சுடச்சுட

  
  14

  அரவிந்த் சிதம்பரம்!
   அந்தச் சிறுவன் எப்பொழுதும் துறுதுறு என்று இருப்பான். ஒரு நிமிடம் கூட உட்காரவே மாட்டான்! கிரிக்கெட் விளையாடுவது என்றால் அவனுக்கு உயிர்! சமவயது தோழர்கள் யாரும் அவனோடு விளையாடவே முடியாது. காரணம் அவன் அத்தனை வேகமாகப் பந்து வீசுவான்! தன் தாத்தாவைத் தன்னுடன் விளையாடும்படி வற்புறுத்துவான்!
   தாத்தாவுக்கு இவனை ஒரு இடத்தில் உட்கார வைத்தால் போதும் என்று ஆகிவிட்டது! என்ன செய்யலாம் என்று யோசித்தார். தன் வீட்டிலிருந்த ஒரு பழைய செஸ் போர்டையும் அதன் காய்களையும் காட்டி அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காய்களையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கொஞ்சம் கொஞ்மாக அந்த ஆட்டத்தின் மீது ஈர்க்கப் பட்டான். அதில் திறமையும் பெற்றான்.
   ஆண்டுகள் கழிந்தன. புதுதில்லியில் உள்ள "லாட்வியன்' தூதரகத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெறவிருந்த "ரிகா செஸ் போட்டி'யில் (RIGA CHESS CHAMPIONSHIP) பங்கேற்க விசா நேர்காணலுக்காக அந்தச் சிறுவனும் அவனது தாய் தெய்வானையும் காத்திருந்தனர்.
   விசாவைப் பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தனர் இருவரும்! ஆனால் செஸ் போட்டிகளில் அச்சிறுவன் புரிந்த சாதனைகளைப் பற்றி அறிந்த தூதரக அதிகாரிகள் "அடுத்த விஸ்வநாதன் ஆனந்த்' என்று அழைத்து விசாவும் உடனே வழங்கினர்!
   அவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த "அரவிந்த் சிதம்பரம்' ஆவார். அவருக்கு மூன்று வயது ஆனபொழுது அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் திருமதி தெய்வானை ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராகப் பணி புரிகிறார். அவர்களது குடும்பம் மதுரையில் வசித்து வந்தது. அரவிந்த் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் நடைபெற்ற பல போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றார்!
   செஸ் விளையாட்டில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் கண்ட சென்னையில் வசிக்கும் கிராண்ட் மாஸ்டர், ஆர்.பி.ரமேஷ், தான் நடத்தி வரும் "சென்னை குருகுல் செஸ் அகாடெமி' மூலம் அவருக்கு இலவசப் பயிற்சி அளிக்க விரும்பினார். எனவே அரவிந்த் சிதம்பரத்தின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது.
   1-5-2014 அன்று சென்னையில் உலக சாம்பியன் போட்டிகள் நடைபெற்ற பொழுது, "கிராண்ட் மாஸ்டர் ஓபன்' போட்டி நடைபெற்றது. அதில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களுள் ஒருவராகிய "லலித் பாபு' என்பவரை வென்று பட்டம் வென்றார் அரவிந்த்! இவர் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார்! 14 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்லோவேனியாவில் 2012ஆம் ஆண்டு நடைபெற்றது!
   அதில் அவர் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்! இவருக்கு சர்வதேச கிராண்ட் மாஸ்டர் "கேரி காஸ்பரோவ்' பரிசு வழங்கி கெüரவித்தார்!
   இவர் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகள் வென்றுள்ளார்.
   இவர் "சர்வதேச கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற இன்னும் சில தர வரிசைப் புள்ளிகளே இருக்கின்றன!
   இவர் மேலும் வெற்றிகள் பல பெற்று பெருமை பெற நாமும் வாழ்த்துவோம்!
   
   தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
   கடுவெளி.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai