சுடச்சுட

  
  horse

  சலவைத் தொழிலாளியான சண்முகம், துணிகளைத் துவைப்பதற்கு ஆற்றுத் துறைக்குச் சுமந்து செல்வதற்காக கழுதை ஒன்றை வளர்த்து வந்தார்.

  ஐந்தாம் வகுப்பு படித்து வரும் அவரது மகன் அன்பரசுவும், மூன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் மீனாவும் அப்பாவுக்கு உதவியாகத் துணி மூட்டைகளைத் தூக்கி கழுதையின் முதுகில் வைப்பார்கள். வீட்டிலிருந்து ஆற்றுத் துறைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.

  கழுதை, துணி மூட்டைகளைச் சுமந்துகொண்டு வழக்கமாகச் செல்லும் வழியில் முன்னால் செல்ல, சண்முகம் பின்னால் நடந்து செல்வார். துவைத்த துணிகளை மூட்டையாகக் கட்டி மீண்டும் கழுதையின் முதுகில் வைப்பார். அதுவும் பொறுப்புடன் சுமந்துகொண்டு வீடு வந்து சேரும்.

  அப்படி ஒருநாள் போகும்போது, முன்னால் சென்ற கழுதை காலைத் தூக்கி, கத்திக்கொண்டு திரும்பிப் பார்த்தது.

  ""ஏன் தேங்குறே?'' என்று சொல்லி, கையிலிருந்த கனமான குச்சியினால் அதன் முதுகில் அடித்தார் சண்முகம்.

  கழுதையும் வலி தாளாமல், பயத்துடன் அடியெடுத்து வைத்தது.

  அதை ஓட்டிக்கொண்டு பின்னால் நடந்த சண்முகம், ""ஆ!...'' என்று காலைத் தூக்கினார்.

  அங்கே மூங்கில் முள் கிடந்தது.

  காலைத் தூக்கிப் பார்த்தார். காலில் குத்திய இடம் தெரிந்தது; முள் தெரியவில்லை.

  ஆற்றை அடைந்த சண்முகம், துணிகளைத் துவைத்து மீண்டும் கழுதையின் முதுகில் ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

  காலில் முள் குத்திய வலி தாங்க முடியவில்லை. மனைவியை அழைத்து பாதத்தைக் காட்டினார்.

  அவள் ஊக்கினால் முள் குத்திய இடத்தைக் கிளறிப் பார்த்துவிட்டு, ""உள்ளே முள் இல்லை; குத்திய வலிதான்'' என்றாள்.

  நான்கு நாட்களாகிவிட்டது. சண்முகத்திற்கு முள் குத்திய கால் வீங்கிவிட்டது; நடக்க முடியவில்லை.

  அரசு மருத்துவமனைக்குச் சென்று காட்டியபோது, உள்ளே முள் இருக்கிறது என்று சொல்லி, அறுவைச் சிகிச்சையின் மூலம் முள்ளை வெளியே எடுத்துவிட்டு, மருந்து வைத்துக் கட்டு போட்டுவிட்டார்கள்.

  ஒரு சில நாட்களில் காலில் புண் ஆறிவிட்டது.

  தேங்கிக் கிடந்த துணிகளை ஆற்றுத் துறைக்குக் கொண்டு போவதற்காக கழுதையை எழுப்பினார், சண்முகம்.

  கழுதையால் எழ முடியவில்லை.

  கோபத்துடன் கம்பினால் அடித்தார் சண்முகம்.

  கழுதை கத்திக்கொண்டே புரண்டு புரண்டு படுத்தது. அதனால் எழ முடியவில்லை. அதனைப் பார்த்த அன்பரசுவுக்கும், மீனாவுக்கும் அழுகையே வந்துவிட்டது. அவர்களின் அன்புத் தோழனான அந்தக் கழுதைக்கு என்ன செய்கிறது? என்று சிந்திக்கத் தொடங்கினார்கள்.

  ""அப்பா! நமக்கு கால் வலிக்குதுன்னா... காலிலே என்னென்று நமக்குச் சொல்லத் தெரியும். மருத்துவர்கிட்டே போய் பார்க்கிறோம். கழுதையாலே எழுந்திட முடியலேன்னா... என்னென்னு அதனாலே சொல்ல முடியாதே. அன்னிக்கு உங்க காலிலே முள் குத்தினதுபோல அதுக்கும் குத்தியிருக்கலாம் அல்லவா?'' என்றான் அன்பரசு.

  ""ஆமாப்பா. முள் குத்தினா நமக்கு மட்டும்தான் கால் வலிக்குமா? கழுதைக்கும் கால் வலிக்கும்'' என்றாள் மீனா.

  ""அதுவும் சரிதான். இப்போ என்ன செய்யலாம்?'' என்றார் அப்பா.

  ""இன்னிக்கு எங்களுக்குப் பள்ளி விடுமுறைதான். இருங்க, வர்றோம்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் இருவரும்.

  கால்நடை மருத்துவமனையில் -

  தனக்கு முன்னால் நின்ற அன்பரசுவையும், மீனாவையும் பார்த்த மருத்துவர், ""நீங்க அந்தக் கழுதை மேலே வச்சிருக்கிற பாசம் எனக்குப் புரியது. என்ன செய்யுறது?... கழுதையை நடத்திக்கொண்டு வர முடியாதுன்னு சொல்றீங்க. சற்று காத்து இருங்க. உங்க வீட்டுக்கே வந்து பார்க்கிறேன்'' என்றார்.

  மருத்துவமனையின் அலுவல் நேரம் முடிந்ததும் புறப்பட்டார், அந்த மருத்துவர்.

  கழுதையின் காலைப் பிடித்துப் பார்த்த மருத்துவருக்குப் புரிந்துவிட்டது. முள் குத்தியிருந்த இடத்தைக் கீறி, உள்ளிருந்த முள்ளை வெளியே எடுத்துவிட்டு, மருந்து வைத்து கட்டுப் போட்டுவிட்டு, ""இரண்டு நாட்களில் சரியாகிவிடும்'' என்று சொல்லிவிட்டுப் போனார் மருத்துவர்.

  கழுதைக்கு, கால் சரியாகிவிட்டது.

  வழக்கம்போல் ஆற்றுத் துறைக்குப் போக கழுதையின் முதுகில் துணி மூட்டைகளைத் தூக்கி வைத்தார், அப்பா.

  அன்பரசும், மீனாவும் அப்பாவுக்கு உதவி செய்தார்கள்.

  மூட்டைகளைச் சுமந்துகொண்ட கழுதை, புறப்படத் தயாரானது.

  அன்பரசுவும், மீனாவும் அதன் காலைத் தடவி விட்டு, ""போயிட்டு வா'' என்றார்கள்.

  கண்களில் நீர் துளிர்க்க, பாசத்துடன் அவ்விருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்தது கழுதை!

  -புலேந்திரன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai