சுடச்சுட

  
  7

  கதைப்பாடல்
   வேடன் ஒருவன் மாமர நிழலில்
   ஓய்வாய் உட்கார்ந்தான்
   ஓய்ந்து போயின உடலும் மனமும்
   உறக்கம் வந்ததனால்
   
   தரைமேல் தெரிந்த அடிவேர் மேலே
   தலையைச் சாய்க்கின்றான்.
   இரையை உண்டு திரும்பிய கிளிகள்
   இரண்டு தலைமேலே
   
   சந்து தெரிகிற நடுமரத் தருகில்
   சற்றே உட்கார்ந்து
   பொந்தின் உள்ளே முன்பின் னாகப்
   புகுந்தது தெரிகிறது.
   
   தூக்க நிலையைக் கலைத்து வேடன்
   சுறுசுறுப் படைகின்றான்
   பூக்களைப் போலக் கிளிகளை எடுக்கப்
   பொந்தில் கைவிட்டான்.
   
   தனித்தனிக் கூண்டில் தத்தை இரண்டும்
   தங்கிட வகைசெய்தான்
   கனிகள் சிலவும் உணவாய் வைத்தே
   களிப்பாய் நடக்கின்றான்.
   
   வருகிற வழியில் சோலைகள் நடுவே
   மாமுனி ஆசிரமம்
   "தருவதைப் பெறுவோம் ஒருகிளி இவரிடம்
   தரலாம்' எனத் தந்தான்.
   
   ஊரின் எல்லையில் கசாப்புக் கடைவர
   உள்ளே செல்கின்றான்
   கூறிய விலையைக் கூண்டுக் கிளிக்குக்
   கொடுத்தார் கடைக்காரர்.
   
   முனிவர் வாங்கிய கிளியினை ஒருநாள்
   வேடன் காண வந்தான்.
   அற்புதம்! ""வருக! ஐயா, வருக!
   அமர்க!'' குரல் கேட்டான்.
   
   நேராய் வரவேற் பளிப்பவர் யார்? என
   நிமிர்ந்து பார்க்கின்றான்!
   சீராய்க் கூண்டுக் கிளியதன் குரலாம்
   திரும்பவும் அழைத்ததுவே!
   
   உள்ளக் களிப்புடன் வேடன் மனத்தில்
   உவகை பொங்கியது!-பின்
   கசாப்புக் கடைக்கு விற்ற கிளியினை
   காணச் சென்றானே.
   
   அந்தக் கிளியோ ""வெட்டு, கொல்'' என
   விரட்டியடித்ததுவே!
   சேர்ந்த இடத்தின் குணத்தின்
   சாயல் கிளிகளில் கண்டானே!
   
   நல்லவர் வல்லவர் ஆவதற் குதவுவர்
   நண்பரும்! சார்பவரும்!-எனவே
   எல்லோருக்கும் இளமை முதல்-நல்
   துணையாய் இருந்திடுவோம்!
   
   "பரிதி' இரா.வேங்கடேசன்,
   அரியாங்குப்பம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai