சுடச்சுட

  
  12

  "அவளை அடிக்காதேன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்க மாட்டியா டா'' என்று கத்திக் கொண்டே ராகவை நோக்கி அம்மா வேகமாக வந்தாள்.
   ""மாட்டேன்....'' என்று தெனாவெட்டாக பதில் சொல்லிவிட்டு, வேகமாகப் பறந்தான் ராகவ்.
   பொதுவாக, ராகவ் நல்ல பையன். படிப்பிலும், விளையாட்டிலும் திறமையானவன். அப்பா, அம்மா, அக்கா என்று எல்லோருக்கும் மரியாதை தருவான். ஆனால், அவர்களது வீட்டோடு இருக்கும் மாலதி அத்தையைக் கண்டால் மட்டும் அவனுக்குப் பிடிக்காது.
   மாலதி அத்தை பார்ப்பதற்கு புத்தி சுவாதீனம் குறைந்தவளாகத் தெரிவாள். அதனால், அவளை வெளி நபர்கள் எல்லாம் கிண்டல் செய்வார்கள். ஆனால், மாலதியின் நல்ல குணங்களை வீட்டில் இருப்பவர்கள் தெரிந்து வைத்திருந்ததால், அவர்கள் மதித்தார்கள்.
   தொடக்கத்தில், மாலதியை ராகவுக்கும் பிடிக்கும். அவளுக்கும் ராகவ் என்றால் உயிர். அவனை ஆசையுடன் கொஞ்சுவாள். ஆனால், மற்றவர்கள் மாலதியை கிண்டல் செய்வதைப் பார்த்து, ராகவும் கிண்டல் செய்துவந்தான்.
   நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாலதியை சீண்டுவது, கிள்ளுவது, அடிப்பது என்று தொந்தரவு கொடுத்தான். அவள் வலி தாங்காமல் அலறுவாள். சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள், ராகவ் சிட்டாகப் பறந்துவிடுவான்.
   இந்த விஷயத்தில் பெரியவர்களின் பேச்சை அவன் கேட்பதாக இல்லை. இதனால், கோபப்பட்டு திட்டினாலோ, அடித்தாலோ அந்தக் கோபத்தையும் மாலதியிடமே காட்டுவான்.
   ஒருமுறை வீட்டில் பெரியவர்கள் அனைவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார்கள். ராகவுக்கு தேர்வு நேரம் என்பதால், அவனையும், மாலதி அத்தையையும் மட்டும் வீட்டில் விட்டு சென்றார்கள்.
   ""மாலதி அத்தையையும் கூட்டிட்டு போங்க'' என்று ராகவ் சொல்லிப் பார்த்தான். ஆனால், உறவினர் வீட்டின் நிலைமை கருதி மாலதியை அழைத்துப் போகவில்லை. எனவே, ராகவும், அவனது அத்தையும் வீட்டில் இருந்தார்கள்.
   இந்த நேரத்தில், வீட்டில் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே இருந்ததை கவனித்த இரண்டு திருடர்கள், வீட்டைக் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டினார்கள். இரவு நேரத்தில் தெருவில் இருந்த வீடுகளின் விளக்குகள் அணைந்த பிறகு, ராகவின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
   சத்தம் கேட்டு ராகவ் எழுவதற்குள், அவனை இரண்டு திருடர்களும் நன்றாக அடித்து கட்டிப் போட்டார்கள். அவர்கள் அடித்த அடியில், ராகவ் மயங்கிவிட்டான். திருடர்கள் கொள்ளையடிக்கத் தொடங்கினார்கள்.
   இதற்குள், சத்தம் கேட்டு மாலதி விழித்துவிட்டாள். வீட்டிற்குள் திருடர்கள் இருந்தது அவளுக்குத் தெரிந்தது. ""யாராவது திருடன் வந்தால், மிளகாய் பொடியை எடுத்துக்கோ'' என்று என்றைக்கோ பாட்டி கற்றுக் கொடுத்திருந்தாள். அதை மாலதி சரியான நேரத்தில் உபயோகித்தாள்.
   இருட்டிலேயே சமையல் அறைக்குச் சென்று மிளகாய் பொடியை எடுத்தாள். மாலதி வருவதைப் பார்த்து திருடர்கள் சுதாரிப்பதற்குள், அவர்கள் மீது மிளகாய் பொடியை வீசிவிட்டாள். அதனால், திருடர்கள் அலறித் துடித்தனர். அதற்குள், மாலதி, ""ராகவ்...'' என்றும், ""திருடன்'' என்று கத்தி அழத் தொடங்கினாள்.
   இரவு நேரத்தில் மாலதி பெருங்குரல் எடுத்து கத்தத் தொடங்கியதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராகவின் வீட்டுக்கு வந்தனர். அங்கு ராகவ் கட்டப்பட்டு, மயக்கநிலையில் இருந்ததையும், திருடர்கள் கண்களைக் கசக்கி அலறித் துடிப்பதையும் கவனித்தனர். பக்கத்து வீட்டினர் வேகமாக செயல்பட்டு திருடர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
   ராகவ் கண் விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் படுத்திருந்தான். அங்கிருந்த செவிலியருக்கு தன்னை காப்பாற்றியதற்காக நன்றி கூறினான். அதற்கு அவர், ""உங்க அத்தைதான் உன்னையும், உன் வீட்டையும் காப்பாத்தினாங்க. பரவாயில்லையே.... பார்க்க ஒருமாதிரி இருந்தாலும், தைரியமாக இருக்காங்களே?...'' என்று மாலதி அத்தையைப் புகழ்ந்து தள்ளினார்.
   ராகவ் தன்னுடைய தவறுகளை உணர்ந்தான். மாலதி அத்தையைக் கூப்பிட்டு, ""என்னை மன்னிச்சுருங்க அத்தை... என்னை காப்பாத்தினதுக்கு நன்றி'' என்றான். அவளோ, எதுவும் புரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு, ""ராகவ் கண்ணு...'' என்று கூறியபடி, அவனது தலையைத் தடவி கொடுத்தாள்.
   இனி யாரையும் உருவத்தை வைத்து எடை போடக் கூடாது என்று ராகவ் முடிவு செய்து கொண்டான்.
   -சந்திர. பிரவீண்குமார்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai