சுடச்சுட

  
  6

  மதிப்பு!
   ஒரு சிறிய மளிகைக் கடை.
   அதன் கல்லா பெட்டி எனப்படும் பணம் வைக்கும் மேஜை டிராயரில் இருந்தவை சில ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும்.
   இரவு கடை சாத்திய பின் அதில் இருந்த 100 ரூபாய் தாள் மற்ற 50,20,10 ரூபாய் தாள்கள் மற்றும் காசுகளுடன் பேச ஆரம்பித்தது.
   ""நண்பர்களே.. இங்கே இருப்பவர்களில் எனக்கே மதிப்பு அதிகம். ஆகையால் நானே பெரியவன்!''
   என்றது!
   அப்போது அதை நோக்கி 50 ரூபாய் சொன்னது.
   ""இருக்கலாம் நண்பரே. காலையில் முதலாளி 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கட்ட எடுத்துப் போய்விட்டார். அவர்கள் இருந்தால் நீங்கள் சிறியவரே''
   பத்து ரூபாய் பேசியது! ""இப்போது நான்தான் வெகு ஜன அபிமானம் பெற்றவன். பல வர்த்தகங்களில் நான்தான் அதிகம் புழங்கப் பயன்படுகிறேன் மக்களால். நானே மக்களின் தோழன்!''
   அப்போது ஒரு பழைய ஐந்து ரூபாய் பச்சை நோட்டு ஒன்று மூலையில் கிழிந்தபடி, "".... ..ஹூம்...ஒரு காலத்தில் நான்தான் உன் இடத்தில் இருந்தவன். இப்போ அரிதாகிவிட்டேன்''
   ஒரு மஞ்சள் நிற 5 ரூபாய் காசு கலகலவெனச் சிரித்தது.
   ""பச்சைத்தாளே உனக்குப் பதில்தானே நான் இருக்கிறேன். எனக்கு ஆயுள் அதிகம்''
   ""கொஞ்சம் அமைதியா இருங்கப்பா.... நான்தான் புழக்கத்தில் அதிகம் உள்ளவன்!'' இரண்டு ரூபாய் காசு முழக்கமிட்டது. உடனே ஒரு ரூபாய் காசு சிரித்தபடி, ""நான்தான் உன் இடத்தில் இருந்தேன்!''
   ஒரு ஐம்பது காசு சோகமாக, ""ஹும் என்னைச் சீந்துவாரில்லை. பாக்கி யாரும் தர வேண்டி இருந்தால் போனால் போகிறது என விட்டுச்சென்று விடுகின்றனர்'' எனப் புலம்பியது.
   மூலையில் கிடந்த 25 காசு, ""ஹூம் எனக்கு மதிப்பே இல்லை. காலாவதி ஆகிவிட்டேனே''
   ""சரி, நம்மில் யார் உயர்ந்தவர் என இந்த கல்லாப் பெட்டியிடமே கேட்போமே'' என்றது இருபது ரூபாய்தாள்.
   கல்லாபெட்டி சிரித்தபடி, ""நண்பர்களே.. இதற்கு விடை சொல்வது மிகச் சுலபம். உங்களில் யார் என்னிடம் வருமுன் அதைத் தந்தவரிடம் அவர் உழைப்பால் நேர்மையான வழியில் வந்தவர்களோ அவரே சிறந்தவர். ம்... சொல்! நூறு நீ என்னிடம் வருமுன் எங்கிருந்தாய்?
   ""என்னைக் கொடுத்தவர் நேர்மையான வழியில் என்னைச் சம்பாதிக்கவில்லை'' எனத் தன் தலையைக் குனிந்து கொண்டது.
   சில நாணயங்கள், ""ஹும் நான் பிச்சையாகப் போடப்பட்டவன்...,நான் உண்டியலில் கிடந்தவன்......, நான் ஒரு பெட்டியை உடைத்துத் திருடியவனிடமிருந்து வந்தவன்!''என்றன.
   பல ரூபாய்த் தாள்கள் தாங்கள் வரும் முன் இருந்த இடங்களை ஆராய்ந்து மனம் வெதும்பின.
   அப்போது ஒரு பத்து ரூபாய் மட்டும் கம்பீரமாக எழுந்து, ""நான் ஒரு 70 வயது கிழவியிடம் சுருக்குப்பையில் இருந்தேன். அவள் கடும் வெயிலில் கூடை சுமந்து கீரை விற்று என்னைச் சம்பாதித்தவள்'' என்றது.
   ""தள்ளாத வயதிலும் உழைப்பால் உன்னைச் சம்பாதித்த கிழவியிடம் இருந்து வந்த நீயே உயர்ந்தவன்'' என்றது கல்லாப் பெட்டி.
   மற்ற காசுகளும் நாணயங்களும் அதை கைதட்டி பாராட்டின.
   
   -என்.எஸ்.வி. குருமூர்த்தி

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai