காஞ்சிபுரத்தில் கொலு பொம்மை தயாரிப்பு...!
By செளமியா சுப்ரமணியன் | Published On : 02nd October 2022 06:00 AM | Last Updated : 02nd October 2022 06:00 AM | அ+அ அ- |

காஞ்சிபுரத்தில் ஒரு தெரு முழுவதும் கொலு பொம்மைகள் தயாரிக்கும் வீடுகள் இருக்கின்றன. அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மைக்காரத் தெரு என்றால், சின்ன காஞ்சிபுரத்தில் யாரைக் கேட்டாலும் வழி காட்டுவார்கள்.
இருபுறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டுள்ளன. சில வீடுகளின் உள்ளே, சில வீடுகளின் வீட்டின் மாடி அறையில் என பொம்மைகள் நீக்கமற நிறைந்துள்ளன. காணக்கிடைக்காத "செட்' பொம்மைகள் எல்லாம் அங்கு கொட்டிக் கிடக்கின்றன. விலையும் குறைவே! தேடிய பொம்மைகள் இல்லையெனில், இருக்கும் வீடுகளைக் கை காட்டுகிறார்கள்.
அதிசயமாகக் கிடைக்கும் " கைலாய செட்' சாதாரணமாகவே உள்ளது. காவடி செட், பீமன் கர்வ பங்கம் செட், ஸ்ரீரங்கம் விஸ்வரூப தரிசனம் செட் என்று இல்லாத கொலு பொம்மைகளை கிடையாது எனலாம். ராமாயணம், மகாபாரதம், பாகவதம், போன்ற புராண செட் பொம்மைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றன. கிரிக்கெட், கல்யாணம், கடைவீதி, டான்ஸ் பொம்மைகள், தேசத் தலைவர்கள் போன்ற பொம்மைகளும் உள்ளன. கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன என்பதில் இருந்தே இதன் பெருமையை அறியலாம்.
அலங்கரிப்பது எப்படி?
கொலு பொம்மைகளை வீட்டில் உள்ளவர்கள் அம்மனை அலங்கரிக்க வேண்டியது எப்படி?
முதல் நாளன்று மது கைடபரை அசுரர்களை வதம் செய்ய உதவிய அம்பிகையை துர்க்கையாக அலங்கரிக்க வேண்டும்.
இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரியின் வடிவில் அம்மனை அலங்கரிக்க வேண்டும்.
மூன்றாம் நாள் மகிஷாசுரனை வதைக்கப் புறப்பட்ட கோலத்தில் அம்மனை அலங்கரிக்க வேண்டும்.
நான்காம் நாள் ஜெயதுர்கை திருக்கோலத்தில் அலங்கரிக்க வேண்டும்.
ஐந்தாம் நாள் அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் அம்பாளை அலங்கரிக்க வேண்டும்.
ஆறாம் நாள் சர்ப்ப ராஜ - பாம்பு ஆசனத்தில் சண்டிகா தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் அம்பிகையை அலங்கரிக்க வேண்டும்.
ஏழாம் நாள் தங்கமயமான பீடத்தில் அமர்ந்து வீணை வாசிக்கும் கோலத்தில் தேவியை அலங்கரிக்க வேண்டும்.
எட்டாம் நாள் ரக்தபீஜன் என்ற அசுரனை வதம் செய்த பிறகு கருணையுடன் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் அம்பாளை அலங்கரிக்க
வேண்டும்.
ஒன்பதாம் நாள் சிவ சக்தியை காமேஸ்வரி என்னும் கோலத்தில் அம்பாளை அலங்கரிக்க வேண்டும்.*
பத்தாம் நாள் விஜயதசமி அன்று ராஜராஜேஸ்வரியாக , ஆதிபராசக்தியாக அம்பாளை அலங்கரிக்க வேண்டும்.