சுடச்சுட

  
  kadai

  அழகு நிறைந்த சித்தார்த்தன்

  அன்பின் வடிவாய் விளங்கியவன்!

  கபில வஸ்து அரண்மனையின்

  கருணை கொண்ட இளவரசன்!

   

  அரண்மனை நந்த வனத்தினிலே

  அழகிய இயற்கையில் மனம் மகிழ்ந்தான்! - ஓர்

  அன்னப் பறவை அம்புடனே

  அங்கே வீழ்ந்தது... மனம் துடித்தான்!

   

  கையில் எடுத்தான்... குருதியினைக்

  கண்டதும் இதயம் பதறியது!

  மெதுவாய்த் துடைத்தான் துணியாலே

  மூலிகைச் சாற்றைக் காயத்தில்

   

  மருந்தாய் இட்டான் அன்புடனே!

  மயங்கிய அன்னம் நினைவு பெற...

  மலர்ந்தன அதனது இரு கண்கள்!

  மகிழ்ந்தான்.. நெஞ்சில் அரவணைத்தான்!

   

  அங்கே வந்தான் தேவதத்தன்...

  அண்டையில் வாழ்பவன்.. உறவினனாம்..!

  அம்பை எய்தவன் நானாவேன்

  அதனால் அன்னம் எனதென்றான்...!

  இறந்திருந்தால் அது உனதாகும் - உயிர்

  இருந்தது... காத்தேன்... எனதாகும் - இதில்

  உனக்கு உரிமை ஏதுமில்லை! - ஓர்

  உயிரை வதைப்பது நியாயமில்லை!

   

  உரிமையை விட்டுத் தரமாட்டேன்

  உண்மையை அறிய நீதிமன்றம்

  உடனே வருவாய் என்னுடனே!

  என்றான்.. சென்றார் அம்மன்றம்!

   

  உயிரைக் கொல்ல ஓடுபவன்

  உரிமை கோருதல் முறையில்லை!

  உயிரைக் காக்கும் உத்தமனே - அந்த

  உயிருக்கு உரியவன் ஆகின்றான்!

   

  இதுதான் மன்றத் தீர்ப்பாகும்

  எல்லோர் உள்ளமும் போற்றியது!

  இளவல் அடைந்தான் பெருமகிழ்ச்சி!

  இவன்தான் பின்னர் புத்தமகான்!

   

  -பூதலூர் முத்து

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai