'புதிய பெண் எழுத்தாளர்களை உருவாக்குவதே லட்சியம்'' என்கிறார் 'பேக்கி டெர்ம் டேஸ்' நிறுவன இணை இயக்குநர் உமா அபர்ணா.
சிறந்த கதைசொல்லி, தமிழ்ப் புத்தகத் தொகுப்பாளர் என்று பல்வேறு திறமைகளைப் பெற்றிருக்கும் அவர், மும்பையில் தனது கணவருடன் வசித்து வந்தார்.
கணவரின் மறைவுக்குப் பின்னரும் மனம் தளராமல், தனது மகள், மகனை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.
பெங்களூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த அவர், பின்னர் வேலூருக்கு குடிபெயர்ந்தார். தன்னைப் போன்று ஆதரவற்றவர்களை ஒருங்கிணைத்து 'பேக்கி டெர்ம் டேஸ்' என்ற நிறுவனத்தை 2020-இல் தொடங்கி, தனது மகள் உஷா கண்ணனை இயக்குநராக நியமித்தார்.
இதுவரையில் 400 நூல்கள் உருவாக உமா அபர்ணா உதவியிருக்கிறார். இவற்றுள் 5 நூல்கள் திருநங்கைகளும், வேறு சில நூல்களை பாலின அடையாள பிறழ்வு உள்ளவர்களும் எழுதியுள்ளனர்.
சாதனைப் பெண்மணியாக மிளிரும் உமா அபர்ணாவிடம் பேசியபோது:
'இது முழுக்க, முழுக்கப் பெண்களுக்காகத் தொடங்கப்பட்டதல்ல. இதில், ஆண் எழுத்தாளர்களும் உள்ளனர்.
அரசு சார்பில் நாங்கள் சலுகைகளையும் பெறாமல், சுயநிதி அமைப்பாகவே செயல்படுகிறோம்.
எங்கள் அமைப்புக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் பங்கேற்கிறோம்.
பிரபலமான பெண் எழுத்தாளர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். புதிய பெண் எழுத்தாளர்களை உருவாக்குவதே எங்களின் நோக்கமாகும்.
நூல்களை வெளியிட எந்த நிபந்தனையும், தொகையையும் நாங்கள் கேட்பதில்லை. எங்களுக்கு லாபமும் எதுவுமில்லை. நூல்களைத் தட்டச்சு செய்யும் செலவை மட்டும் பெற்றுகொள்கிறோம். ஒரு சிலர் அவர்களாவே தட்டச்சு செய்து அனுப்புவதும் உண்டு.
மூதாட்டிகளுடன் இணைந்து அந்தக் கால அனுபவங்களையும், கதைகளையும் நவீன உபகரணங்களுடன் நேரம் செலவிடும் எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதனால் பல தொழில் நிறுவனங்களும் எங்களுடன் கைகோர்த்து, ஓவியம், கவிதை உள்ளிட்ட போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன.
இதனால் 'தாய் உள்ளம்' விருதும், 'இடியம் குழுமம்' அளித்த 'உலக சிறந்த பெண் சாதனையாளர்' விருதும் கிடைக்கப் பெற்றேன். நான் எழுதிய 'கண்ணாடி' என்ற பெண்களைப் பற்றிய நூல், 'மிரர்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
எனது மகள் உஷா கண்ணனும் 'சத்தியபிரியா' என்ற பெயரில் சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியிருக்கிறார். இதோடு, அவர் புதிய எழுத்தாளர்களையும் ஊக்குவித்து வருகிறார்'' என்கிறார் உமா அபர்ணா.