Enable Javscript for better performance
கருவூலம் - கன்னியாகுமரி  - Dinamani

சுடச்சுட

  

  கருவூலம் - கன்னியாகுமரி  

  By DN  |   Published on : 02nd July 2016 03:33 PM  |   அ+அ அ-   |    |  

  2

  தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தின் கடற்கரை தமிழ் நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இக்கடற்கரை மிக அழகானது! சுமார் 70 கி.மீ. நீளமுள்ளது. இந்தக் கடற்கரையில் எண்ணற்ற கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் முக்கியத் தொழில் மீன் பிடித்தலாகும்.
   2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு இக்கடற்கரை இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வருகிறது.
   
  முக்கடல் சங்கமம்!
   இந்தியப் பெருங்கடல் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களும் இங்கு கூடுகின்றன. அம்முனையைத்தான் குமரி முனை என்கின்றனர். மேலும் இக்கடற்கரையில் காலையில் சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் காண பலர் கூடுவார்கள். அதற்காகவே பல வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவது வழக்கம். கதிரவனின் உதயம் மற்றும் மறைவைக் காண்பதற்கு வசதியாக இங்கு காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
   
  விவேகானந்தர் மண்டபம்!
   இக்கடற்கரைக்குக் கிழக்கே கடலில் உள்ள பெரிய பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி விவேகானந்தர் தன் அமெரிக்கப் பயணத்திற்கு முன் இங்கு வந்தபோது கடலில் குதித்து நீந்தி இந்தப் பாறையை அடைந்து தவம் செய்தார்! அவர் நினைவாக 1970ஆம் ஆண்டு இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கிறது. அதற்காகவே பல வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருகிறார்கள். கடற்கரையிலிருந்து இங்கு வர படகுப் போக்குவரத்து உண்டு.
   
  திருவள்ளுவர் சிலை!
   இக்கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் நடுக்கடலில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது முழுமையாகக் கருங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளதாகும். திருக்குறளின் 133 அதிகாரங்களைக் காட்டவே அச்சிலை 133 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வள்ளுவருக்கு உள்ள சிலைகளில் இதுவே மிகப் பெரிதாகும். விவேகானந்தர் மண்டபத்திற்குப் படகில் வந்த பின் அங்கிருந்து படகில் இங்கு வரலாம்.
   
  காந்தி மண்டபம்
   இங்கு காந்தி மண்டபம் ஒன்றும் உள்ளது. காந்தியடிகள் 1925 மற்றும் 1937 ஆகிய ஆண்டுகளில் இங்கு வருகை தந்துள்ளார். அவர் மறைந்த பிறகு அவரது அஸ்தி இங்குதான் முக்கூடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அவர் அஸ்தியை வைத்திருந்த இடத்தில்தான் காந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் அஸ்தி வைத்திருந்த இடத்தில் ஆண்டுக்கொரு நாளில் சூரியனின் கிரணங்கள் விழுவதுபோல் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. காந்தியடிகள் இம்மண்ணில் 79 ஆண்டுகள் வாழ்ந்ததைக் குறிப்பிடுவதுபோல் இம்மண்டபமும் 79 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.
   
  காமராஜர் மணி மண்டபம்
   காந்தி மண்டபத்துக்கு அருகிலேயே காமராஜருக்கும் இங்கு ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகளின் நிழற்படங்கள் உள்ளன. இம்மண்டபத்திற்கு நேர் எதிரே அழகான தமிழன்னை பூங்கா உள்ளது.
   
  குமரி அம்மன் கோயில்
   சிவபெருமானின் தேவியான பார்வதித் தாயார் "குமரி பகவதி' என்ற பெயர் பூண்டு சிவனை அடையும் பொருட்டு இக்கடற்கரையில் அமர்ந்து தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் குமரி அம்மன் பெயரால்தான் இக்கடற்கரை உள்ள மாவட்டத்திற்கே "கன்னியாகுமரி' என்ற பெயர் ஏற்பட்டது. இங்கு குமரி அம்மனுக்கு ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது நல்ல ஆன்மீகத் தலமாகவும் கருதப்படுகிறது.
   
  தாணுமாலயன் கோயில்
   இது சுசீந்திரத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டில் பிரமாண்டமாய்க் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் கண்ணைக்கவரும் குளத்துடனும், கோபுர அமைப்பு, மண்டபங்களுடன் காணப்படுகிறது.
   
  திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்
   இந்தக் கோயிலின் அமைப்பு கேரளக் கோயில்களின் அமைப்பு போன்று இருக்கும். இது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
   
  கல்குளம் நீலகண்டர் ஆலயம்
   நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள இந்தக் கோயிலும் மிக பிரமாண்டமாகவும் அழகிய பெரிய குளத்துடன் மனதை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
   
  லேடி ஆஃப் ரான்சம் சர்ச்
   புகழ் பெற்ற இந்த ஆலயம் கடற்கரையில் மிகக் கம்பீரமாக இருக்கிறது. ஒருமுறை கிறிஸ்துவின் சீடரான செயின்ட் தாமஸ் கி.பி. 52லேயே இங்கு வந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாலயத்திலுள்ள அன்னை மேரியை இங்குள்ள மக்கள், "அலங்கார உபகார மாதா' என அன்புடன் அழைக்கின்றனர். எழில் நிறைந்த இந்த தேவாலயம் காண வேண்டிய ஒன்று.
   
  வட்டக் கோட்டை
   திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த கடற்கரையை ஒட்டிய இந்தக் கோட்டை அழகிய பூங்காவுடன் கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து கடலைக் காண்பது ஓர் இனிய அனுபவமாகும்.
   
  பத்மநாபபுரம் அரண்மனை
   தக்கலையிலுள்ள இது திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்ததாக இருந்தது. 1601ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ராஜா இங்கு தனது அரண்மனையை அமைத்தார். சமஸ்தானத்தின் தலைநகராக தக்கலை இருந்தது. தற்போது இது பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அரண்மனைக்கு உள்ளே இருக்கும் சரஸ்வதி கோவிலும் நவராத்திரி மண்டபமும் மிக அழகாகக் காணப்படுகிறது.
   
  திர்ப்பரப்பு நீர்வீழ்ச்சி
   குலசேகரம் என்ற இடத்திலிருந்து சுமார் 3.5 கி.மீ தூரத்தில் கோடையாற்றிலிருந்து வரும் நீர் அருவியாகக் கொட்டுகிறது. இங்கு மகிழ்ச்சியுடன் வந்து அனைவரும் நீராடி மகிழ்கின்றனர். கண்டு, குளித்து, அனுபவிக்க வேண்டிய இடம் இது!
   
  மாத்தூர் தொட்டிப் பாலம்
   கன்னியாகுமரியிலுள்ள திருவட்டாறுக்கு அருகில் இருக்கும் மகேந்திரமலையிலிருந்து வரும் பஹ்ரளி (பறழி ஆறு) ஆற்றிலிருந்து வரும் நீரை ஒரு நீண்ட தொட்டிப் பாலம் அமைத்து மாத்தூர் பகுதியைச் செழிக்கச் செய்துள்ளனர். பாலத்தில் ஆறு வாய்க்காலாக ஓடி வரும்! இந்த நீர் இப்பகுதியைச் செழிப்பாக்குகிறது! பச்சைப் பசேல் என்று இங்கு இயற்கை எழில் கொஞ்சும்!
   
  நாகராஜா திருக்கோயில்
   இக்கோயில் நாகர்கோயிலில் உள்ளது. இந்தக் கோயில் கட்டமைப்பு கேரளபாணியில் இருக்கும். இக்கோயில் மிகப் பிரசித்தி பெற்ற தலமாகும்.
   
  கன்னியாகுமரி
   இம்மாவட்டம் ஒரு காலத்தில் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இது முதலில் திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆட்சிக்குக் கீழ் இருந்து வந்தது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதிதான் இது தமிழ்நாட்டுடன் இணைந்தது. இதன் பரப்பளவு 1672ச.கி.மீ ஆகும். ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் கொண்ட மாவட்டம் இதுவாகும்.
   
   இனிய அலையோசையுடன் கூடிய இந்துமகா சமுத்திரத்துடன் பல அழகான இயற்கைக் காட்சிகளுடன், அற்புதமான ஆன்மீகத் தலமாகவும் நல்ல சுற்றுலாத்தலமாகவும் குமரி மாவட்டம் விளங்குகிறது.
   
   -வளவ துரையன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai