Enable Javscript for better performance
கிட்டுத் தாத்தாவும் பச்சைக் கிளியும்!- Dinamani

சுடச்சுட

  

  கிட்டுத் தாத்தாவும் பச்சைக் கிளியும்!

  By DN  |   Published on : 23rd July 2016 03:33 PM  |   அ+அ அ-   |    |  

  9

  கார்த்திக் அதிர்ந்தான். உடனே இது தாத்தா வேலையாகத்தான் இருக்கும் என்று தாத்தாவைப் பார்த்து கண்டபடி கத்தினான். கூண்டில் ஒரு பறவைகள்கூட இல்லாததைப் பார்த்து ஓ...வென்று அழுதான். "எனக்கு இப்பவே வேணும், கொண்டாங்க' என்று அடம் பிடித்தான். அப்பாவிடம் வேறு வாங்கித்தரச் சொல்லி அழுதான்.
   தாத்தா அவனை உட்கார வைத்து அவனுக்குப் புரியவைத்தார். அவன் அதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை. தாத்தா இப்படிக் கூண்டைத் திறந்து பறவைகளை வெளியே பறக்க விடுவது இது இரண்டாவது முறை!
   வழக்கம்போல் பூங்காவிற்குச் சென்றார் தாத்தா!
   அந்தப் பூங்காவில் உள்ள ஒரு மரத்தில் வாழும் பச்சைக்கிளி ஒன்று இருந்தது.
   தினமும் அந்த மரத்தடியில் உள்ள பெஞ்சில்தான் அந்தத் தாத்தா தன் பேரனை விளையாட விட்டுவிட்டு அமர்ந்து சக நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பார்.
   தாத்தா வருத்தமாய் உட்கார்ந்திருக்கிறாரே என்று யோசித்த அந்தக் கிளி, தாத்தாவின் அருகில் வந்து, ""தாத்தா, உங்களை இரண்டு நாளா நான் கவனிச்சுகிட்டுத்தான் இருக்கேன். ரொம்ப கவலையா இருக்கீங்களே! ஏன்?''
   ""அதை ஏன் கேட்கிற! எல்லாம் என் பேரன் செஞ்ச காரியத்துனாலதான்!'' என்றார் தாத்தா.
   ""அப்படி என்ன செஞ்சுட்டான் அவன்?''
   ""பறவைகளையெல்லாம் வாங்கிவந்து, கூண்டில் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்து, விளையாடிக் கொண்டிருக்கிறான். சுதந்திரமா பறக்கவேண்டிய அதுகள இப்படி அடைச்சுப் போட்டா என்ன செய்யும் பாவம்? கூச்சல் போட்டுக்கிட்டே இருக்குதுங்க. எனக்கோ தூக்கமே போச்சு.''
   ""நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க?''
   ""என்னத்த சொல்றது. அவனுக்கு எப்படி புரிய வக்கிறதுன்னே புரியலே. கடவுள்தான் அவனுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கணும்''.
   
   மறுநாள் காலை.... கார்த்திக்கின் மாமாவிடமிருந்து ஒரு போன் அழைப்பு. ""கார்த்திக்குக்கு இரண்டுநாள் விடுமுறைதானே... எல்லோரும் குடும்பத்தோடு புறப்பட்டு ஊருக்கு வாங்க... அப்படியே கோயில் திருவிழாவையும் பார்த்தமாதிரி இருக்கும்...'' என்று மாமா அழைத்ததும், கார்த்திக்குக்கு மிகவும் குஷியாகிவிட்டது. ""அப்பா, மாமாவோட கிராமத்துக்கு போயிட்டு வரலாம்ப்பா'' என்று நச்சரித்ததும் அவன் அப்பாவும் சம்மதித்தார். அனைவரும் புறப்பட்டு கிராமத்தை வந்தடைந்தனர்.
   மாமாவின் மகன் சரவணனுடன் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் சற்று தொலைவில் வயலில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த பம்ப்செட்டை பார்த்ததும் ஆசையுடன், ""வா... அங்கு சென்று குளிக்கலாம்...'' என்று சரவணனிடம் கூறினான். ""நீ போய் குளித்துக் கொண்டிரு... மாற்றிக் கொள்ள உடைகளும், துவட்டிக் கொள்ள துண்டும் நான் எடுத்து வருகிறேன்...'' என்று கூறிச் சென்றான் சரவணன்.
   பம்ப்செட் தொட்டியில் இறங்கி கும்மாளமாக கார்த்திக் குளித்துக் கொண்டிருந்தான். மோட்டார் இறைக்கும் நீரில் குளிப்பது அருவியில் குளிப்பதுபோல அவனுக்கு சுகமாக இருந்தது. சற்று நேரத்தில் சரவணன் மாற்று உடைகளோடு வந்தான். துணிகளை மோட்டார் ரூமில் வைத்துவிட்டு அவனும் தொட்டியில் இறங்கிக் குளித்தான். இருவரும் கைகளால் தண்ணீரை அடித்து ஆட்டம் போட்டார்கள். சரவணன் கொஞ்ச நேரம் குளித்ததும் ""போதும் கார்த்திக், வா போகலாம்... சாப்பிட பலகாரமெல்லாம் தயாரா இருக்கு...'' என்றான். ""நீ வேணும்னா போய்க்கோ... நான் கொஞ்சநேரம் பொறுத்து வர்றேன்...'' என்றான் கார்த்திக். ""சரி...சரி... சீக்கிரமா வந்துடு... உன் டிரஸ்ஸும், டவலும் மோட்டார் ரூம்ல வச்சிருக்கேன்'' என்று கூறிவிட்டு மோட்டார் ரூமில் உடை மாற்றிக்கொண்டு சரவணன் கிளம்பினான்.÷
   அடுத்த சில நிமிடங்களில் மோட்டார் நின்றுவிட்டது. கார்த்திக் தொட்டியை விட்டு வெளியேறி உடை மாற்றுவதற்காக மோட்டார் ரூமுக்குள் சென்றான். அச்சமயம், மோட்டார் ரூமை பூட்டுவதற்காக வந்த தோட்டக்காரன், கார்த்திக் உள்ளே இருப்பதை அறியாமல் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றான். உடைகளை அணிந்து கொண்டு, தலையைத் துவட்டியபடி திரும்பிய கார்த்திக், கதவு அடைத்திருப்பது கண்டு திடுக்கிட்டு, கதவை இழுத்துப் பார்த்தான். வெளியே பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான். சரவணன்தான் விளையாட்டுக்காக இப்படி செய்கிறான் என்று நினைத்து, "சரவணா... சரவணா... விளையாடாதே... கதவைத் திறந்து விடு...' என்று கத்தினான். பதில் இல்லை... அதிர்ச்சியடைந்து கதவைத் தட்டினான்... கத்தினான்... புதிய இடம் என்பதால் பயத்தில் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. நல்ல வேளையாக சிறிய ஜன்னல் ஒன்று மோட்டார் அறையில் இருந்தது.
   "யாராவது காப்பாத்துங்க... என்று கத்திக் கத்தி தொண்டை வறண்டுபோய் சோர்ந்து உட்கார்ந்து விட்டான் கார்த்திக். அந்தப் பக்கம் ஆள் நடமாட்டமும் இல்லை. அவனைச் சுற்றிலும் பலவிதமான பறவைகள் பறப்பது சிறிய ஜன்னல் வழியே தெரிந்தது. குயில்கள் கூவும் சத்தம் அவனுக்குக் கேட்டது. சுதந்திரமாகப் பறந்து திரியும் பறவைகளின் குக்கூ சத்தம் இனிமையாக ஒலித்தது.
