சுடச்சுட

  
  14

  சுரேஷ் நாயக்
   'இவர் தோற்றத்தில் குமரன் - ஆனால்
   உள்ளத்தில் குழந்தை!'
   ஆம்! இவரது வயது 41. ஆனால் இவரது அறிவு வளர்ச்சியோ 4 வயதுக்குரியது மட்டுமே! மரபணுக் கோளாறினால் ஏற்படும் "டௌன்'ஸ் குறைபாடு' (Down's syndrome) என்னும் நோயினால் பாதிக்கப்பட்டவர். தனது 10-ஆவது வயதில் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றைக் கண்ட இவர் பெரிதும் கவரப்பட்டார்.
   சிறு கயிறு ஒன்றை எடுத்துக்கொண்டு அதை முடிச்சிடுவதும் அவிழ்ப்பதுமாக இருந்தார். இவரது ஆர்வத்தைக் கண்ட பெற்றோர் தொழில் முறை மேஜிக் கலைஞர் ஒருவரை வரவழைத்து சில எளிய மேஜிக் தந்திரங்களைக் கற்றுக் கொடுத்தனர். அவற்றை முழுமையாகக் கற்றுக்கொண்ட இவர் தன் வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிகளுக்குச் சென்று மேஜிக் நடத்திக் காட்ட ஆரம்பித்தார்.
   மரம் நடுதல், சுற்றுப்புறத் தூய்மை, பெரியவர்களை மதித்தல், தன் சுத்தம் என ஏதாவது ஒரு மையக் கருத்தை வலியுறுத்தியபடியே தனது மேஜிக் நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினார். இதனால் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் இவரை அழைத்தவண்ணம் இருந்தன.
   இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா 29.9.2010 அன்று மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சுரேஷ் நாயக்கின் மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதன் மூலம் முயற்சி செய்தால் அனைவரும் சாதிக்க முடியும் என்று உணர்த்தினார்.
   சிறு வயது முதலே சுரேஷ் நாயக்கிற்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. அவர் கையில் எப்பொழுதும் ஒரு சிறிய நோட்டுப் புத்தகமும், பென்சில் ஒன்றும் இருக்கும். தான் மேஜிக் நிகழ்த்தும் இடங்களில் தனக்கு மிகவும் பிடித்தவர்களை அழைத்து அவர்களது தொலைபேசி எண்களை அதில் எழுதச் செய்வார். அவர்களது பெயரையும் கேட்டுக் கொள்வார்.
   எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்களது பெயரையும், தொலைபேசி எண்ணையும் அவர் நினைவில் வைத்துக்கொள்வார். இந்த வினோத பழக்கம் இன்று வரை தொடர்கிறது.
   இந்த அதிசயத் திறமையைக் கண்ட இவரது சகோதரர்கள் பெங்களூரு நகரின் தொலைபேசி எண்கள் அடங்கிய புத்தகத்தை இவரிடம் கொடுத்து இதில் உள்ள எண்களையும், பெயர்களையும் உன்னால் கூற முடியுமா என்று சவால் விட்டனர். அரைமணி நேரம் அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த சுரேஷ் ஏறத்தாழ 150 எண்கள் மற்றும் பெயர்களை (வெவ்வேறு பக்கத்தில் உள்ளவை) மிகச் சரியாகக் கூறினார்.
   கர்நாடக அரசியல் தலைவர்கள் "லிம்கா சாதனைப் புத்தகம்' (Limca Book of Records) என்ற நிறுவனத்திற்கு இவரைப் பரிந்துரை செய்தனர். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான பொதுமக்களும், அரசியல் பிரபலங்களும் குழுமி இருந்தனர். 72 நிமிடங்களில் இவர் 518 தொலைபேசி எண்களையும், பெயர்களையும் மிகச் சரியாகக் கூறினார். டௌன்'ஸ் குறைபாடு உடைய ஒருவர் இத்தகைய நினைவாற்றலைப் பெற்றிருப்பது அதுவே முதல் முறையாகும். எனவே அது ஒரு உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.
   "இந்தியா சாதனைப் புத்தகம்' (India Book of Records) என்ற நிறுவனம் இவரிடம் வேறொரு நகரத்தின் தொலைபேசி எண்கள் பட்டியலைக் கொடுத்து இவரைப் பரிசோதித்தது. 30 நிமிடங்களில் அதிகபட்சமாக 204 தொலைபேசி எண்களையும், பெயர்களையும் மிகச் சரியாகக் கூறினார். இதன் காரணமாக கர்நாடக அரசு 2.5.2014 அன்று இவருக்கு "சுவர்ண கர்நாடகா' (Suwarna Karnataka Award) விருதை வழங்கி கௌரவித்தது.
   10.10.2013 அன்று கர்நாடக முதல்வர் "டௌன்'ஸ் குறைபாடு' பற்றிய விழிப்புணர்வுப் பேரணி ஒன்றை நிகழ்த்தினார். அதில் சுரேஷுடன் அவரது அண்ணன் மகன் 5 வயது நிரம்பிய "சாத்விக்'கும் இணைந்து மேஜிக் நிகழ்ச்சிகள் செய்து காட்டினார். இதன் மூலம் "உலகின் டௌன்'ஸ் குறைபாடு உடைய முதல் மேஜிக் நிபுணர்' என்ற பெருமையைப் பெற்றார்.
   கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மேஜிக் நிகழ்ச்சிகளை இவர் இலவசமாக நிகழ்த்தி உள்ளார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சமூக அக்கறை கொண்ட கருத்து ஒன்றை மையமாக வலியுறுத்துகிறார். இவர் இதுவரை 7 சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்.
   மனிதர்களின் சிறுமூளையில் மரபணுக் கோளாறின் காரணமாக ஏற்படுவதே "டௌன்'ஸ் குறைபாடு' ஆகும். இந்நோய் கண்டவர்கள் 4 அடி உயரத்திற்கு மேல் வளர முடியாது. மேலும் இதய நோய், தோல் நோய், கண்பார்வைக் குறைபாடு போன்றவற்றால் அவதிப்படுவர்.
   இத்தனை குறைபாடுகளையும் உடைய சுரேஷ் சமூக சேவைக்கு உடல்நலக் குறைபாடோ, வயதோ, மனவளர்ச்சி இன்மையோ ஒரு தடையல்ல என நிரூபித்துள்ளார். இன்னமும் அவர் மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். சுரேஷ் மிகவும் விரும்பும் மற்றொரு விஷயம் பாடல்கள் பாடுவது!
   உருவத்தில் உயரம் இல்லை!
   உள்ளத்தால் உயர்ந்த சுரேஷ் போன்றவர்களைப் போற்றுவோம்! முன் மாதிரியாகக் கொள்வோம்!
   என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
   திருவையாறு.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai