Enable Javscript for better performance
இந்தியாவின் புகழ் பெற்ற பாலங்கள்!- Dinamani

சுடச்சுட

  
  4

  கருவூலம்
  பழங்காலத்தில் ஆறுகளை ஒட்டியே மனிதர்களின் குடியிருப்புகள் இருந்தன. பாலங்களின் தேவையும் அப்போதிலிருந்தே உருவாகிவிட்டது. ஓடைகளின் குறுக்கே நீண்ட மரங்கள், கயிறுகளில் தொங்க விடப்பட்ட மரப்பலகைகள், மூங்கில்கள் எனப் பலவகைகளில் பாலங்கள் அமைக்கப்பட்டது.
   முதன்முதலில் திட்டமிட்ட கட்டுமான பாணியில் அமைந்த நிலையான பாலங்களை ரோமானியர்கள் கட்டத் தொடங்கினர். ரோமானியர்கள் கட்டிய சுமார் 2100 ஆண்டுகள் பழமையான பாலம் ஸ்பெயினில் உள்ள "கொர்டோ' என்னும் இடத்தில் இன்றும் இருக்கிறது.
   இந்தியாவிலும் பலவகையான பாலங்கள் நீண்ட நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ளது. இன்று பயன்பாட்டில் உள்ள புகழ்பெற்ற பாலங்களில் சிலவற்றை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
   
  ஹெளரா பாலம்
   கொல்கத்தாவின் அடையாளமாக விளங்கும் தொங்கு பாலத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்போம்! மேற்கு வங்கத்தின் இரட்டை நகரமான ஹவுராவையும், கொல்கத்தாவையும் இணைக்க "ஹூக்ளி' நதியில் ஹவுரா பாலம் கட்டப்பட்டுள்ளது. 1943இல் நிர்மாணிக்கப்பட்ட போது உலகின் மூன்றாவது பெரிய தொங்கு பாலமாக இருந்தது. தற்போது உலகின் ஆறாவது நீளமான தொங்கு பாலமாகும்.
   705மீட்டர் நீளமும், 21.6மீ அகலமும் கொண்ட இந்த பாலம் 26,500 மெட்ரிக் டன் எடை கொண்ட மிகவும் வலிமையான உயர்தர ஸ்டீல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் முழுவதும் ஸ்டீல் சட்டங்களை இணைக்க குடையாணிகள் (RIVIT) மட்டுமே பயன் படுத்தப்பட்டுள்ளது. நட்-போல்ட் ஒன்று கூடக் கிடையாது. நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் நேரங்களில் 80,000 ஆயிரம் வாகனங்களின் எடையையும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாதசாரிகளின் எடையையும் ஒருங்கே தாங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு நகரத்தின் எடையைத் தாங்கி கம்பீரமாக இருக்கிறது!
   1973க்கு முன்பு ட்ராம் வண்டிகள் கூட இப்பாலத்தில் சென்றுள்ளது. 2007க்கு முன் இப்பாலத்தில் 12 முதல் 18 சக்கரங்கள் கொண்ட சுமார் 25 டன் சரக்கு ஏற்றிய பெரிய வாகனங்களும் சென்றுள்ளது. இப்பொழுது பெரிய கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
   இருபுறமும் இரண்டு நடைபாதைகள், சைக்கிளில் செல்பவர்களுக்கு தனிப்பாதை என 8 வழிப் போக்குவரத்து வசதி கொண்டது.
   2004இல் 26,500 லிட்டர் அலுமினியம் பெயின்ட் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐந்து லட்சம் ரூபாய் செலவு செய்து முழுமையாக தூய்மைப் படுத்தப்படுகிறது.
   இந்த பாலத்தின் நடுவில் நின்று பார்த்தால் கீழே ஓடும் ஹூக்ளி நதியும் அதில் செல்லும் படகுகளும், பரபரப்பான மக்கள் நடமாட்டத்தையும் பார்த்து ரசிக்கலாம்.
   
  பாந்திரா-வொர்லி கடற்பாலம்
   (BANDRA-WORLI SEA LINK)
   மஹாராஷ்ட்ரத்தின் பாந்திரா-வொர்லி பகுதிகளை இணைக்கும் ராஜீவ் காந்தி கடற்பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான சாலைப் போக்குவரத்து கடற்பாலமாகும். கம்பி இணைப்பு தொங்கு பால முறையில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மொத்த நீளம் 5.6 கி.மீ. ஆகும். நாள் ஒன்றுக்கு சுமார் 37,500 வாகனங்கள் செல்லும் இந்த 8 வழிச் சாலை பாலம் மஹிம் விரிகுடாவினைக் கடந்து செல்கிறது. 1600 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் 2009ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
   