   ஆனால், அந்த சத்தம்.... கூண்டில் மாட்டிக்கொண்ட கார்த்திக்கின் காதுகளில், "மாட்னியா... மாட்னியா... (கூண்டுல)... மாட்னியா... மாட்னியா...' என்று குயில்கள் கூவிக் கூவித் தன்னைக் கேலி செய்வது போல அவனுக்குத் தோன்றியது.
   இரண்டு பச்சைக் கிளிகள் பறந்து வந்து, ஜன்னல் கம்பியில் அமர்ந்து அவனிடம் நலம் விசாரிப்பதுபோல், "கீ...கீ...கீ...' என்றன. அந்தக் கிளிகளைக் கண்டதும், அவனுக்குத் தன் வீட்டில் கூண்டில் அடைத்து வளர்த்த கிளிகளின் நினைவு வந்தது. ""கீ...கீ...கீ... என்று கத்துகிறாயே... ஒரு "கீ' இருந்தால் போதும்... நான் வெளியே வந்து விடுவேன்... மாமா வீட்டில் எல்லோரும் என்னைக் காணாமல் தேடிக் கொண்டிருப்பார்கள்... நான் இங்கே அடைபட்டுக் கிடக்கிறேன் என்று தாத்தாவிடம் சொன்னால் உடனே வந்து என்னைக் காப்பாற்றிவிடுவார்... போங்க... போய் தகவல் சொல்லுங்க...'' என்று அந்தக் கிளிகளிடம் வேண்டினான். கிளிகள் உடனே சிறகை விரித்து வானில் ஒரு வட்டம் அடித்துவிட்டு மீண்டும் வந்து ஜன்னலில் அமர்ந்துகொண்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தன.
   "கிளிகளைக் கூண்டில் அடைத்து நான் வேடிக்கை பார்த்தேன். இப்போது நான் கூண்டில் அடைப்பட்டிருப்பதை கிளிகள் வேடிக்கை பார்க்கின்றனவோ...!'
   என்று நினைத்தான். "பறக்க முடியாத எனக்கே இது துன்பமாக இருக்கிறதே... பறக்கும் சக்தியுடைய பறவைகளை அடைத்து வைப்பது அவற்றுக்கு எவ்வளவு துன்பமாக இருந்திருக்கும்? தாத்தா மீது கோபம் கொண்டோமே... இப்போதுதான் பறவைகளுக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிகிறது. தாத்தாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்... ஊருக்குச் சென்றதும் முதல் வேலையாக கூண்டில் அடைத்து வைத்திருக்கும் பறவைகளை விடுதலை செய்யவேண்டும்...'
   இருட்டத் தொடங்கியது. பயத்தால் அவனுக்கு அழுகையே வந்துவிட்டது.
   ""கார்த்திக்... கார்த்திக்...'' என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். கையில் டார்ச் லைட்டுடன் தாத்தாவும் சரவணனும் ஆளுக்கொரு பக்கமாக அவனைத் தேடிக் கொண்டுவந்தார்கள். ""தாத்தா... நான் இங்கே இருக்கேன்...'' என்ற கார்த்திக்கின் குரல் மோட்டார் அறையிலிருந்து வருவது கண்டு தாத்தா பதறியபடி.... வேகமாகச் சென்று தோட்டக்காரனை அழைத்துவந்து மோட்டார் அறையைத் திறக்கச் செய்தார். சிறைக் கூண்டிலிருந்து விடுதலையான மகிழ்ச்சியுடன் வெளியே வந்த கார்த்திக்கிடமும், தாத்தாவிடமும் தோட்டக்காரன் மன்னிப்பு கேட்டான். ""யார் மீதும் தவறு இல்லை. கார்த்திக்கைக் காணாமல் சற்றுநேரம் தவித்துப் போய்விட்டோம். அதேபோல், சிறையில் சிக்கிக் கொண்ட மாதிரி கார்த்திக்கும் சில மணிநேரம் தவித்துப் போய்விட்டான்'' என்றார் தாத்தா.
   ""சில மணி நேரத்தையே என்னால் தாங்க முடியவில்லையே... பறவைகளை எப்போதுமே கூண்டில் அடைத்தால் அவை எப்படி சந்தோஷமாக வாழமுடியும்? இந்த உண்மையை இப்போது உணர்ந்துவிட்டேன் தாத்தா...'' என்று கூறிய கார்த்திக்கை தாத்தா அன்போடு அணைத்துக்கொண்டார். "கடவுள்தான் இந்த சந்தர்ப்பத்தை உருவாக்கி இவனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறார்' என்று தாத்தா நினைக்கவும்... கோயில் மணி ஓசை "டாண் டாண்' என்று அடித்தது!
   -இடைமருதூர் கி. மஞ்சுளா
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai