Enable Javscript for better performance
 அதுவும் ஒரு சாத்திரம்தான்!- Dinamani

சுடச்சுட

  

   அதுவும் ஒரு சாத்திரம்தான்!

  By DN  |   Published on : 09th July 2016 03:59 PM  |   அ+அ அ-   |    |  

  13

  அரங்கம்

   காட்சி-1
   
   இடம்: குமரன் தெரு
   மாந்தர்: மாணவர்கள் அருள், சுகுமார், பீட்டர்.
   
   (அருள் வள்ளலார் பள்ளியின் தூய்மைக் குழுவுக்குத் தலைவன். பள்ளியையொட்டிய பகுதிகளுக்கும் அவன் பொறுப்பு. குமரன் தெருவுக்கு வருகிறான். அங்கே கிடக்கும் துண்டுத் தாள்களைப் பார்க்கிறான்)
   
   அருள்: (சுகுமாரிடம்) நீதானே இந்தத் தெருவின் தூய்மைக்குப் பொறுப்பு..?
   சுகுமார்: ஏதோ ஒரு ஆர்வத்தில் கை தூக்கினேன். வீட்டில் சொன்னேன். இந்தக் குப்பை சமாச்சாரமெல்லாம் வேண்டாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.
   அருள்: நாங்கள் கட்டாயமாக உன் தலையில் இதைச் சுமத்தவில்லை... நீயாகத்தானே ஏற்றாய்?
   சுகுமார்: சரி... இப்போது சொல்கிறேன்... நான் அதிலிருந்து விலகிக்கொள்கிறேன்.
   அருள்: ஆசிரியர் குமணன் நமக்குத் தலைவர். நீ இப்படிச் சொன்னால் அவர் என்ன நினைப்பார்...? பெற்றோர் சங்கக் கூட்டத்தில் இது பற்றித் தலைமையாசிரியர் சொன்னாரே... பெற்றோர்களின் ஒத்துழைப்பும் இந்தப் பணியில் தேவை என்று...
   சுகுமார்: அந்தக் கூட்டத்துக்கு என் அப்பா வரவில்லை.
   அருள்: தூய்மைப் பணி என்பது ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல அனைவரும் பங்கேற்க வேண்டியது... இது நமக்குப் பெருமை. மேலும் இது நலமான வாழ்வுக்கு அடிப்படை!
   சுகுமார்: அந்தப் பெருமை எனக்கு வேண்டாம்... என் அப்பா கண்டிப்பானவர். வேறு ஏதாவது இருந்தால் சொல். வெளியே சென்ற அப்பா வரும் நேரம்...
   அருள்: நான் என்ன உனக்குத் தவறான வழியைக் காட்டவா வந்தேன்? இதில் பயப்பட என்ன உள்ளது? பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் நல்ல தொடர்பு ஏற்பட இந்தப் பணி உதவும். ஊரும் தெருக்களும் சுத்தமாகும். துப்புரவுப் பணியாளர்களும் மனிதர்கள்தானே... அவர்களுக்கு நாம் உதவியாக இருக்கவேண்டும். ஒவ்வொருவரும் தூய்மையில் கண்ணாக இருந்தால் அவர்களுடைய பளு குறையும்... இதைத்தானே ஆசிரியர் குமணன் சொல்கிறார்.
   சுகுமார்: நான் பள்ளி, கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு விண்வெளி ஆராய்ச்சிக்குப் போகப் போகிறேன்... இந்த மண்ணைக் கிளறுகிற வேலை... குப்பை அள்ளும் வேலையெல்லாம் ஒத்துவராது.
   அருள்: சரி... உன் வீட்டு முன்னால் இந்தத் தாள்களைப் போட்டது யார்? இவை காற்றில் தெரு முனை வரை போய்விட்டன. தெருவின் தூய்மை, அழகு போய்... தாள்கள் சாக்கடையிலும் விழுந்து அடைத்திருக்கின்றன.
   சுகுமார்: யார் போட்டதோ... எனக்குத் தெரியாது.
   அருள்: ஏன் இந்தப் பொய்... மற்றவர்கள் தூய்மை செய்ய... நீ இரவில் மீண்டும் போடுகிறாய்... இது உனக்கு அழகா..?
   சுகுமார்: உனக்கு யார் சொன்னார்கள்..?
   அருள்: அது இப்போது முக்கியமில்லை... வீட்டு முன்னால் பெருக்குவார்கள்... நீர் தெளித்து கோலம் போடுவார்கள். அங்கே யாராவது குப்பையைப் போடுவார்களா..?
   (அவன் அமைதியாக இருக்கிறான்) ... இங்கே மரக்கன்றுகள் நட்டோம். இரண்டுவாரம் நானும் பீட்டரும் நீர் ஊற்றினோம். அதற்குப் பிறகு உன் பொறுப்பு என்று ஆசிரியர் குமணன் சொன்னார்... இவை வாடியுள்ளன...!
   
   (அருளும் பீட்டரும் நீர் ஊற்றுகிறார்கள்)
   
   சுகுமார்: இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை. ஊழியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். "நம் வேலையா இதெல்லாம்?' என்று அப்பா கேட்கிறார்..., "நீ ஒழுங்காகப் படி... மற்றதை நான் பள்ளிக்கு வந்து பேசுகிறேன்' என்கிறார்...
   அருள்: சரி.....! நீ உன் விண்வெளி ஆராய்ச்சிக்காக இப்போதே ஆயத்தமாக இரு... (பீட்டரிடம்) நீ இந்தக் கன்றுகளுக்கும் நீர் ஊற்று... (இருவரும் துண்டுத்தாள்களை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறார்கள்... சில கன்றுகளுக்கு நீர் ஊற்றுகிறார்கள்... சுகுமார் அதைப் பார்த்தவாறே வெளி இரும்புக் கதவை மூடுகிறான்).
   
  காட்சி-2
   
   இடம்: குமரன் தெரு
   மாந்தர்: மாணவர்கள், வேலன், சுகுமார்,
   அவன் தந்தை.
   
   (வள்ளலார் பள்ளியின் மாணவர்கள் ஒரு விளம்பரத் தட்டியை குமரன் தெருவில் வைக்கிறார்கள். அதில் "மீண்டும் பாரதி' என்ற நாடகம் காந்தி பூங்காவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு... சுகுமாருக்குத் தெரிந்த வேலன் என்ற இளைஞன் சுகுமார் வீட்டுக்கு வந்து தெரிவிக்கிறான்)
   சுகுமார்: (அவனிடம்) நாடகம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவசியம் பார்க்க வேண்டும். (தந்தையிடம்) அப்பா... உங்களுக்கும் நாடகம் என்றால் பிடிக்குமே... என்னவேலை இருந்தாலும் என்னோடு வரவேண்டும்.
   
   காட்சி-3
   
   இடம்-காந்தி பூங்கா
   மாந்தர்-அப்பகுதி மக்கள், நாடக நடிகர்கள், சுகுமார், சுகுமாரின் தந்தை.
   
   ("மீண்டும் பாரதி' நாடகம் நடக்கிறது)
   
   பாரதி: இந்த நகருக்கு என்ன பெயர்?
   மாணவன்: காந்தி நகர்.
   பாரதி: பலே பாண்டியா...! நம் தேசத் தந்தையை மறக்காமல் இருக்கிறார்களே....நல்ல மக்கள்....நாம் இவர்களைப் பாராட்டுவோம்.
   
   (விடுதலைக்காக பட்டபாட்டைக் காட்டும் சில காட்சிகள் அரங்கேறின...அதன் பின்னர்....)
   
   பாரதி: காக்கை குருவி எங்கள் சாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்...என்றேன்..., ஊரில் சிட்டுக் குருவிகளை இப்போது காணோமே...ஏன்? அவை தங்க இடமில்லை..., உணவும் இல்லை..., அப்படித்தானே...!
   மாணவன்: நாங்கள் வீடுகளில் கூடுகள் வைத்திருக்கிறோம்...,அன்போடு உணவும், நீரும் தருகிறோம்.
   (அவன் முதுகில் தட்டிப் பாராட்டுகிறார்)
   பாரதி: பாண்டியா...! நீங்களெல்லாம் சிங்கங்கள்! ஆற்றலுடன் எதையும் செய்வீர்கள்.... நீங்கள் மரங்களையும் காப்பாற்ற வேண்டும். பறவைகள் அங்கேதானே தங்கும்...,விளையாடும்...,கூடு கட்டும்....,இனம் பெருக்கும்!
   மாணவன்: உங்கள் சொல்படி நடப்போம்.....,எங்களுக்காக உங்கள் கம்பீரமான குரலில் ஒரு பாட்டைப் பாட வேண்டும்.
   (பாரதி, "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்...'என்று பாடுகிறார்.)
   பாரதி: சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்....!
   (அந்த அடியை அவர் பாடியதும் சுகுமாரும் அவன் தந்தையும் நிமிர்ந்து அமர்கிறார்கள்)
   தந்தை: (அவனிடம்) உன்னுடைய விண்வெளித்துறையைப் பற்றிப் பாடுகிறார்!
   சுகுமார்: ஆமாம் அப்பா! இதைக் கேட்க எனக்குப் பெரும் மகிழ்ச்சி!
   தந்தை: மேலே என்ன சொல்லப்போகிறார்....கேட்போம்.
   பாரதி: சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
   சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்!
   (அந்த அடியைக் கேட்டதும் இருவரும் திகைப்பு அடைகின்றனர்)
   மாணவன்: கவிஞர் ஐயா...சந்திர மண்டலம்....ஆய்வு என்று விண்ணுக்குச் சென்றீர்கள்...
   ...நாங்கள் சற்றும் எதிர்பாராத விதமாகப் பூமிக்கு வந்து....,சந்திகளையும் தெருக்களையும் பெருக்குவோம் என்கிறீர்கள்! அதையும் ஒரு சாஸ்திரம் என்றீர்கள்...., வியப்பாக உள்ளதே!
   பாரதி: பாண்டியா! நன்றாகக் கேட்டாய்...!....தெருக்களைச் சுத்தம் செய்வது என்னவோ இழிந்த வேலை என்பது போல அல்லவா இந்த சமூகம் பார்க்கிறது. அந்த வேலையைச் செய்பவர்களையும் இழிவாக நினைக்கிறது....அந்த விண்ணைப்போலவே இந்த மண்ணும் உயர்வானது! வானத்தை ஆய்வு செய்யும் அதே ஆர்வம் நம் தெருவை....,ஊரைச் சுத்தம் செய்வதிலும் இருக்க வேண்டும். அதற்காகத்தான் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தேன்.
   (அதைத் தொடர்ந்து சில காட்சிகள். பாரதி ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலைப் பாடுவதோடு நாடகம் முடிகிறது)
   
   காட்சி-4
   
   இடம்-பள்ளித்திடல்
   மாந்தர்-அருள், சுகுமார்
   
   (அருளைத் தேடி சுகுமார் வருகிறான்)
   
   சுகுமார்: விண்ணை ஆய்வு செய்வதுதான் பெருமை என்று நினைத்தேன். அது என் அறியாமை! பாரதி நாடகம் என் கண்ணைத் திறந்து விட்டது!.....இந்தக் குமரன் தெரு மட்டுமல்ல...,மற்ற பகுதிகளுக்கும் நான் பொறுப்பு!....மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி, வேலியும் அமைப்பேன்! என் தந்தையும் உதவுவதாகக் கூறிவிட்டார்!....,இது பொய்யல்ல...,உண்மை!
   
   (அவனுடைய மனமாற்றம் அருளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது)
   
   அருள்: ஆசிரியர் குமணனுக்கு இதைச் சொல்வேன்....மிகுந்த மகிழ்ச்சி அடைவார். உன்னை மனமாரப் பாராட்டுவார்.
   (பாரதியாக நடித்தவர் குமணன். அந்த வேடத்தில் அவர்தான் நடித்தார் என்பது தெரியாதவாறு ஒப்பனை இருந்தது. சுகுமாரின் மனத்தில் அழுத்தமான மாற்றத்தை ஏற்படுத்திய அவரை அருள் நன்றியோடு நினைக்கிறான்)
   
   திரை
  பூதலூர் முத்து
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai