சுடச்சுட

  

  ஒரு சமயம் பிரம்மதத்தர் என்பவர் காசியை ஆண்டு வந்தார். அவருக்கு உதவியாக ஒரு அமைச்சர் இருந்தார். அவர் பெயர் போதிசத்துவர். அவர் எல்லாத் துறைகளிலும் சிறந்தவராக இருந்தார்.

  ஒரு சந்தர்ப்பத்தில், அந்த நாட்டு எல்லையில் சிறு பிரச்னை ஒன்று ஏற்பட்டது. அதை அறிந்த அரசர், உடனே தம் படைகளுடன் அங்கே விரைந்தார். அங்கேயே பாசறை அமைத்துத் தங்கினார்.

  நேரம் செல்லச் செல்ல எல்லோருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. அரசருடன் வந்த குதிரைகளும் பசியால் வாடின.

  உடனே வீரர்கள் பட்டாணியைக் கொண்டு வந்தனர். அதை வேகவைத்து, குதிரைகளுக்குக் கொடுத்தனர்.

  அந்த நேரம் பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து குரங்குகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு குரங்கு மட்டும் வேக வேகமாக மரத்திலிருந்து கீழே இறங்கியது. தன் கை நிறைய பட்டாணியை அள்ளியது; மீண்டும் மரத்தில் ஏறியது.

  ஆசை ஆசையாகப் பட்டாணியை உண்ணத் தொடங்கியது குரங்கு. அது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் கையில் இருந்து ஒரு பட்டாணி கீழே விழுந்தது.

  ""ஐயோ! ஒரு பட்டாணி விழுந்து விட்டதே!'

  என்று அது ஆவேசம் கொண்டது. தன் கையில் இருந்த எல்லா பட்டாணிகளையும் கோபத்துடன் கீழே எறிந்தது.

  "தடக்'கென்று மரத்தில் இருந்து குதித்தது குரங்கு. தவறி விழுந்த பட்டாணியை அது தேடத் தொடங்கியது. ஆனால், அந்தப் பட்டாணி கிடைக்கவே இல்லை.

  சோகத்துடன் மீண்டும் அந்தக் குரங்கு, மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டது.

  இவற்றை எல்லாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் அரசர். உடனே, தன் அருகில் இருந்த அமைச்சரை அழைத்தார்.

  ""இவ்வளவு நேரம் நீங்களும் குரங்கின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களே...! அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

  ""ஒரே ஒரு பட்டாணிக்காக, கையில் இருந்த பல பட்டாணிகளை இழந்தது குரங்கு. அதைப்போல் மனிதர்களிலும் சில பேர் சிறிய பொருளுக்காகப் பெரியவற்றை இழக்கிறார்கள்!'' என்றார்.

  அமைச்சரின் பொருள் பொதிந்த கருத்தைக் கேட்டு மகிழ்ந்தார் அரசர். தம் படைகளைத் திரும்ப அழைத்தார். அரண்மனைக்குச் சென்றார்.

  (புத்தர் கூறிய கதை)

  த.சீ.பாலு, சென்னை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai