சுடச்சுட

  
  7

   இறைவனை நாமும் பார்த்திடலாம்!
   நம்பி என்று ஒரு சிறுவன்
   ஒருதினம் அன்னை தந்தையிடம்
   ஆலயம் சென்று வருவதற்கு
   அனுமதி கேட்டான் ஆசையுடன்
   
   ஆஹா! சரி! எனப் பெற்றோரும்
   அனுமதி வழங்கி மகிழ்வுற்றார்!
   நன்றாய் சாமி கும்பிடவே
   நம்பியும் கிளம்பிச் செல்லுகையில்...,
   
   ...""கோயிலில் உள்ள உண்டியலிலே
   காசு போடு''.... எனச் சொல்லித்
   தாயும், தந்தையும் நம்பிக்குத்
   தந்தனர் காசுகள் கை நிறைய!
   
   கோயிலின் முன்பு வாசலிலே
   கால், கை, கண்களை இழந்தவர்கள்...,
   ...""தாயே! பிச்சை!'' எனக் கேட்டுத்
   தட்டை ஏந்தி நிற்கின்றார்!
   ""எண்ணிலா ஆற்றல் உடையதுதான்
   இறைவன் என்னும் பெரும்சக்தி!
   நமக்கு இறைவன் கொடுப்பதன்றி
   நம்மிடம் எதையும் பெறுவதில்லை!...
   
   ...பசிக்கும் ஏழை வயிறுகள்தான்
   பணத்தைப் போடும் உண்டியல்கள்
   கசியும் கண்ணீர் துடைப்பவரைக்
   கைவிட மாட்டான் இறைவனுமே!''
   
   என்றெண்ணிய நம்பி அவர்களுக்கு
   அளித்தான் இருந்த காசுகளை!
   அவனை இறைவன் காத்திடுவான்.
   அவனுக்கு அருளைத் தந்திடுவான்!
   
   ஏழை சிரிக்கும் சிரிப்பினிலே
   இறைவனை நாமும் பார்த்திடலாம்!
   வாழ்வு சிறக்க வேண்டுமெனில்
   வாரி வழங்கி மகிழ்ந்திடலாம்!
   -நா.இராதாகிருட்டிணன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai