ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர். படிப்பதிலும் எழுதுவதிலும் அவருக்கு இருந்த ஆர்வம் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படிக்கத் தூண்டியிருக்கிறது. ""அடுக்களையில் வேலை இருந்து கொண்டே இருக்கும். அடுக்களை வேலைகளை வேகவேகமாக முடித்துவிட்டு அங்கேயே அமர்ந்து படிக்க எடுத்து வைத்திருந்த நூல்களைப் படிப்பேன். எழுத விரும்பியதை எழுதிப் பார்த்து காகிதங்களை மளிகைப் பொருள்கள் வைத்துள்ள இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேன்''  என்று சொல்லியிருக்கிறார்.

ராஜம், குழந்தைப் பருவத்திலேயே திருமணம் ஆனவர் என்பது மட்டுமல்ல குழந்தைகள் இல்லாதவர். அதன் பொருட்டாக ஏற்பட்ட பிரச்னைகளை சற்றும் சட்டை செய்யாமல் அது பற்றிய விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு தன்னுடைய படிப்பில் கவனத்தை செலுத்தி படிப்பதிலும் புதிய மொழிகளைக் கற்றுக் கொள்வதிலும் எழுதுவதற்கான பயிற்சியிலும் முழுமையாக மனதை செலுத்தியிருக்கிறார்.

கணவரின் பணி நிமித்தம் பல ஊர்களில் வாழும் படி நேர்ந்தபொழுது அவரோடு பயணித்து அந்தந்தப் பகுதி மக்களைப் பற்றிய கலாச்சார வாழ்வியல் அடிப்டைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். பெண் எழுத்தாளர் என்றால் குடும்பக் கதைகள் எழுதுவார்கள் என்றிருந்த எண்ணத்தை உடைத்து சமூகசிக்கல்கள், பொருளாதாரம், அரசியல் சார்ந்த விஷயங்களை எழுதத் துவங்கினார்.

நாவல்கள் எழுதத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிரச்னைகளை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள அந்தந்த ஊர்களுக்கே சென்று தங்கியிருந்து விஷயங்களை சேகரிப்பாராம். அப்படியான முயற்சிகளில் பல பிரச்னைகள், மிரட்டல்கள், தொந்தரவுகள் என்று வந்தாலும் அதையெல்லாம் மனவலிமையோடு தாண்டி எழுத நினைத்ததை நேர்மையோடு எழுதி முடித்திருக்கிறார். "பிரச்னைகளை எதிர்த்து நின்று ஜெயிப்பதில் தான் வாழ்வின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது." இது தான் அவர் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வாசகம்.

முதுமையில் கூட சற்றும் அச்சமோ குழப்பமோ இல்லாமல் தெளிவாக தன்னுடைய வாழ்வை மட்டுமல்ல மரணத்தையும் மரணத்திற்குப் பின் தன் உடல் என்னவாக வேண்டும் என்பது வரையிலான தீர்க்கமாக முடிவுகளை எடுத்திருந்தார். ராமச்சந்திரா மருத்துவமனையில் தன்னுடைய இறுதி நாள்களில் தன் மரணத்திற்குப் பின் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பாடம் படிப்பதற்குப் பயன்படும்படியாக எழுதி வைத்துவிட்டு உயிர் நீத்தார். நோயாலும் கூட அவரை வெற்றி கொள்ள முடியாமல் போனதற்கு அவரது தெளிவும் மனவலிமையும் மட்டுமே காரணம்.

ஒரு கிராமத்தில் பிறந்து பள்ளிக்கல்வி கூட கிடைக்காத பெண் சாஹித்ய அகாதெமி விருதாளராகவும் சமூக செயல்பாட்டாளராகவும் தன்னை இந்த சமூகத்தில் உயர்த்திக் கொள்ள முடிந்திருக்கிறது. அதே மனவலிமையும் தெளிவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் சாத்தியமானால் வானம் தொட்டுவிடும் தூரம் தான். தொடர்ந்து உயரப் பறந்திருப்போம்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com