  சிரபுஞ்சி வேர்ப்பாலம்
   மேகாலயா மாநிலத்தின் உலகில் அதிக மழை பொழிவும் சிரபுஞ்சியில்தான் வேர்ப்பாலங்கள் உள்ளது. இப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வேர்ப்பாலம் அமைக்கும் வித்தையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
   இதற்கு முதலில் மரங்களின் தடித்த தண்டு பகுதிகளில் துளையிட்டு அதனுள் வளர்ந்து கொண்டிருக்கும் வேர்களை நுழைத்து, வெளிவரச் செய்கிறார்கள். பின் அதனுடன் தேவைக்கேற்ப குச்சி, கற்கள் முதலியவற்றை பயன் படுத்தி இயற்கை பின்னல்களை உருவாக்கி பாலம் அமைக்கிறார்கள். இந்த உயிருள்ள பாலம் உருவாக பாலத்தின் நீளத்தைப் பொறுத்து 10முதல் 15ஆண்டுகள் வரையாகிறது.
   100அடி நீளம் வரை அமைக்கப்படும் இந்த உயிருள்ள பாலம் நாளடைவில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வதுடன் நன்கு வலுப்பெற்றும் விடுகிறது. இந்த வேர்ப்பாலங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது.
   
  பாம்பன் பாலம்

   இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பாக் ஜலசந்தியில்தான் 67ச.கி.மீ. பரப்பளவு கொண்ட பாம்பன் தீவு உள்ளது. இத்தீவில்தான் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் முதலிய ஊர்கள் உள்ளன. இராமநாதபுரம் மண்டபம் பகுதியையும், இத்தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் ரயில் பாலம் மற்றும் பாம்பன் கடல் சாலைப் போக்குவரத்துப் பாலம் என இரண்டு பாலங்கள் உள்ளன.
   
  பாம்பன் ரயில் பாலம்
   2065மீ. நீளம் கொண்ட இப்பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடல் ரயில் பாலமாகும். 24 பிப்ரவரி 1914இல் திறப்பு விழா கண்ட இப்பாலத்தின் இருபுறமும் உள்ள முக்கிய தூண்கள் 220அடி உயரம் கொண்டவை!
   தொடக்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தது. 2007இல்தான் அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. இப்பாலம் கப்பல்கள் செல்ல வசதியாக நடுப்பகுதியை உயரத் தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
   இந்த கடல் பகுதி உலகின் மிக விரைவாகவும் அதிகமாகவும் இரும்பு துருப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் இரண்டாவதாக உள்ளது. மேலும் கடல் கொந்தளிப்பு அதிகம் உள்ள இடமாக இருந்த போதிலும் நூறு ஆண்டுகளை கடந்தும் வலுவுடன் இந்த இரும்புப் பாலம் உள்ளது. 1964ஆம் ஆண்டு இத்தீவுப் பகுதிக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்திய தனுஷ்கோடி புயலையும் சமாளித்து வலுவுடன் கம்பீரமாக நிற்கிறது.
   இப்பாலம் 2014இல் நூற்றாண்டு விழாவும் கொண்டாடி விட்டது.
   
  பாம்பன் சாலைப் போக்குவரத்துப் பாலம்.

   2 அக்டோபர் 1988இல் திறந்து வைக்கப்பட்ட இந்த பாலம்தான் இந்தியாவின் முதல் கடல் சாலைப் போக்குவரத்துப் பாலமாகும். தற்போது கடல் மீது அமைந்த இந்தியாவின் இரண்டாம் நீளமான பாலமாகும். 2.3கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இருவழி சாலைப் போக்குவரத்து வசதி கொண்டது. இப்பாலத்தின் மீது நின்று பார்த்தால் பாம்பன் ரயில் பாலமும், அருகிலுள்ள தீவுகளையும் கடல் பகுதியையும், அதில் செல்லும் படகுகளையும் சுகமான கடற்காற்றை அனுபவித்தபடி பார்த்து ரசிக்கலாம்.
   
  ராமர் பாலம்
   தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் உள்ளது. சுமார் 30கி.மீ. நீளத்திற்கு அடுத்தடுத்துத் தொடர்ச்சியான அமைப்பில் உள்ள சுண்ணாம்பு கற்கள், மண், பாறைகளால் ஆன மேடுகளை ராமர் பாலம் என்றும் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மேடுகளில் சில கடல் மட்டத்திற்கு மேலேயும், சில கடலுக்குள் ஆழமற்ற பகுதிகளாகவும் அமைந்துள்ளது.
   பல்வேறு அமைப்புகளாலும் இப்பாலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாரார் இதை இயற்கையின் நில அமைப்பு என்றும், மற்றும் சிலர் 3500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் அமைக்கப்பட்டது என்றும் சொல்லுகிறார்கள். இந்த மணல் மேடுகள்தான் ராமர் சீதையை மீட்க இலங்கை சென்றபோது கட்டிய பாலத்தின் எஞ்சிய பகுதி என்றும் சொல்லப்படுகிறது.
   இந்திய அரசின் சேது சமுத்திர திட்டத்தில் தனுஷ்கோடிக்கு அருகில் இப்பாலத்தின் ஒரு பகுதியைத்தான் ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாகச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
   
