Enable Javscript for better performance
இளமையில் வெல்!- Dinamani

சுடச்சுட

  

  இளமையில் வெல்!

  By DN  |   Published on : 09th July 2016 04:08 PM  |   அ+அ அ-   |    |  

  15

  எட்மண்ட் தாமஸ் கிளின்ட்
   தென்னை மரத்தின் மட்டையானது ஆறுமாதம் மட்டுமே மரத்தில் இணைந்து இருக்கும். ஆறுமாதம் கழிந்த பிறகு விழுந்து விடும்! ஆனால் அந்த மரம் அழிந்து போகும் வரை தன் அழியாத தடத்தை வளையங்கள் வடிவில் விட்டுச் செல்லும்.
   அதுபோல் சிலர் வாழ்ந்து மறைந்த பின்னரும் இந்த உலகில் அழியாப் புகழ் என்னும் தடத்தை விட்டுச் செல்கின்றனர்! அவர்களது படைப்புகள் காலங்கள்தோறும் அவர்களது சாதனைகளை எடுத்துச் செல்கின்றன. இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் துவங்கும்போது முதல் சாதனையாளராக நான் எழுதியது "எட்மண்ட் தாமஸ் கிளின்ட்' அவர்கள் பற்றித்தான்!
   நீங்கள் திருவனந்தபுரத்திற்குச் சென்றால் கட்டாயம் பார்க்க வேண்டியது அங்குள்ள "ஆர்ட் கேலரி'யையும்தான். ஓவியர் ரவிவர்மா மற்றும் பிறரின் ஓவியங்கள் இருந்தாலும், "எட்மண்ட் தாமஸ் கிளின்ட் வரைந்த ஓவியங்களைக் கட்டாயம் பார்க்க வேண்டும்.
   அவருக்கு வாழ ஆசீர்வதிக்கப்பட்ட வயது 7 மட்டுமே! ஆனால் இந்த இளம் ஓவியர் வரைந்தவையோ 20,000 ஓவியங்களுக்கு மேல்!! வெறும் கிறுக்கல்கள் அல்ல! ஒரு கை தேர்ந்த ஓவியரின் கை வண்ணம் இவரது ஒவ்வொரு சித்திரத்திலும் வெளிப்படுகிறது.
   கேரள மாநிலம் கொச்சியில் 19-5-1976ஆம் ஆண்டு "கிளின்ட்' பிறந்தார். அவரது தந்தை எம்.டி.ஜோஸஃப், ஹாலிவுட் நடிகர் "கிளின்ட் ஈஸ்ட்வுட்'டின் தீவிர ரசிகர்! ஆகவே தன் மகனுக்கு "கிளின்ட்' என்று பெயர் வைத்தார். கிளின்டுக்கு இரண்டு வயதானபொழுது அவரது இரு சிறுநீரகங்களும் பழுதடையத் தொடங்கின. தன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப இயலாத அவர் தந்தை வீட்டிலேயே அவருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார்.
   மூன்று வயதில் வண்ணங்களைக் குழைத்து காகிதத்தில் தீட்டிய கிளின்ட் அதிலேயே ஆழ்ந்து போனார். அவர் தாறுமாறாய் காகிதத்தில் தீட்டிய வண்ணக் கலவை வானவில்லை நினைவு படுத்தியது. சாக்குக் கட்டிகள், கிரேயான்கள், நீர் வண்ணம் மற்றும் ஆயில் வண்ணம் என எல்லா முறைகளையும் கொண்டு அவர் படம் வரைந்தபடியே இருந்தார்! 5வயதில் அவர் ஒரு முழுமையான ஓவியராக வளர்ச்சி பெற்றிருந்தார்.
   இந்துக்களின் பண்டிகைகளை வரைவதில் அவர் ஆர்வம் மிக்கவராக இருந்தார். 18வயதுக்கு உட்பட்டோருக்கு என ஓவியப்போட்டி ஒன்று கேரளாவில் நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்ற கிளின்ட் முதல் பரிசு பெற்றார்! அப்போது அவருக்கு 5வயது மட்டுமே! அந்த ஓவியத்தை முதல் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்த நீதிபதிகளால் நம்பவே முடியவில்லை! அந்த ஓவியம் 5வயதுச் சிறுவனால் வரையப்பட்டதென்று! கிளின்ட் அவர்களுக்கு எதிரிலேயே வேறொரு ஓவியத்தை வரைந்து காட்டினார். அனைவரும் பிரமித்துப் போயினர்!
   தனது ஏழாவது பிறந்த நாளுக்கு ஒரு மாதம் முன்னரே அதாவது 15-4-1983 அன்று தனது தீவிர சிறுநீரகக் கோளாறால் இந்த உலகை விட்டு மறைந்தார்!
   கேரள மாநிலத்தின் ஆவணப் படத்தயாரிப்பாளர் சிவக்குமார் என்பவர் கிளின்டின் வாழ்க்கையையும் அவரது படைப்புகளையும் ஒரு ஆவணப்படமாகத் தயாரித்தார். அது சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதற்கு ஒரு படி மேலே போய் பிரேசில் நாட்டில் தங்கியிருந்த ஹாலிவுட் நடிகர் "கிளின்ட் ஈஸ்ட் உட்' டுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அத்திரைப்படத்தால் மனம் நெகிழ்ந்த அவர், தன் கைப்பட அவர் பெற்றோர்களுக்கு ஆறுதல் கடிதம் எழுதி அனுப்பினார்.
   "கிளின்ட் நிறங்களுடே ராஜகுமாரன்' என்னும் வாழ்க்கை வரலாறு "செபாஸ்டின் பள்ளித்தோட்' என்பவரால் எழுதப்பட்டது. கிளின்ட்டின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 2007ஆம் ஆண்டு "ஆனந்த பைரவி' என்னும் மலையாளப்படம் தயாரிக்கப்பட்டது. கொச்சியின் மிகப் பெரிய சாலை ஒன்றிற்கு இவர் நினைவாக "கிளின்ட் ரோடு' என்று பெயரிடப்பட்டுள்ளது.
   20,000க்கும் மேற்பட்ட இவரது படைப்புகளைப் பாதுகாக்க விரும்பிய கேரள அரசாங்கம் டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்தி சேமித்துள்ளது. இவரது படைப்புகள் யாவும் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களுக்கு அடுத்தபடியாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் இவரது படைப்புகளைப் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
   இவரது நினைவாக கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் "எட்மண்ட் தாமஸ் கிளின்ட் நினைவு ஓவியப் போட்டிகள்' நடத்தப்படுகின்றன. கேரள மக்கள் இவரை ஓவியர் ரவிவர்மாவின் மறுபிறப்பாகக் கருதுகின்றனர். பிஞ்சாய் மறைந்தவர் நெஞ்சில் நிறைந்தார்! இறவாப் புகழ் பெற்ற இவரது படைப்புகளை அடுத்த முறை திருவனந்தபுரம் செல்லும்பொழுது மறக்காமல் கண்டு களிப்பீர்களா?
   தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
   கடுவெளி.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai