கைப்பின்னல்: தேசிய அங்கீகாரம்!

தமிழகத்தில் வசிக்கும் பண்டைய பழங்குடியினத்தவரில் 6 முக்கிய பழங்குடியினத்தவர் நீலகிரியில் வசிக்கின்றனர்.
கைப்பின்னல்: தேசிய அங்கீகாரம்!

தமிழகத்தில் வசிக்கும் பண்டைய பழங்குடியினத்தவரில் 6 முக்கிய பழங்குடியினத்தவர் நீலகிரியில் வசிக்கின்றனர். அத்தகைய பண்டைய பழங்குடியினரின் ஒரு சமுதாயமான தோடர் சமுதாயத்தினருக்கு அண்மையில் தேசிய அளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் நடைபெற்ற சர்வேதச மகளிர் தின விழா கொண்டாட்டத்தின்போது இந்திய குடியரசு தலைவரிடமிருந்து 29 பேருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்து. இதில் தமிழகத்தை சேர்ந்த மூவரில், நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகேயுள்ள பெட்டுமந்து பகுதியைச் சார்ந்த தேஜம்மா(74) மற்றும் ஜெயமுத்து(56) ஆகிய இரு தோடர் சமுதாய பழங்குடி பெண்களும் அடங்குவர். 

தோடர் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் அவர்களின் பாரம்பரிய போர்வையான பூத்துக்குளி போர்வையை இயந்திரங்களின் உதவியின்றி கைப்பின்னல் (எம்பிராய்டரி) மூலமே தயாரித்து விற்பனை செய்து பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக இவர்களுக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று தோடர் பூத்துக்குளி போர்வை குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கருத்து வெளியிட்டபோது, தோடரின மக்களின் கைப்பின்னல் கலையைக் குறித்து வெகுவாக பாராட்டியிருந்தார். இந்நிலையில் நடப்பாண்டில் தோடர் பழங்குடியின பெண்கள் இருவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருது குறித்து, ஜெயமுத்து கூறியதாவது:

""நான் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பூத்துக்குளி போர்வைக்கான கைப்பின்னல் தொழிலில் ஈடுபட்டுள்ளேன்.  தலைமுறைகளைக் கடந்தும் தோடர் சமுதாயத்தினரின் கைப்பின்னல் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்து கைப்பின்னல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இதற்காக சங்கமம் தோடர் பெண்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பினை நிறுவி அதன் மூலம் சுமார் 450 உறுப்பினர்களைக் கொண்ட 30 சுய உதவிக் குழுக்களை உருவாக்கி இக்கலையை தொடர்ந்து பரவலாக்கியுள்ளோம். இவ்வமைப்புக்கு நான் செயலாளராக உள்ளேன்.

2016-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற சுற்றுலா பொருட்காட்சியின்போது தோடரினத்தாரின் கலைப்பொருட்களுக்காக ஒரு காட்சிஅரங்கு ஒதுக்கப்பட்டது. 

அப்போது அங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பலரும் இந்த கைப்பின்னல் கலையைக் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தற்போது தேசிய அளவிலும் இக்கலையை அங்கீகரித்து நடப்பாண்டில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவ்விருது தோடரினத்தாரின் கைவினைத்திறனுக்காக வழங்கப்பட்ட விருதாக இருந்தாலும், நீலகிரி மாவட்டத்திற்கே வழங்கப்பட்ட விருதாக எண்ணி மகிழ்கிறோம்.

தேஜம்மா கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பூத்துக்குளி கைப்பின்னல் கலையில் ஈடுபட்டுள்ளதாகவும், தான் தனது மூதாதையரிடமிருந்து கற்றுக் கொண்ட இக்கலையை தனது அடுத்த தலைமுறையினருக்கும் கற்றுத்தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும்
தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com