  மாத்தூர் தொட்டிப் பாலம் (MATHUR AQUEDUCT)
   இரண்டு உயரமான இடங்களுக்கு இடையே நீரைக் கொண்டு செல்வதற்காக கட்டப்படும் வாய்க்கால் போன்ற அமைப்புதான் தொட்டிப் பாலம் என்று அழைக்கப்படுகிறது.
   மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது என்பதை ஏற்கனவே "கருவூலம்' பகுதியில் பார்த்தோம். ஆசியாவிலேயே மிகப் பெரிய தொட்டிப் பாலம் இதுதான்! இந்தப் பாலம் காடாக இருந்த மாத்தூர் பகுதியில் கணியன் பாறை என்ற மலைக்கும், கூட்டுவாயுப் பாறை என்ற மலைக்கும் இடையில் பரளியாற்றுத் தண்ணீரை கொண்டு செல்வதற்காகக் கட்டப்பட்டுள்ளது.
   இருமலைகளை இணைக்கும் இந்த பாலமானது 1240அடி நீளமும், 7.5 அடி அகலமும், தரையிலிருந்து 104அடி உயரமும் கொண்டது. இந்த பாலத்தை 32அடி சுற்றளவு கொண்ட 28தூண்கள் தாங்கி நிற்கிறது. 40 அடி இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள இத்தூண்களில் சில மலை மீதும், சில கீழே ஓடும் பரளியாற்றின் மீதும் அமைந்துள்ளது.
   பெரிய பெரிய தொட்டிகளை தொகுத்தது போன்ற இந்த பாலத்தின் தண்ணீர் செல்லும் பகுதி 7அடி உயரமும், 7.5அடி அகலமும் கொண்டது. சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாலத்தின் மீது ஏறிச் சென்று தண்ணீர் பாலத்தின் வழியாக ஓடுவதைப் பார்க்க முடியும். கோடை காலத்தைத் தவிர பிற சமயங்களில் பெரும்பாலும் தண்ணீர் ஓடும் இப்பாலத்தின் மீது ஏறி தண்ணீர் ஓடுவதையும், சுற்றிலும் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் கீழே ஓடும் பரளியாற்றையும் கண்டவர்கள் இந்த இடத்தை மறக்கவே மாட்டார்கள்.
   
  சுலோச்சன முதலியார் பாலம்
   இந்தப் பாலம் திருநெல்வேலிக்குப் புகழ் சேர்க்கும் சரித்திரம் கொண்டது. 1830களில் கோடை
   காலத்தைத் தவிர பிற மாதங்களில் தாமிரபரணியில் 840அடி அகலத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். திருநெல்வேலி-பாளையங்கோட்டை மக்கள் படகு மூலம்தான் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை. இதனால் அன்றாடம் பல்வேறு பிரச்னைகள் சமூக விரோதிகளால் எழுந்தது. இதனால் இரு பகுதிகளின் பொது அமைதியும் பாதிக்கப்பட்டது.
   இந்நிலையில் 1836இல் கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் என்ற ஆங்கிலேயர் பாலம் கட்டினால் பிரச்னைகள் தீரும் என்று கருதினார். இவருக்குப் பின் பதவிக்கு வந்த ஈ.பி.தாம்ஸன் பாலம் கட்ட ஆவன செய்தார். அந்நாட்களில் சுலோச்சன முதலியார் என்ற செல்வந்தர் சீராஸ்தாராக பணியாற்றி வந்தார்.
   பாலம் கட்ட அன்றைய மதிப்பில் 50ஆயிரம் ரூபாய் தேவை என கணக்கிடப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையை எப்படித் திரட்டுவது என நிர்வாகம் திகைத்தபோது சுலோச்சன முதலியார் தனக்கு சொந்தமான பொன், பொருட்களை தானே முன் வந்து கொடுத்தார். இதனைக் கொண்டு சுமார் 7ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
   
  பாலத்தின் அமைப்பு
   லண்டன் தேம்ஸ் நதியிலுள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டது. 760அடி நீளமும், 21.5அடி அகலமும் கொண்ட இப்பாலம் 60அடி விட்டம் கொண்ட 11 வளைவுகளுடன் கம்பீரமான அழகுடன் அமைக்கப்பட்டது.
   1843ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்ட இப்பாலம் இன்று வரை சுலோச்சன முதலியார் பாலம் என எல்லோராலும் அழைக்கப்படுகிறது. தாமிரபரணி ஆற்று பாலங்களிலேயே இதுதான் போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்டது. 173 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம்தான் திருநெல்வேலி நகரத்தையும், பாளையங்கோட்டையையும் இணைத்தபடி வலிமையுடன் நிற்கிறது.
   
   தொகுப்பு: கே.பார்வதி,
   திருநெல்வேலி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai