பணிபுரியும் பெண்கள் குழந்தைகளுக்குத் தாய்ப் பால் புகட்ட
By பி.எஸ்.கே. | Published On : 13th August 2023 12:00 AM | Last Updated : 12th August 2023 09:20 PM | அ+அ அ- |

'பணிபுரியும் பெண்கள் மகப்பேறு அடைந்து குழந்தை பெற்றவுடன் தாய்ப் பால் புகட்டுவது ஓர் சவாலாகவே இருக்கிறது. இவர்கள் தாய்ப்பால் புகட்ட சில வழிமுறைகளைக் கையாளலாம்'' என்கிறார் புதுச்சேரி மதர் தெரசா முதுநிலை அறிவியல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியை டி.ஆர்.மஞ்சுபாலாஹ தேஷ்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
''குழந்தைகள் பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப் பால்தான் சத்தான உணவு. நோய் எதிர்ப்புச் சக்தியும் மிகுந்தது.
தாய்ப் பால் கொடுப்பது ஒரு பாரம்பரிய நடைமுறை, ஆனால் இன்றைய சூழலில் பணிபுரியும் பெண்களால் 100 சதவீதம் தாய்ப் பாலைப் புகட்ட முடிவதில்லை.
63 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாகத் தாய்ப் பால் கிடைக்க நேரிடுகிறது. பணிபுரியும் இடங்களில் 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டாலும், அது அரசு நிறுவனங்களுக்கு மட்டும்தான். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரின் நிலை கடினம்தான்.
இதற்காக, சில வழிமுறைகளைக் கையாளலாம்.
பெண்கள் தாய்ப் பாலை தங்களது கைகளில் வெளியேற்றி, வீட்டில் சேமித்து வைக்கலாம். இல்லத்தில் இருக்கும் பராமரிப்பாளர் குழந்தைக்கு உணவு அளிக்கலாம். தாய்ப் பால் வெளியேற்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வெளிப்படுத்தப்பட்ட தாய்ப் பாலை அறை வெப்பநிலையில் சுமார் எட்டு மணி நேரம் வரை கொள்கலனில் சேமிக்கலாம். உறைபனியில் 24 மணி நேரமும், ஒரு வாரத்துக்கும் மேலாக உறைவிப்பானிலும், ஒரு மாதங்களுக்கும் மேலாக ஆழமான உறைவிப்பானிலும் சேமித்து வைக்கலாம்.
தாய் தனது அலுவலகத்தில் அனுமதியைப் பெற்று குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டலாம். ஒன்று அவள் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் வீட்டை மாற்றலாம். குழந்தையை வேலை செய்யும் பகுதிக்கு அழைத்து வர யாராவது இருக்க வேண்டும்.
பணிபுரியும் இடத்தில் குழந்தை காப்பக வசதி இருந்தால், பெண்கள் வேலை இடைவெளியின்போதோ அல்லது குழந்தை அழும்போதோ சென்று தாய்ப் பால் புகட்டலாம்.
அரசுத் துறைகளில் மட்டுமின்றி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 6 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பான சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும்'' என்றார்.