Enable Javscript for better performance
கருவூலம்: காவிரிப் பூம்பட்டினம்!- Dinamani

சுடச்சுட

  

  கருவூலம்: காவிரிப் பூம்பட்டினம்!

  By DN  |   Published on : 23rd July 2016 03:55 PM  |   அ+அ அ-   |    |  

  2

  கருவூலம்
   
   நாகை மாவட்டம் சீர்காழிக்கு தென்கிழக்கே 9 மைல் தொலைவில் சிறு கிராமமாக காட்சியளிப்பது பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பான நகரமே காவிரிப்பூம்பட்டினம்.
   பண்டைய சோழர்களின் தலைநகராக விளங்கிய "புகார்' எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கி.பி.5-ஆம் நூற்றாண்டு வரை வெளிநாட்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. காவிரியாறு கடலில் கலக்கின்ற முகத்துவாரத்தில் அமைந்துள்ள இந்நகரினை "சுவீரபட்டினம்' என பௌத்த நூல் ஒன்று குறிப்பிடுகின்றது. மேலும் இந்நகர் ""காகந்தி'' என்னும் பெயரில் வழங்கப்பட்டதாக ஆய்வாளர் சீனி.வேங்கடசாமி குறிப்பிடுவார்.
   காவிரிப்பூம்பட்டினத்தின் நகர அமைப்பு எவ்வாறு இருந்தது என்பதை இனி பார்ப்போம். காவிரிப்பூம்பட்டினம் "மருகூர்ப்பாக்கம்', "பட்டினப்பாக்கம்' என்னும் இரு பிரிவுகளைக் கொண்டிருந்தது. இப் பிரிவுகளுக்கு இடையில் அடர்த்தியான மரங்களைக் கொண்ட நிலப்பகுதி அமைந்திருந்தது. அங்கு பெரிய கடைத் தெருக்களும் இருந்தன. பட்டினப் பாக்கத்தில் அரசனின் அரண்மனையும், மக்களின் வசிப்பிடங்களும் வழிபாட்டிடங்களும் அமைந்திருந்தன.
   மருகூர்ப்பாக்கத்தில் துறைமுகம், பண்டகச்சாலைகள், அயல்நாட்டு வணிகர்கள் தங்குமிடங்கள், பலவகைத் தொழில் புரிபவர்களின் இருப்பிடங்கள் முதலியன அமைந்திருந்தன.
   பூம்புகார் கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த பாக்கங்களில் வாழ்ந்த மக்கள் மிகுந்த செல்வந்தர்களாக இருந்தனர். அவர்களின் தொழில் உப்பு வணிகம்தான். பூம்புகார் பகுதியில் அமைந்திருந்த உப்பளங்கள் மூலமே அவர்கள் உப்பினை உற்பத்தி செய்தனர். அவர்கள் உள்நாட்டு உப்பு வணிகத்திற்கு காவிரி ஆற்று வழியில் படகுகளைச் செலுத்திச் சென்று வாணிபத்தில் ஈடுபட்டனர்.
   பாக்கங்களில் தோட்டங்கள், பூஞ்சோலைகள் மற்றும் ஏரிகள் இருந்தன என பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் எளியவர்களுக்கு உணவு அளிக்கும் "அட்டிற் சாலைகள்' பல இருந்தன. பல மாட்டுத் தொழுவங்களும், சமண முனிவர்கள் தவம் செய்யும் பள்ளிகளும், பார்ப்பனர் வேள்வி செய்யும் சாலைகளும் இருந்தன. இவ்விடத்திற்கு அடுத்து காளிக் கோட்டமும் இருந்தது என பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் விவரிக்கின்றார்.
   காவிரிப்பூம்பட்டினத்தில் பரதவர்கள் வாழும் புறஞ்சேரிகள் இருந்தன. பரதவர்கள் அங்கு சுறாமீன் கொம்பினை நட்டு வழிபாடு செய்தனர். "ஆவணவீதி' என்ற பகுதியில் பெருவாயில், சிறுவாயில் உடைய மாடங்களைக் கொண்ட வீடுகள் இருந்தன. கோயில் உணவுப்பொருட்கள், கல்வியில் சிறந்த அறிஞர்கள் வாதிடும் இடங்கள், கள் விற்கும் இடம் என ஒவ்வொரு இடத்தினையும் தனித்து அடையாளம் காட்ட வேறு வேறு வண்ணத்தில் கொடிகள் கட்டப்பட்டிருந்த பகுதிகள் அங்கிருந்தன. வணிகர்களுக்காக தனியாக இருந்த தெருக்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொருட்கள் குவிந்திருந்தன. உழவர்கள் தனியான இடத்தில் வாழ்ந்தனர். கடற்கரைப் பகுதியில் மீன் பிடிக்கும் பரதவர்கள் பலர் சிறு வீடுகளில் வாழ்ந்தனர்.
   இவ்வாறாக பட்டினப்பாலையின் மூலம் அன்றைய காவிரிப்பூம்பட்டினத்தின் நில வரைபடத்தைப் புரிந்து கொள்ளலாம். சேர நாடு, குடகு மலைப் பகுதி, தென்கடல், கீழ்கடல் முதலான பகுதிகளில் இருந்து பல்வேறு பொருட்கள் பூம்புகார் துறைமுகத்தில் ஏற்றுமதிக்காகக் காத்திருந்தன. மிளகு, சந்தனம், அகில், முத்து, பவளம் முதலியவை அவற்றில் அடங்கும்.
   மேலும் சீனம், ஈழம் ஆகிய நாடுகளில் இருந்தும் பல பொருட்கள் காவிரிப்பூம்பட்டினத்தின் துறைமுகத்திற்கு வந்து இறங்கின என்பதன் மூலம் இப்பட்டினத்தின் உலக நாடுகளுடனான அதன் வர்த்தகத் தொடர்பு புலப்படும்.
   காவிரிப்பூம்பட்டினமும், உறையூரும் கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டதைப் பட்டினப்பாலை எடுத்துக்காட்டுகின்ற நிலையில், காடுகள் பலவற்றை அழித்தும், குளங்களை உருவாக்கியும், புதிய நிலப்பகுதிகள் மூலம் உறையூரை அவன் விரிவுபடுத்தினான் என்பதையும் குறிப்பிடுகிறது.
   பிற்காலத்தில் உறையூர் தனியாகவும், காவிரிப்பூம்பட்டினம் தனியாகவும் ஆட்சி செய்யப்பட்டது கவனத்திற்குரியதாகும். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக உறையூருக்குச் சென்றால் 175 கி.மீ. தூரமும் காவிரி ஆற்றுப் பகுதி வழியாகச் சென்றால் 150 கி.மீ. தூரமும் இருக்கும். காவிரிப்பூம்பட்டினம் 1090 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 மைல் பரப்புடைய பேரூராய் விளங்கியதெனச் சிலப்பதிகாரம் கூறும்.
   கருவேந்தநாதபுரமும், கடாரங்கொண்டானும் இதன் மேற்கு எல்லையாகவும் திருக்கட்கூர் இதன் தெற்கு எல்லையாகவும் "கலிக்காமூர்' (அன்னப்பன்பேட்டை) இதன் வடக்கு எல்லையாகவும் கடற்பகுதி கிழக்கு எல்லையாகவும் அமைந்திருந்தன என வரலாற்று ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார்.
   மயிலை சீனி வேங்கடசாமி மாறுபட்டுக் கூறுவதைப் பார்ப்போம்! "புகார்' நகரம் 40சதுர மைல் சுற்றளவுள்ள பெரிய நகரம். இப்பட்டினம் நீண்ட சதுர வடிவத்திலிருந்தது என்பதை சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள 5ஆம் காதையின் வழி அறியலாம்!
   "பூம்புகார் நகரம் கிழக்கு மேற்காக நீண்டும் வடக்குத் தெற்காக அகன்றும் உள்ள நில அமைப்பை உடையது' என அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறாயினும் காவிரிப்பூம்பட்டினம் மிகப்பெரிய நிலப்பரப்பாக அன்று இருந்துள்ளது என்பதையே இது காட்டுகின்றது.
   மேலும் கி.மு. 500ஆண்டுகளுக்கு முன்பிருந்து சிலப்பதிகார காலம் வரையில் இப்பகுதியானது மிக முக்கியமான துறைமுக நகரமாக இருந்ததால்தான் தொடர்ச்சியாக இலக்கியங்கள் அதனைப் பதிவு செய்கின்றன. இன்றைய நாகப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள இப்பூம்புகார் நகரம் பண்டைக்காலத்தில் கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டது என்பதை கடல் சார் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
   இன்னும் கடலினுள் இடிந்த கட்டடங்களின் எச்சங்களையும் நகர அமைப்புகளையும் காணமுடிகிறது. இதன் மூலம் சங்க காலத்தில் இருந்த காவிரிப்பூம்பட்டின நிலப்பகுதியின் பல இடங்கள் கடலுக்கு இரையாகி உள்ளது என்பதை அறியலாம். பூம்புகார் பகுதியில் 1901ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழாய்வில் பல உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 1962-67,...1970-71,...72-73ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் மட்கல ஓடுகள், கட்டடப்பகுதியின் செங்கற்கள், அரிய கல்மணிகள், செப்பு நாணயங்கள், ரெளலட் மட்கல ஓடுகள், சுடுமண் பொம்மைகள் முதலானவை கிடைத்துள்ளன. இப்பகுதியில் 40க்கும் மேற்பட்ட தொன்மையான இடங்கள் உள்ளன என்பதை ஆய்வின் வழி அறிய முடிகின்றது.
   காவிரிப்பூம்பட்டினப் பகுதியில் அமைந்துள்ள வானகிரி, நெய்தவாசல் முதலான இடங்களில் அகழாய்வுகள் பல நடந்துள்ளன. மேலும் பூம்புகார் கீழையூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட மேடையும், அதனருகில் ஒரு மூலையில் பாழடைந்த 2 மரத்தூண்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது படகுகள் வந்து நங்கூரம் இட்டுப் பொருட்களை ஏற்றவும், இறக்கவும் பயன்படுத்தப்பட்ட படகுத்துறை என ஆய்வில் கண்டறியப்பட்டது.
   கடலிலிருந்து ஒரு சிறு கால்வாய் மூலம் இப்பகுதி கடலுடன் இணைக்கப்பட்டு உள்ளது. சிறிய படகுகள் கால்வாய் வழியாகச் சென்று நகரில் பொருட்களை ஏற்றிச் செல்ல இந்த மேடைப்பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வின் வழி அறியப்பட்டது.
   மேலும், இங்கு கிடைக்கப்பெற்ற மரத்தூணின் காலம் கார்பன் சோதனையின் மூலம் கி.மு. 315 என கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக "பட்டினப்பாலை' கூறுவதைப் பார்ப்போம். உப்பிற்கு பதில் நெல்லைப் பெற்று அதனை ஏற்றிக்கொண்டு வந்த வலிமையான படகுகள் லாயத்தில் கட்டப்பட்டு நிற்கின்ற குதிரைகளைப் போல கரையிடத்தில் உள்ள மரங்களில் கட்டப்பட்டிருக்கும்!
   அவ்விடத்தில் உப்பங்கழி இருந்தது எனப் பட்டினப்பாலை கூறும் கருத்து இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகும்.
   அதாவது, கீழையூரில் கிடைத்த மரத்தூண்களுடன், பட்டினப் பாலை குறிப்பிடும் படகுகள் கட்டப்பட்டிருந்த மரத்தூண்களை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை புலப்படும். இதன் மூலம் பட்டினப் பாலை இலக்கியம் எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய கி.மு. 315 காலகட்டமோ அதற்கு முன்போ அல்லது அதற்குச் சற்று பிந்தைய காலமாகவோதான் இருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வரலாம்.
   இவ்வாறாக சங்க இலக்கியமும் தொல்லியல் ஆய்வு முடிவுகளும் சரியாக ஒத்துப் போகின்றன. பூம்புகார் நகரத்தின் செழுமையான வரலாறு கடல் மற்றும் நிலத்தில் புதைந்துள்ளதையும் காலவோட்டத்தில் அது மக்களால் மறக்கப்பட்டதையும் நம்மால் நன்கு உணர முடிகிறது.
   
   தொகுப்பு: தங்க. சங்கரபாண்டியன்
   

  kattana sevai